ஹூண்டாய் நிறுவனத்தை தண்ணி குடிக்க வைத்த டாடா! கழுத்தையே பிடிச்சுட்டாங்க! இது எங்க ஊரு... எங்க இடம்!
முதலிடத்தில் மாருதி!
இந்திய சந்தையில் கடந்த 2022ம் ஆண்டு அதிக கார்களை விற்பனை செய்த டாப்-5 நிறுவனங்களின் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் வழக்கம் போல, மாருதி சுஸுகி (Maruti Suzuki) முதலிடத்தை பிடித்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு 15,76,025 கார்களை விற்பனை செய்து அசத்தியுள்ளது.
ஆனால் கடந்த 2021ம் ஆண்டு மாருதி சுஸுகி நிறுவனம் 13,64,787 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. இதன் மூலம் கார் விற்பனையில் 15.48 சதவீத வளர்ச்சியை மாருதி சுஸுகி நிறுவனம் பதிவு செய்துள்ளது. மாருதி சுஸுகி நிறுவனம் முதலிடத்தை பிடித்ததில் நமக்கு எந்தவிதமான ஆச்சரியமும் இல்லை. அது வழக்கமாக நடக்க கூடிய ஒரு நிகழ்வுதான். ஆனால் இந்த செய்தியில் மற்றொரு ஆச்சரியம் அடங்கியுள்ளது.

ஹூண்டாயின் இரண்டாவது இடத்திற்கு ஆபத்து!
ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தின் இரண்டாவது இடத்தை, டாடா (Tata) நிறுவனம் நெருங்கி வருகிறது என்பதுதான் அந்த ஆச்சரியம். கடந்த 2022ம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனம்தான் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆனால் மூன்றாவது இடத்தில் உள்ள டாடா நிறுவனம் கிட்டத்தட்ட இரண்டாவது இடத்தை நெருங்கி விட்டது. ஹூண்டாய் நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு 5,52,511 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 5,05,033 ஆக இருந்தது. இதன் மூலம் விற்பனையில் ஹூண்டாய் நிறுவனம் 9.40 சதவீத வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
மூன்றாவது இடத்தில் உள்ள டாடா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு 5,26,798 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 3,31,181 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 59.07 சதவீத வளர்ச்சியை டாடா பதிவு செய்து அசத்தியுள்ளது. கடந்த 2021ம் ஆண்டு ஹூண்டாய் நிறுவனத்தை விட டாடா நிறுவனம் சுமார் 1.74 லட்சம் கார்களை குறைவாக விற்பனை செய்திருந்தது. ஆனால் கடந்த 2022ம் ஆண்டில் ஹூண்டாய் நிறுவனத்தை விட டாடா நிறுவனம் வெறும் சுமார் 26 ஆயிரம் கார்களை மட்டுமே குறைவாக விற்பனை செய்துள்ளது.

வித்தியாசம் மிகப்பெரிய அளவில் குறைந்திருப்பது, ஹூண்டாய் நிறுவனத்தின் இரண்டாவது இடத்தை டாடா கிட்டத்தட்ட நெருங்கி விட்டதை தெளிவாக உணர்த்துகிறது. அனேகமாக நடப்பு 2023ம் ஆண்டில், ஹூண்டாய் நிறுவனத்தை வீழ்த்தி, டாடா நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்தாலும் பிடிக்கலாம். ஹூண்டாய் மற்றும் டாடா ஆகிய 2 நிறுவனங்களுமே நடப்பு 2023ம் ஆண்டில் நிறைய கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளன. எனவே இரண்டாவது இடத்திற்கான போட்டி மிகவும் கடுமையாக இருக்கும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.
வேகமாக வளர்றாங்க!
இதற்கிடையே இந்த பட்டியலில் மஹிந்திரா (Mahindra) நிறுவனம் நான்காவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த 2022ம் ஆண்டு மஹிந்திரா நிறுவனம் 3,35,088 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் கடந்த 2021ம் ஆண்டு இந்த எண்ணிக்கை 2,01,693 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 66.14 சதவீத வளர்ச்சியை மஹிந்திரா நிறுவனம் பதிவு செய்து அசத்தியுள்ளது. இதற்கிடையே இந்த பட்டியலில் ஐந்தாவது மற்றும் கடைசி இடத்தை கியா (Kia) நிறுவனம் பிடித்துள்ளது.
கியா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு 2,54,556 கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டு வெறும் 1,81,583 ஆக மட்டுமே இருந்தது. இதன் மூலம் விற்பனையில் 40.19 சதவீத வளர்ச்சியை கியா நிறுவனம் பதிவு செய்துள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 5 நிறுவனங்களுமே விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்துள்ளன. ஆனால் டாடா, மஹிந்திரா மற்றும் கியா நிறுவனங்களின் வளர்ச்சி விகிதம் மிகவும் பிரம்மாண்டமாக உள்ளது.
இந்த நிறுவனங்கள் மிகவும் வேகமாக வளர்ந்து வருவதையே இது எடுத்துக்காட்டுகிறது. நடப்பு 2023ம் ஆண்டில் ஹூண்டாய் மற்றும் டாடா நிறுவனங்கள் இடையேயான போட்டிதான் கார் விற்பனையில் சுவாரஸ்யமான நிகழ்வாக இருக்கும் என கருதப்படுகிறது. இரண்டாவது இடத்தை விட்டு விட கூடாது என ஹூண்டாய் நிறுவனமும், எப்படியாவது இரண்டாவது இடத்தை தட்டி பறித்து விட வேண்டும் என டாடா நிறுவனமும் வரிந்து கட்டி கொண்டு களமிறங்கியிருப்பது, வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சியான ஒரு விஷயம்தான். ஏனெனில் 2 நிறுவனங்களிடம் இருந்தும் சிறப்பான கார்களை எதிர்பார்க்கலாம்!


Click it and Unblock the Notifications








