இன்னோவா காரின் விலை அதிகரிப்பு... இது எத்தனையாவது முறைனு தெரிஞ்சா ஷாக் ஆயிருவீங்க..
டொயோட்டா (Toyota) நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் மாடல்களில் இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross)-ம் ஒன்று. இந்த கார் மாடலின் விலையையே டொயோட்டா தற்போது உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் தற்போது டொயோட்டா இன்னோவா இரு விதமான மாடல்களாக விற்பனைக்குக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.
இன்னோவா ஹைகிராஸ் மற்றும் இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) ஆகியவையே அவை ஆகும். இதில், இன்னோவா க்ரிஸ்டா டீசல் எஞ்ஜின் ஆப்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கும். இதேபோல், இன்னோவா ஹைகிராஸ் பெட்ரோல் தேர்வில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கிறது. ஹைபிரிட் தொழில்நுட்பம் கூடுதல் தேர்வாக இன்னோவா ஹைகிராஸில் வழங்கப்படுகின்றது.

இதுதவிர, பன்முக தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதிக இட வசதிக் கொண்ட மாடலாகவும் இன்னோவா ஹைகிராஸ் காட்சியளிக்கின்றது. ஆகையால், அதற்கு நம்மவர்கள் மத்தியில் சற்று வரவேற்பு அதிகம். இந்த நிலையிலேயே இன்னோவா ஹைகிராஸின் விலையை டொயோட்டா நிறுவனம் உயர்த்தி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
அதிலும், இன்னோவா ஹைகிராஸின் ஹைபிரிட் அம்சம் கொண்ட தேர்வுகளின் விலையை மட்டுமே டொயோட்டா உயர்த்தி இருக்கின்றது. வழக்கமான பெட்ரோல் வேரியண்டின் விலையில் மாற்றமும் செய்யப்படவில்லை. ரூ. 27 ஆயிரம் வரையில் அதன் விலையில் ஏற்றம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஆகையால், ஏற்கனவே காஸ்ட்லியாக இருந்துவந்த இன்னோவா ஹைகிராஸ் மேலும் காஸ்ட்லியானதாக மாறி இருக்கின்றது.

மேலும், முன்னதாக 24.76 லட்சத்திற்கே கிடைத்து வந்த இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் வேரியண்ட் தற்போது ரூ. 25.03 லட்சத்திற்கு கிடைக்கும் நிலை உருவாகி இருக்கின்றது. வழக்கமான பெட்ரோல் இன்னோவா ஹைகிராஸ் ரூ. 18.55 லட்சம் என்கிற ஆரம்ப விலையிலேயே விற்பனைக்குக் கிடைக்கும்.
டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் காரை கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. விற்பனைக்கு வந்து ஆறு மாதங்களே ஆகின்றன. இந்த நிலையிலேயே அதன் விலையில் மாற்றத்தை செய்திருக்கின்றது, டொயோட்டா. இதுபோன்று இன்னோவா ஹைகிராஸ் காரின் விலையை ஏற்றுவது முதல் முறையல்ல.

ஏற்கனவே இந்த கார் மாடலின் விலையை அது உயர்த்தி இருந்தது. ஆகையால், இந்த விலை உயர்வு இரண்டாவது முறையாகும். விற்பனைக்கு வந்து ஆறு மாதங்களே ஆகின்ற நிலையில் இரண்டு முறை விலை உயர்வை இன்னோவா ஹைகிராஸ் பெற்றிருப்பது அதன் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் கார் மாடலை போலவே தன்னுடைய பிற கார் மாடல்களின் விலையையும் கணிசமாக உயர்த்தி இருக்கின்றது. அந்தவகையில், அர்பன் க்ரூஸர் ஹைரைடர், கிளான்ஸா மற்றும் கேம்ரி ஆகிய முன்னணி கார் மாடல்களின் விலையை அது உயர்த்தி இருக்கின்றது.
அதிகரித்து வரும் புதிய வாகன கட்டுமான பொருட்களின் விலை உயர்வைக் காரணம் காட்டியே டொயோட்டா நிறுவனம் இந்த விலை உயர்வைச் செய்திருக்கின்றது. கிராண்ட் விட்டாரா கார் மாடலின் விலையில் ரூ. 20 ஆயிரம் தொடங்கி ரூ. 60 ஆயிரம் வரையிலும், கிளான்ஸாவின் விலையில் ரூ. 5 ஆயிரம் வரையிலும் விலை உயர்த்தப்பட்டு இருக்கின்றது.
தொடர்ந்து கேம்ரி கார் மாடலின் விலையில் அதிகபட்சமாக ரூ. 46 ஆயிரம் வரையில் உயர்த்தப்பட்டு இருக்கின்றது. இந்த விலை உயர்வால் டொயோட்டாவின் அனைத்து தயாரிப்புகளும் சற்று காஸ்ட்லியானவையாக மாறி இருக்கின்றன. இது இந்திய வாகன காதலர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா கார்களுக்கு வரவேற்பு அதிகரித்து வரும் சூழலில் நிறுவனம் விலை உயர்வை செய்திருக்கின்றது. இந்த நிறுவனம் மட்டுமில்லைங்க பிற முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்கள் சிலவும் விலையை உயர்த்தி இருக்கின்றன. டாடா மோட்டார்ஸும் அதன் கார் மாடல்கள் சிலவற்றின் விலையை உயர்த்தி இருப்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









