இன்னும் 3வருஷத்துக்கு மட்டும்தான் வரி இல்லாம வாங்க முடியும்! அதுக்கப்புறமும் இந்த சலுகை கிடைக்குமானு தெரியல!
தமிழக அரசு மின்சார வாகனங்களுக்கு வழங்கி வந்த 100 சதவீத வரி தள்ளுபடி திட்டத்தை மேலும் 3 ஆண்டுகளுக்கு நீட்டித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
மின்சார வாகனம் இதுதான் இப்போதைய தமிழகத்தின் ஹாட் டாபிக். தமிழக அரசு மின்சாரத்தால் இயங்கும் வாகனங்களுக்கு 100 சதவீதம் வரி தள்ளுபடியை செய்திருப்பதாக அரசாணை வெளியிட்டு இருக்கின்றது. இந்த தகவல் மின் வாகன ஆர்வலர்கள் மற்றும் பிரியர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கின்றது.

மின்சார வாகனங்களுக்கு மானியம்
ஏனெனில், அரசின் இந்த நடவடிக்கையால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விலை பல மடங்கு குறையும் சூழல் உருவாகி இருக்கின்றது. ஏற்கனவே மத்திய அரசு அதன் சார்பில் மின்சார வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக மானியம் வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் விளைவாக பல ஆயிரம் ரூபாய் வரை மின்சார வாகனங்களின் விலை ஏற்கனவேக் குறைந்துக் காணப்படுகின்றது.
100 சதவீதம் வரி ரத்து
இந்த நிலையிலேயே தங்களின் பங்களிப்பாகவும் குறிப்பிட்ட சில மாநில அரசுகள் மானியம் மற்றும் பிற சலுகைகளை அறிவித்த வண்ணம் இருக்கின்றன. அந்த வரிசையில் தற்போது தமிழக அரசும் தனது சிறப்பு சலுகையாக வரி தள்ளுபடியை அறிவித்து இருக்கின்றது. 100 சதவீத வரி குறைப்பால் மின்சார வாகனங்களின் விலை 8 சதவீதம் வரை குறைய வாய்ப்பு இருப்பதாக வாகனத்துறை வல்லுநர்கள் தெரிவிக்கின்றனர்.

அப்போவே தொடங்கிட்டாங்க
தமிழ்நாடு அரசு மின்சார வாகனங்களுக்கான வரியை குறைக்கும் பணியை 2008 ஆம் ஆண்டில் இருந்தே மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், மின்சார இருசக்கர வாகனங்களுக்கு ரூ. 750ம், தனிப்பட்ட பயன்பாட்டு வசதிக் கொண்ட (பிரைவேட்) கார்களுக்கு அதன் விலையில் 3 சதவீதம் தொடங்கி 6 சதவீதம் வரை மட்டுமே வரியாக வசூலிக்கப்பட்டது.
இதன் பின்னர் இந்த வரி தொகையை அரசாங்கம் பாதியாகக் குறைத்தது. இதிலும் திருப்தி அடையாத அரசு 2019 ஆம் ஆண்டு முதல் வரியை 100 சதவீதமாக ரத்து செய்து அறிவிப்பு வெளியிட்டது. மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக இந்த அறிவிப்பை அது வெளியிட்டது. ஆனால், 2022 டிசம்பர் 31 உடன் இந்த அறிவிப்பு காலாவதி ஆகிவிட்டது.

எப்போது வரை இந்த சலுகை கிடைக்கும்
இந்த நிலையிலேயே வரி தள்ளுபடியை தற்போது நீட்டிப்பு செய்து அரசாங்கம் அரசாணை வெளியிட்டு உள்ளது. இந்த திட்டம் 2025 ஆம் ஆண்டு டிசம்பர் 31 வரை அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு மோட்டார் வாகன வரிவிதிப்பு சட்டம், 1974 பிரிவு 20 மூலம் இந்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது.
எக்ஸ்ட்ரா கட்டணம் வசூலிப்பாங்களா?
தமிழக அரசின் இந்த அறிவிப்பிற்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. மேலும், இதற்கு ஆட்டோமொபைல் டீலர்கள் சங்கமும் தங்களின் வரவேற்பை வழங்கி இருக்கின்றது. தற்போது, தனி நபர் மின்சார வாகனம் வாங்கினால் ரூ. 500 முதல் 1,500 ரூபாய் வரை கட்டணமாக வசூலிக்கப்படுகின்றது. ஸ்மார்ட் கார்டுக்காக இந்த கட்டணம் வசூலிக்கப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
இந்தியாவில் தற்போது மின்சார வாகனங்களுக்கு வரவேற்பு பல மடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. தமிழக வாசிகளும் தற்போது வேகமாக எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டிற்கு மாற தொடங்கி இருக்கின்றனர். இந்த நிலையிலேயே தமிழக அரசு இந்த சூப்பரான திட்டத்தை அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பின் வாயிலாக மூன்று ஆண்டுகளுக்கு தமிழக மக்களால் பலன் அடைய முடியும்.


Click it and Unblock the Notifications








