மாருதி கார்களை தான் எல்லாரும் போட்டிப் போட்டு வாங்குறாங்க!! வெளிச்சம் போட்டு காட்டிய சேல்ஸ் ரிப்போர்ட்!
இந்தியாவில் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 ஹேட்ச்பேக் கார்கள் குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றியும், அவை ஒவ்வொன்றும் கடந்த நவம்பர் மாதத்தில் எத்தனை யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை பற்றியும் இனி இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம், வாங்க.
மிகவும் குறைந்த விலையில் காரை வாங்க நினைப்பவர்களில் பெரும்பாலானோரின் தேர்வு ஹேட்ச்பேக் ரக உடலமைப்பை கொண்ட கார்களின் பக்கமே இருக்கிறது. இதனால்தான், மற்ற நிறுவனங்களை காட்டிலும் மாருதி சுஸுகி அதிக ஹேட்ச்பேக் கார்களை விற்பனை செய்கிறது. இன்னும் தெளிவாக சொல்ல வேண்டுமென்றால், இந்தியாவில் அதிகம் விற்பனை செய்யப்படும் முதல் 4 ஹேட்ச்பேக் கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்துடையது ஆகும்.

கடந்த 2023 நவம்பர் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் காராக முதலிடத்தில் மாருதி சுஸுகியின் வேகன்ஆர் உள்ளது. சற்று உயரம் அதிகம் கொண்டஹேட்ச்பேக் காரான வேகன்ஆர் கடந்த மாதத்தில் மொத்தம் 16,567 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், 2022 நவம்பர் மாதத்தில் இதனை காட்டிலும் 1,847 யூனிட்கள் குறைவாக 14,720 வேகன்ஆர் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
வேகன்ஆருக்கு அடுத்து 2வது இடத்தில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 15,311 ஸ்விஃப்ட் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு நவம்பர் மாதத்திலும் கிட்டத்தட்ட இதே எண்ணிக்கையிலான ஸ்விஃப்ட் கார்களே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மாருதி சுஸுகி பலேனோ இந்த வரிசையில் 3வது இடத்தை சொந்தமாக்கி உள்ளது.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பலேனோ கார்களின் எண்ணிக்கை 12,961 ஆகும். ஆனால், 2022 நவம்பரில் சுமார் 20,945 பலேனோ கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பலேனோ கார்களின் விற்பனை ஆனது 2022 நவம்பரை விட கடந்த நவம்பரில் 7,984 யூனிட்கள் குறைந்துள்ளது. அதேபோல், இதற்கடுத்து 4வது இடத்தில் உள்ள மாருதி சுஸுகி ஆல்டோ கார்களின் விற்பனையும் 2022 நவம்பரை விட 7,587 யூனிட்கள் குறைந்துள்ளது.
2022 நவம்பர் மாதத்தில் 15,663 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த ஆல்டோ கார்கள் கடந்த 2023 நவம்பர் மாதத்தில் வெறும் 8,076 யூனிட்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆல்டோவிற்கு அடுத்து கடந்த நவம்பரில் அதிகம் விற்பனை செய்யப்பட்ட ஹேட்ச்பேக் காராக 5வது இடத்தில் ஹூண்டாய் ஐ20 உள்ளது. கடந்த மாதத்தில் மொத்தம் 5,727 ஐ20 கார்களை ஹூண்டாய் விற்பனை செய்துள்ளது.

6வது மற்றும் 7வது இடங்களில் டாடா மோட்டார்ஸின் ஹேட்ச்பேக் கார்கள் உள்ளன. 6வது இடத்தில் டாடாவின் விலை குறைவான ஹேட்ச்பேக் காரான டியாகோ உள்ளது. டியாகோ கார்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 5,508 ஆகும். இதில் டியாகோ எலக்ட்ரிக் கார்களின் விற்பனை எண்ணிக்கையும் அடங்குகிறது. மாருதி பலேனோ மற்றும் ஹூண்டாய் ஐ20 கார்களுக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் அல்ட்ராஸ் கார்கள் கடந்த மாதத்தில் 4,955 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
8வது இடத்தில் விலை குறைவான ஹூண்டாய் ஹேட்ச்பேக் காரான ஐ10 நியோஸ் உள்ளது. ஐ10 நியோஸ் கார்களின் கடந்த மாத விற்பனை எண்ணிக்கை 4,708 ஆகும். ஆனால், 2022 நவம்பரில் கிட்டத்தட்ட 8 ஆயிரம் ஐ10 நியோஸ் கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி இரு இடங்களில் டொயோட்டா கிளான்ஸா (3,950) மற்றும் மாருதி சுஸுகி செலேரியோ (2,215) உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி நிறுவனத்திற்கு பலமே அதன் விலை குறைவான ஹேட்ச்பேக் கார்கள் தான். இந்த டாப்-10 லிஸ்ட்டில் 5 மாருதி ஹேட்ச்பேக் கார்கள் உள்ளன. அதாவது, ஹேட்ச்பேக் காரை வாங்க நினைக்கும் மக்களில் 2இல் ஒருவரது தேர்வு நிச்சயமாக மாருதி சுஸுகி பக்கம் உள்ளது. விரைவில் ஸ்விஃப்ட் கார் அப்டேட் செய்யப்பட உள்ளது. அதன்பின், அந்த காரின் விற்பனை மேலும் அதிகரிக்கும்.


Click it and Unblock the Notifications









