இந்த டிப்ஸை ஃபாலோ பண்ணி உங்க பழைய கார்களை பராமரிச்சு பாருங்க.. உடனே புதுசு மாதிரி சாலையில ஓடும்!
புதிய வாகனத்திற்கு மாறும் எண்ணம் இருந்தும் குடும்ப சூழல் காரணமாக ஒரு சிலர் பழைய வாகனங்களையே தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மேலும், வேலையில்லா திண்டாட்டம், நிறுவனங்கள் ஊழியர்களை வேலையில் இருந்து வெளியேற்றுவது மற்றும் பொருளாதார சிக்கல் உள்ளிட்டவை மக்கள் மனதில் இருந்து புதிய வாகனம் வாங்கும் எண்ணத்தை ஒட்டுமொத்தமாக விரட்டி அடித்துக் கொண்டிருக்கின்றன.
இதன்விளைவாக இன்னும் சில ஆண்டுகளுக்கு பழைய கார்களையே பயன்படுத்தியாக வேண்டும் என்கிற நிலைக்கு ஒரு சிலர் தள்ளப்பட்டு இருக்கின்றனர். இந்நிலையில் உள்ளவர்களுக்கான பதிவே இதுவாகும். அதாவது, பழைய வாகனங்களை பயன்படுத்துபவர்கள் அந்த வாகனத்தை புதிதுபோல் இயங்கச் செய்வதற்கான வழிக்காட்டுதல்களையே இங்கு தொகுத்து வழங்கி இருக்கின்றோம். இந்த டிப்ஸ்களை கடைபிடிப்பத்தனால் உங்கள் பழைய காரை இன்னும் சில காலங்களுக்கு புதிதுபோல் ஓட செய்ய முடியும். இதற்கான பராமரிப்பு குறிப்புகளைக் காணலாம், வாங்க.

பிரேக்கிங் சிஸ்டத்தை பராமரித்தல்: நூறு சதவீதம் மிக சிறப்பான இயக்க நிலையில் இருக்க வேண்டிய அம்சங்களில் பிரேக்கிங்கும் ஒன்றாகும். ஆனால், பழைய வாகனங்களில் இந்த அம்சத்திலேயே அடிக்கடி கோளாறு ஏற்படும். ஆகையால், அடிக்கடி இந்த அம்சத்தை சரிபார்த்துக் கொள்வது நல்லது. குறிப்பாக, சற்று லாங் டிரைவிற்கு பழைய காரை எடுத்து செல்ல பிளான் போட்டிருக்கீங்க என்றால், மெக்கானிக்கிடம் கொடுத்து இந்த சிஸ்டம் நல்ல நிலையில் இருக்கின்றதா என்பதை சரி பார்த்துவிடுங்கள்.
ஒருவேளை உங்கள் பழைய காரின் பிரேக்கிங் சிஸ்டத்தில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டு இருந்தால், எந்த சமரசமும் இன்றி அதை சரி செய்துவிடுவதே நல்லது. பிரேக் பேட்கள் தேய்ந்து போயிருக்கலாம். அதை மாற்றுவது மிக முக்கியமானது. இது நல்ல நிலையில் இருந்தால் மட்டுமே, அதிக வேகத்தைக்கூட உடனடியாக கட்டுப்படுத்திக் கொள்ள முடியும். இதேபோல், பிரேக் ஆயிலையும், கேபிள்களையும் சரி பார்த்துவிடுவது நல்லது.

டயர்களிலும் சின்ன ஆய்வை செஞ்சுடுங்க: ஓர் வாகனத்தின் சிறந்த இயக்க நிலைக்கு அந்த வாகனத்தின் டயரின் ஆரோக்கியம் மிக முக்கியமானதாகப் பார்க்கப்படுகின்றது. டயர்கள் தேய்ந்து போயிருந்தால் அதை உடனே மாற்றிவிடுவதே மிக சிறந்த யுக்தியாகும். எந்த காரணத்தைக் கொண்டும் இந்த விஷயத்தில் இழுத்தடிப்பு செய்யவே கூடாது. டயர் வெடிப்பு அல்லது திடீர் பஞ்சர்களைக் கையாள்வது மிகவும் கடினமானது.
குறிப்பாக, கார் ஓடிக் கொண்டிருக்கும்போது டயர் வெடித்தால் மிகப் பெரிய ஆபத்தான சூழலை அது ஏற்படுத்தி விடும். மேலும், எப்போதும் குறிப்பிட்ட அளவு ஏர் பிரஷ்ஷரை டயர்களில் மெயின்டெயின் பண்ண வேண்டும். இதன் வாயிலாக அதிக மைலேஜ், சிறந்த இயக்க திறன் மற்றும் கட்டுப்பாட்டை நம்மால் பெற்றுக் கொள்ள முடியும். டயர்களில் குறைந்தபட்சம் எப்போதும் 30 பிஎஸ்ஐ முதல் 35 பிஎஸ்ஐ வரையிலாவது காற்று நிரம்பி இருத்தல் வேண்டும்.

ஸ்டியரிங் சிஸ்டம்: ஸ்டியரிங் வீலில் ஏற்படும் சிறு பிரச்னைகூட பல்வேறு பெரிய பிரச்னைகளுக்கு வழி வகுக்கும். குறிப்பாக, டயர்களை அதிகளவில் அது பாதிக்கச் செய்யும். ஆகையால், ஸ்டியரிங் வீலில் இருக்கும் திரவத்தை சரியான நேரத்தில் மாற்றிவிட வேண்டும். மேலும், சிறந்த இயக்க நிலையில் அது இருப்பதை உறுதி செய்துக் கொள்ள வேண்டும். இதை ஏனோதானோ செய்யாமல் கை தேர்ந்த நிபுணர்கள் வாயிலாக இதை செய்வதை வாடிக்கையாக வைத்துக் கொள்வதே நல்லது.
விண்ட்ஷீல்டு வைப்பரை சரி பார்க்கவும்: விண்ட்ஷீல்டு கார்களில் இருக்கக் கூடிய மிக முக்கியமான அம்சங்களில் ஒன்றாகும். இதை சுத்தமாக வைத்துக் கொள்வது நம்முடைய தலையாய கடமை. இந்த உன்னத பணியையே வைப்பர்கள் செய்துக் கொண்டிருக்கின்றன. இந்த வைப்பர்கள் நல்ல ஆரோக்கியமான நிலையில் நம்முடைய கார்களில் இருக்கின்றனவா என்பதை தெரிந்துக் கொள்ளுங்கள். மழைக் காலங்களில் இவை வேலை செய்யாமல் போய்விட்டால் மிக சிக்கலை நாம் சந்திக்க வேண்டியிருக்கும்.
எரிபொருள் செல்லும் குழாய்களை பராமரித்தல் வேண்டும்: திடீரென உங்கள் காரின் மைலேஜ் பாதிக்கப்படுகின்றதா, அப்படி என்றால் முதலில் உங்கள் காரில் உள்ள எரிபொருள் செல்லும் குழாய்களை ஆய்விற்கு உட்படுத்துங்கள். அதில், சிறிய சிறிய கிராக்குகள் ஏற்பட்டிருக்கலாம். இது மைலேஜை குறைப்பதோடு வேறு சில ஆபத்தான சூழலையும் ஏற்படுத்திவிடும். எனவே, இந்த விஷயத்தில் மெத்தனம் காட்டாமல் இருப்பதே நல்லது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மேலேகூறிய அனைத்து வழிக்காட்டுதல்களையும் நீங்கள் ஃபாலோ செய்வீர்கள் எனில் உங்களுடைய பழைய கார் எந்த நேரத்திலும் உங்கள் காலை வாரிவிடாது. அதேநேரத்தில் தேவைப்படும்போது சர்வீஸ் விட வேண்டும். அதுமட்டுமின்றி, சின்னதாக ஓர் சிக்கல் ஏற்படும்போதே அதை உடனடியாக கவனத்தில் கொண்டு சரி செய்துவிட வேண்டும். இவ்வாறு செய்யும்பட்சத்தில் நம்மைபோலவே நம் பழைய காரும் இளமையானதாக மாறிவிடும்.


Click it and Unblock the Notifications









