கோடி-கோடியா ரூபாயை கொட்டினாலும் அடுத்த மாசம் இந்த கார்கள் கெடைக்காது! இப்பவே வாங்கினா மட்டும்தான் உண்டு!
மார்ச் மாத இறுதியுடன் ஒரு சில கார் மாடல்கள் இந்தியாவிற்கு டாடா காட்ட இருக்கின்றன. அதாவது, பெட்டிப் படுக்கைகளைக் கட்டிக் கொண்டு நாட்டை விட்டு வெளியேற இருக்கின்றன. ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அமலுக்கு வர இருக்கும் 'பிஎஸ்6 கட்டம் 2' புதிய விதிகளே இதற்கு காரணமாக இருக்கின்றது.
இந்த விதியின் காரணமாக பல கார் மாடல்கள் சந்தையை விட்டு வெளியேற உள்ளன. இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடல்களாக இருப்பவையும் சந்தையை விட்டு வெளியேற்றப்பட உள்ளன என்பது கவனிக்கத்தகுந்தது. ஆனால், நாம் இந்த பதிவில் டாப் ஐந்து கார் மாடல்களின் லிஸ்டையே பார்க்க இருக்கின்றோம்.

காற்று மாசுபாட்டைக் கருத்தில் கொண்டே அரசு புதிய விதியை நாட்டில் அமல்படுத்த இருக்கின்றது. காற்று மாசுபாடு பெரும் தலைவலியை ஏற்படுத்தும் வகையில் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதன் விளைவாக சில கடினமான நடவடிக்கைகளை அரசு முன்னெடுத்து வருகின்றது. அதில் ஒன்றே புதிய பிஎஸ்6 கட்டம் 2. சரி இந்த விதியால் நாட்டை விட்டு வெளியேற இருக்கும் கார் மாடல்கள் பற்றிய பட்டியலைப் பார்க்கலாம், வாங்க.
மாருதி சுஸுகி ஆல்டோ800, இந்தியர்களின் ஃபேவரிட் கார் மாடலாக இது இருக்கின்றது. பட்ஜெட் பத்மநாபன்களாக இருக்கும் நடுத்தர மக்கள் அதிகம் விரும்பும் கார் மாடல் என்றும் ஆல்டோ 800-ஐ கூறலாம். புதிய பிஎஸ் 6 கட்டம் இரண்டின் காரணமாக இந்திய சந்தையை விட்டு வெளியேற இருக்கும் கார் மாடல்களில் இதுவும் ஒன்று என கூறப்படுகின்றது. இந்த காரை புதிய விதிக்கு ஏற்ப தயாரிக்கும்போது அதன் உருவாக்க செலவு பலமடங்கு அதிகரிக்கும்.
இது காரின் விலையை அதிகரிக்கச் செய்துவிடும். இந்த நிலை வங்குபவர்களைத் தயங்கச் செய்யும். "இந்த காரை இவ்வளவு கொடுத்து வாங்க வேண்டுமா என்கிற எண்ணத்தை அனைவருக்கும் ஏற்படுத்தலாம்". இந்த காரணத்திற்காகவே மாருதி சுஸுகி ஆல்டோ 800 ஹேட்ச்பேக் காரை வெளியேற்ற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. விரைவில் அது வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
ஹோண்டா டபிள்யூஆர்வி, இந்தியாவின் பிரபலமான சப்-காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால், கடந்த சில மாதங்களாக இக்காருக்கு கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பு பலமடங்கு குறைந்து காணப்படுகின்றது. ஆகையால், ஹோண்டா இக்கார் மாடலை வெளியேற்றலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதன் வெளியேற்றத்தால் ஏற்படும் வெற்றிடத்தை நிரப்ப வேறு ஏதேனும் புதிய கார் மாடல் அல்லது இதன் அப்டேட் வெர்சனை நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
உலக சந்தையில் ஏற்கனவே புதிய தலைமுறை டபிள்யூஆர்வி விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதுவே இந்திய சந்தைக்கு விற்பனைக்கு வரலாம் என எதிர்பாரக்கப்படுகின்றது. இப்போது விற்பனையில் இருக்கும் டபிள்யூஆர்வி பெட்ரோல் மற்றும் டீசல் என இரு விதமான மோட்டார் ஆப்ஷனிலும் விற்பனைக்குக் கிடைக்கின்றது. ரூ. 9.11 லட்சம் தொடங்கி ரூ. 12.31 லட்சம் வரையிலான விலையில் இது விற்கப்படுகின்றது. அனைத்து எக்ஸ்-ஷோரூம் விலைகள் ஆகும்.
ஹோண்டா ஜாஸ், ஹோண்டா நிறுவனம் அதன் டபிள்யூஆர்வி மாடலை போலவே இந்த கார் மாடலையும் இந்தியாவை விட்டு வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த கார் மாடல் இப்போது பெட்ரோல் வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதன் டீசல் வெர்ஷன் சில மாதங்களுக்கு முன்னரே வெளியேற்றப்பட்டது. இந்த நிலையிலேயே இதன் பெட்ரோல் வெர்ஷனும் விற்பனையில் இருந்து வெளியேற்றப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஹோண்டா சிட்டி 4வது தலைமுறையையும் இந்தியாவை விட்டு வெளியேற்ற திட்டமிட்டுள்ளது. இந்தியர்களின் ஃபேவரிட்டான செடான் ரக காராக இது இருக்கின்றது. இதை நிறுவன் வெளியேற்ற இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருப்பது இந்தியர்கள் மத்தியில் பெருத்த சோகத்தை ஏற்படுத்தும் வகையில் அமைந்து இருக்கின்றது. அதேவேளையில், இக்காரின் ஐந்தாம் தலைமுறை எப்போதும் இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது ஆறுதல் அளிக்கும் வகையில் அமைந்துள்ளது.
நிஸான் கிக்ஸ், பிரீமியம் அம்சங்கள் கொண்ட எஸ்யூவி ரக காராக இது இருக்கின்றது. இந்த காரை நிஸான் நிறுவனம் வெளியேற்ற திட்டமிட்டு உள்ளது. இதற்கு பதிலாக வேற்று கார் மாடல் இந்தியாவில் களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. நிஸான் கிக்ஸ் அவுட்-டேட் மாடலாக மாறி இருக்கின்றது. அதாவது, பழைய மாடலாக மாறி இருக்கின்றது. இதன் விளைவாக இக்காருக்கு வரவேற்பு என்பது பெரியளவில் இல்லை.
இந்த நிலையிலேயே புதிய விதிகள் மேலும் பாரத்தை ஏற்படுத்தும் வகையில் விரைவில் அமலுக்கு வர இருக்கின்றது. ஆகையால், இந்த காரை நிறுவனம் ஒட்டுமொத்தமாக இந்தியாவில் வெளியேற்ற திட்டமிட்டு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்போதைய நிலவரப்படி இந்த கார் ரூ. 9.50 லட்சம் தொடங்கி ரூ. 14.90 லட்சம் வரையிலான விலையில் விற்பனைக்குக் கிடைக்கின்றது. இது எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
மேலே பார்த்த கார் மாடல்கள் மார்ச் இறுதிக்குள் அப்டேட்டைப் பெற்றால் மட்டுமே ஏப்ரல் 1 ஆம் தேதி அன்று விற்பனைக்குக் கிடைக்கும். அப்டேட்டை பெறவில்லை எனில் அது விற்பனைக்குக் கிடைக்காது. மீறி விற்கப்பட்டால் அரசின் கடும் நடவடிக்கைகளுக்கு ஆளாக நேரிடலாம். எனவே கோடி கோடியாக கொட்டிக் கொடுத்தாலும் மேற்கண்ட கார்களை வாங்குவது முடியாத ஒன்றாக ஏப்ரல் 1இல் இருந்து மாற இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








