ஓட்டல் ரூமுக்கு காசை செலவழிக்க தேவையில்ல!! இந்த டொயோட்டா கார் மட்டும் இருந்துச்சுனா பணம் நிறைய மிச்சம்!
டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) கார் ஒன்று கழிப்பறை வசதி உடன் மாடிஃபை செய்யப்பட்டுள்ளது. பார்ப்போரை மிரள வைக்கக்கூடிய இந்த ஃபார்ச்சூனர் காரை விவரிக்கக்கூடிய வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. இந்த வீடியோவின் மூலம் இந்த மாடிஃபை ஃபார்ச்சூனர் காரை பற்றி தெரியவந்துள்ள விபரங்களை இனி பார்க்கலாம்.
கார்களை உரிமையாளர்கள் அவர்களது விருப்பத்திற்கும், சவுகரியத்திற்கும் ஏற்ப மாடிஃபை செய்துக் கொள்வதை இதற்குமுன் பலமுறை நமது செய்தித்தளத்தில் பார்த்துள்ளோம். அவற்றுள் சில கார் மாடிஃபிகேஷன்களில், காரில் கழிப்பறை பொருத்தப்பட்டுள்ளது. பொதுவாக, தொலைத்தூர பயணங்களை மேற்கொள்ள உள்ளவர்களும், காடுகளில் நாள் கணக்கில் அட்வெச்சனரான பயணங்களை மேற்கொள்வோரே இவ்வாறு காரில் கழிப்பறையை பொருத்திக் கொள்வது வழக்கம்.

இந்த வரிசையில், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்றில் இளைஞர் ஒருவர் கழிப்பறை வசதியை உருவாக்கி ஆச்சிரியப்பட வைத்துள்ளார். இந்த கார் தொடர்பாக இன்ஸ்டாகிராமில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை கீழே காணலாம். வெளிப்பக்க தோற்றத்தை பொறுத்தவரையில், எந்த மாற்றமும் இல்லை. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் ஒன்று எவ்வாறு இருக்குமோ அவ்வாறே உள்ளது.
ஏனெனில், முக்கியமான மாடிஃபிகேஷனான கழிப்பறை பீங்கான் காருக்கு உள்ளே கணக்கச்சிதமாக பொருத்தப்பட்டுள்ளது. காரில் பொருட்களை வைக்கும் பின்பக்க பூட் பகுதியில், எவராலும் எளிதில் பார்க்க முடியாத வகையில், ஓர் தனி அறையில் மறைவாக டாய்லெட் பீங்கானை இந்த இளைஞர் பொருத்தி உள்ளார். இன்னும் சொல்லப்போனால், இந்த கழிப்பறையில் கதவு கூட உள்ளது.
கழிப்பறை செட்-அப் முழுவதும் கருப்பு நிறத்தில் உள்ளதால், பின் கதவை மூடிவிட்டால் காருக்கு உள்ளே இப்படியொரு அறை இருப்பதை வெளியில் இருந்து யாராலும் எளிதில் அடையாளம் காண முடியாது. இருக்கைகள் எந்த திசையில் உள்ளதோ அதே திசையில் அமரும் வகையில் டாய்லெட் பீங்கானை பொருத்த முடியாது. ஏனெனில், கார் இயங்கும்போது ஏற்படும் குலுக்கல்கள் பிரச்சனைகளையும், அசவுகரியத்தையும் உண்டாக்கலாம்.
இதனால், சைடு-ஃபேஸில் டாய்லெட்டை பீங்கானை பொருத்த வேண்டும் என்பதை அறிந்து அதற்கேற்ப இந்த இளைஞர் செயல்பட்டுள்ளார். கழிப்பறை என்றால், அதில் நீர் வசதியும் இருத்தல் அவசியம் என்பதால், இந்த மாடிஃபை ஃபார்ச்சூனர் காரில் ஜெட் ஸ்பிரே அம்சம் வழங்கப்பட்டு உள்ளது. அவ்வளவு சிறிய அறையில் நீருக்கு இந்த ஜெட் ஸ்பிரே சரிப்பட்டு வருமா என்பது உண்மையில் எங்களுக்கும் உறுதியாக தெரியவில்லை.

ஃபார்ச்சூனர், டொயோட்டாவின் விலையுயர்ந்த, அளவில் பெரிய முழு-அளவு எஸ்யூவி கார். 6 மற்றும் 7 இருக்கை ஆப்ஷன்களில் கிடைக்கும் ஃபார்ச்சூனர் காரில் பூட் ஸ்பேஸ் நன்கு விசாலமாக வழங்கப்படுகிறது. இதனால், சீட் பொசிஷனில் எந்த மாற்றத்தையும் செய்யாமல், ஒருவர் அமரக்கூடிய அளவிற்கு கழிப்பறையை கதவு உடன் இந்த இளைஞரால் உருவாக்க முடிந்துள்ளது.
கழிப்பறை வழங்கப்பட்டுள்ளதால், இருக்கைகளில் அமரும் பயணிகளுக்கான ஹெட் ரூம், லெக் ரூம் இடவசதிகளில் எந்த மாற்றமும் இல்லை. ஆனால் ஒன்று மட்டும் நிச்சயம், டாய்லெட் பீங்கான், கழிப்பறைக்கான டோர்கள் மற்றும் கழிவை சேகரித்து வைப்பதற்கான தொட்டி உள்ளிட்டவை பொருத்தப்பட்டுள்ளதால், காரின் எடை தாறுமாறாக அதிகரித்து இருக்கும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: காரின் எடை அதிகரித்துள்ளதால் அதற்கேற்ப என்ஜின் கூடுதலாக உழைக்கும். காரின் மைலேஜ் குறையும். அத்துடன், இவ்வாறான மாடிஃபிகேஷன்கள் காரின் இன்ஸ்சூரன்ஸ் விஷயத்தில் பிரச்சனையை ஏற்படுத்தலாம். ஆனால், பல நாட்களுக்கு காரில் நீண்ட தொலைவிற்கு பயணம் செல்ல உள்ளீர்கள் எனில், இவ்வாறான கழிப்பறை வசதி இருப்பது நல்லது.


Click it and Unblock the Notifications









