இந்த வாகனங்களுக்கு பெர்மிட் கட்டணம் இல்லை.. தமிழக அரசு அதிரடி.. "நீங்க நல்லா இருக்கோணும் நாடு முன்னேற"..
தமிழக அரசு பெர்மிட்டிற்கான கட்டணம் ரத்து என அறிவித்து உள்ளது. குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு மட்டுமே இந்த அறிவிப்பு பொருந்தும். அந்த வாகனங்கள் எவை?, எதற்காக அவற்றிற்கு மட்டும் சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றன என்பது பற்றிய விபரத்தை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
தமிழக அரசு குறிப்பிட்ட சில வாகனங்களுக்கு கட்டணம் இல்லாமல் பெர்மிட்டை வழங்க முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதற்கான அரசாணையும் ஏற்கனவே வெளியிடப்பட்டுவிட்டது. மின்சாரத்தில் ஓடும் பயணிகள் வாகனம் மற்றும் மெத்தனால் அல்லது எத்தனாலில் இயங்கும் பயணிகள் வாகனங்களுக்கே அரசு கட்டணம் ஏதும் இன்றி பெர்மிட்டை வழங்க இருக்கின்றது.

இதற்கு முன்னதாக இந்த வாகனங்களுக்கு பெர்மிட் வழங்கப்படாமல் இருந்து வந்தது குறிப்பிடத்தகுந்தது. முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு மாநிலத்தில் பசுமை இயக்கம் வசதிக் கொண்ட வாகனங்களின் பயன்பாட்டை அதிகப்படுத்தும் முயற்சியாக பல்வேறு சிறப்பு சலுகைகளை அந்த வாகனங்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.
இதன் ஒரு பகுதியாகவே கட்டணம் இல்லா பெர்மிட் திட்டம் பசுமை இயக்கம் கொண்ட வாகனங்களுக்காக அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. எலெக்ட்ரிக் ஆட்டோ ரிக்ஷா, எலெக்ட்ரிக் டாக்சி வாகனங்கள் மற்றும் எலெக்ட்ரிக் தனியார் பயணிகள் பேருந்துகள் உள்ளிட்டவை இதில் பலன் பெற இருக்கின்றன.

பயணிகள் பயன்பாட்டிற்கான ஆட்டோ, கார் மற்றும் பேருந்து ரக மின்சார வாகனங்கள் இதுவரை மாநிலத்தில் பதிவு செய்யப்படாத சூழலே நிலவி வந்தது. இந்த நிலையிலேயே நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள், மெத்தனால் மற்றும் எத்தனாலில் இயங்கும் வாகனங்களை பதிவு செய்து கொள்ள அரசு அனுமதி வழங்கி இருக்கின்றது.
இதற்கான அரசாணையை போக்குவரத்துத் துறையின் முதன்மைச் செயலர் பி. அமுதா நேற்று முன் தினம் (ஜூன் 28) வெளியிட்டார். அதில், பேட்டரியில் இயங்கும் அல்லது மெத்தனால் அல்லது எத்தனால் எரிபொருளில் இயங்கும் அனைத்து போக்குவரத்து வாகனங்களுக்கும் பெர்மிட் கட்டணம் இல்லாமல் பெர்மிட் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், 3000 கிலோவுக்கும் குறைவான மொத்த வாகன எடை கொண்ட சரக்கு வாகனங்களுக்கு இந்த திட்டம் பொருந்தாது என அந்த அறிவிப்பாணையில் கூறப்பட்டு இருக்கின்றது. மற்ற மாநிலங்களை போலவே தமிழகத்திலும் மின்சார வாகனங்களின் பயன்பாடு அசுர வேகத்தில் வளர்ச்சி அடைய வேண்டும் என்கிற நோக்கில் இந்த திட்டத்தை முதலமைச்சர் முக ஸ்டாலின் தலைமையிலான அரசு தமிழகத்தில் அமல்படுத்தி இருக்கின்றது.
ஏற்கனவே எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டில் இந்தியாவின் பிற முக்கிய நகரங்களுக்கே டஃப் கொடுக்கும் வகையில் முன்னேற்றத்தை தமிழகம் கண்டு வருகின்றது. இந்த நிலையிலேயே கமர்சியல் பயணிகள் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் முயற்சி மாநிலத்தில் தொடங்கி இருக்கின்றது. ஆகையால், விரைவில் சிஎன்ஜி ஆட்டோ மற்றும் கார்களை போலவே எலெக்ட்ரிக் ஆட்டோ மற்றும் டாக்சிகள் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தமிழக அரசு மாநிலத்தில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக சாலை வரியில் சிறப்பு சலுகை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதனால், மாநிலத்தில் ஏற்கனவே இ-வாகனங்களின் பயன்பாட்டு அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இந்த மாதிரியான சூழலிலேயே இன்னும் பல்வேறு புதிய சிறப்பு திட்டங்களை அறிமுகம் செய்யும் பணியில் அது களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








