எல்லா டிராஃபிக்கிலும் புகுந்து போகலாம்!! டொயோட்டா இன்னோவா காரில் இது சாத்தியமே... படுக்கை நன்கு நீளமாக!
இந்தியாவின் மிக பிரபலமான எம்பிவி காராகவும், டொயோட்டா காராகவும் விளங்கும் டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டாவை இனி ஆம்புலன்ஸ் வெர்சனிலும் விற்பனைக்கு வாங்கலாம். புதிய டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா ஆம்புலன்ஸ் காரை எந்த விலையில் வாங்கலாம்? இந்த வேரியண்ட்டின் சிறப்பம்சங்கள் என்னென்ன என்பதை இனி பார்க்கலாம்.
நம் இந்தியர்களுக்கு டொயோட்டா இன்னோவா கார்கள் என்றாலே ஓர் தனி பிரியம் உண்டு. விலை மட்டும் சற்று அதிகமாக இல்லையென்றால், சாலையெங்கும் இன்னோவா கார்களே ஓடும். ஏனெனில் அந்த அளவிற்கு, டிரைவிங் ஹேண்ட்லிங்கும், இயக்கத்தின் போது பயணிகள் சவுகரியமும் இன்னோவா கார்களில் சிறப்பானதாக கிடைக்கிறது.

இந்த நிலையில், மருத்துவ உலகிலும் இன்னோவா கார்களின் பயன் இருக்க வேண்டும் என்பதற்காக ஆம்புலன்ஸ் வெர்சனில் இன்னோவா கிரிஸ்ட்டா காரை டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. இன்னும் சரியாக சொல்ல வேண்டுமென்றால், இன்னோவா கிரிஸ்ட்டா காரை வாங்கி, அதனை ஆம்புலன்ஸாக உருமாற்றம் செய்து கொள்ளலாம்.
இந்த கஸ்டமைஸ் பணிகளை மேற்கொள்வதற்காகவே பைனக்கிள் இண்டஸ்ட்ரீஸ் என்ற வாகன கஸ்டமைஸ்ட் நிறுவனத்துடன் டொயோட்டா கூட்டணியில் உள்ளது. இது முழுக்க முழுக்க மருத்துவ பயன்பாட்டிற்காக மட்டுமே என்பதால், முறையான ஆவணங்கள் வழங்கினால் மட்டுமே டொயோட்டா இன்னோவா கிரிஸ்ட்டா காரை ஆம்புலன்ஸாக டொயோட்டா டீலர்கள் மாற்றி வழங்குவர்.

டொயோட்டா இன்னோவா ஆம்புலன்ஸ் வாகனத்தை பேஸிக் மற்றும் அட்வான்ஸ்டு என்கிற 2 விதமான வேரியண்ட்களில் வாங்கலாம். வெளிப்பக்க தோற்றத்தை பொறுத்தவரையில், பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. ஆம்புலன்ஸ் வாகனம் என்பதற்காக சிவப்பு மற்றும் மஞ்சள் நிற ஸ்டிக்கர்கள் காரை சுற்றிலும் ஒட்டப்பட்டு உள்ளன. அதேபோல், காரின் மேற்கூரையில் அவசரகால ஃப்ளாஷிங் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன.
ஆம்புலன்ஸ் பயன்பாட்டிற்காக முக்கிய மாற்றங்கள் அனைத்தும் காரின் முன்பக்கத்தில் தான் கொண்டுவரப்பட்டு உள்ளன. வழக்கமான ஆம்புலன்ஸில் இருப்பதுபோல், ஓட்டுனரை தொந்தரவு செய்யாத வகையில் காரின் கேபின் இரண்டாக பிரிக்கப்பட்டு உள்ளது. அதாவது, முன் இருக்கைகள் இரண்டும் ஒரு பகுதியாகவும், அவற்றிற்கு பின்னால் இருப்பவை ஒரு பகுதியாகவும் பிரிக்கப்பட்டு உள்ளன.

இதற்காக, காரினுள் 2வது மற்றும் 3வது வரிசை இருக்கைகள் அனைத்தும் நீக்கப்பட்டுள்ளன. இதன் மூலமாக ஒரு படுப்பதற்கு தேவையான நீளத்தில் ஸ்ட்ரெட்சரை வைக்க முடியும். அத்துடன், நோயாளிக்கு துணையாக செல்வோருக்காக ஒரு இருக்கையும் வழங்கப்பட்டு உள்ளது. இவற்றுடன், ஆக்ஸிஜன் சிலிண்டர்கள் மற்றும் மருத்துவ உபகரணங்களை வைக்க அலமாரி பெட்டி உள்ளிட்டவையும் ஏற்படுத்தி கொடுக்கப்படும்.
இவை மட்டுமின்றி, மருத்துவம் சார்ந்த தொழிற்நுட்ப கருவிகளும் இன்னோவா ஆம்புலன்ஸ் காரில் கிடைக்கும். அவையாவன, நோயாளியின் உடல்நலத்தை அளவீடும் மல்டி பாராமீட்டர் மானிடர், ஆக்ஸிஜன் டெலிவிரி சிஸ்டம் மற்றும் நோயாளியின் தலை, கழுத்து & மார்பு பகுதிகளை ஆடாமல், அசையால் ஓர் நிலையாக படுக்கை உடன் கட்டி வைக்க உதவும் கெண்ட்ரிக் கருவி ஆகும்.

மற்றப்படி, வழக்கமான இன்னோவா கிரிஸ்ட்டாவில் பொருத்தப்படும் அதே 2.4 லிட்டர் டீசல் என்ஜினே புதிய ஆம்புலன்ஸ் வெர்சனிலும் பொருத்தப்பட்டு உள்ளது. அதிகப்பட்சமாக 150 பிஎஸ் மற்றும் 343 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: முன்பெல்லாம் பெரிய பெரிய வாகனங்களை தான் ஆம்புலன்ஸாக பயன்படுத்த முடியும் என்கிற எண்ணம் நம்மிடத்தில் இருந்தது. ஆனால் இப்போது சிறிய கார்கள் கூட ஆம்புலன்ஸாக மாற்றி பயன்படுத்தப்படுகின்றன. அந்த வகையில் டொயோட்டா இன்னோவா ஆம்புலன்ஸ் வாகனம் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இத்தகைய ஆம்புலன்ஸ் வாகனங்கள் உருவாக்கப்படுவதற்கு முக்கிய நோக்கம், நெரிசல் மிகுந்த இடங்களில் கூட ஆம்புலன்ஸ் பிரச்சனையின்றி விரைவாக செல்ல வேண்டும் என்பதாகும்.


Click it and Unblock the Notifications









