எம்பி, எம்எல்ஏ யாரா இருந்தாலும் நெனச்ச உடனேலாம் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார வாங்கீர முடியாது! தவம் இருக்கணும்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். சக்தி வாய்ந்த இன்ஜின், அதிநவீன வசதிகள் மற்றும் ஆஃப் ரோடு திறன்கள் ஆகிய காரணங்களால்தான், டொயோட்டா ஃபார்ச்சூனர் மிகவும் பிரபலமாக இருந்து வருகிறது.
நீங்கள் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி. டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் காத்திருப்பு காலம் குறித்த தகவலை இந்த செய்தியில் நாங்கள் உங்களுக்கு சொல்ல போகிறோம். இந்தியாவில் தற்போதைய நிலையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கான காத்திருப்பு காலம் 4 முதல் 8 வாரங்கள் வரையாக உள்ளது.

அதாவது முன்பதிவு செய்யும் நாளில் இருந்து 4 முதல் 8 வாரங்கள் வரை காத்திருந்தால் மட்டுமே, உங்களுக்கு டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் டெலிவரி செய்யப்படும். ஆனால் உங்களின் இருப்பிடம், டீலர்ஷிப், வேரியண்ட் மற்றும் கலர் ஆப்ஷன்கள் ஆகியவற்றை பொறுத்து, இந்த காத்திருப்பு காலம் மாறுபடலாம் என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
எனவே துல்லியமான தகவல்களுக்கு, உங்களுக்கு அருகே உள்ள டொயோட்டா நிறுவனத்தின் அங்கீகாரம் பெற்ற டீலர்ஷிப்பை அணுகுவது நன்மை பயக்கும். தற்போதைய நிலையில் 4x2 MT, 4x2 AT, 4x4 MT, 4x4 AT, லெஜெண்டர் 4x2 AT, லெஜெண்டர் 4x4 AT மற்றும் GR-S என மொத்தம் 7 வேரியண்ட்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் கிடைக்கிறது.

செயல்திறனை பொறுத்தவரையில், 2.7 லிட்டர் பெட்ரோல் மற்றும் 2.8 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை இந்த கார் பெற்றுள்ளது. இந்திய சந்தையில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காரின் ஆரம்ப விலை 33.43 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 51.44 லட்ச ரூபாயாக இருக்கிறது.
இவை எக்ஸ் ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஜீப் மெரிடியன் (Jeep Meridian), எம்ஜி க்ளோஸ்டர் (MG Gloster), ஸ்கோடா கோடியாக் (Skoda Kodiaq) மற்றும் ஃபோக்ஸ்வேகன் டிகுவான் (Volkswagen Tiguan) உள்ளிட்ட கார்களுடன், டொயோட்டா ஃபார்ச்சூனர் கார் போட்டியிட்டு வருகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்க விஷயம் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்தியாவின் ஃபுல்-சைஸ் எஸ்யூவி செக்மெண்ட்டில் டொயோட்டா ஃபார்ச்சூனர் அசைக்க முடியாத இடத்தில் இருந்து வருகிறது. விலை உயர்ந்த காராக இருந்தாலும் கூட, டொயோட்டா ஃபார்ச்சூனர் காரை ஒவ்வொரு மாதமும் ஆயிரக்கணக்கான பேர் வாங்கி வருகின்றனர். அந்த அளவிற்கு இந்திய வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை டொயோட்டா ஃபார்ச்சூனர் பெற்றுள்ளது.
ஆனால் வரும் மாதங்களில் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கான போட்டி சற்று அதிகரிக்கலாம். ஏனெனில் எம்ஜி நிறுவனம் க்ளோஸ்டர் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. ஆனால் இது டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு ஓரளவு போட்டியை மட்டும் வழங்குமே தவிர, ஃபார்ச்சூனரின் விற்பனை எண்ணிக்கையில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்பது சந்தேகம்தான்.


Click it and Unblock the Notifications








