டொயோட்டா இன்னோவா காருல இப்படி ஒரு சிக்கலா! அடடே நிறைய அரசியல்வாதிங்க இந்த காரைதானே பயன்படுத்திட்டு இருக்காங்க!
டொயோட்டா (Toyota) இந்தியாவில் விற்பனைச் செய்துக் கொண்டிருக்கும் பிரபலமான கார் மாடல்களில் இன்னோவா (Innova)வும் ஒன்று. இந்த காரை இரு விதமான மாடல்களாக அந்நிறுவனம் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இன்னோவா க்ரிஸ்டா (Innova Crysta) மற்றும் இன்னோவா ஹைகிராஸ் (Innova Hycross) ஆகிய மாடல்களே அவை ஆகும்.
இந்த இரண்டில் இன்னோவா ஹைகிராஸ் மாடலிலேயே lதற்போது கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், அதை சரி செய்ய சைலண்டாக டொயோட்டா நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு அழைப்பு விடுத்துக் கொண்டிருப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை டீம் பிஎச்பி தள பயன்பாட்டாளர் ஒருவரும் உறுதி செய்திருக்கின்றார்.

ஃப்யூவல் டேங்க் (Fuel Tank) அல்லது ஃப்யூவல் சிஸ்டம் (Fuel System)லேயே ஏதோ கோளாறு ஏற்பட்டிருப்பதாகவும், இந்த கோளாறை சரி செய்யவே அழைப்பை விடுத்திருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், துள்ளியமான பிரச்னை என்ன என்பது பற்றிய தகவலை அந்த பயனர் தெரிவிக்கவில்லை.
இதேபோல், எந்த காலக்கட்டத்தில் தயாரிக்கப்பட்ட இன்னோவா ஹைகிராஸ் மாடலில் இந்த கோளாறு ஏற்பட்டு இருக்கின்றது? எத்தனை யூனிட்டுகள் பாதிக்கப்பட்டிருக்கின்றன? என்கிற விபரமும் இதுவரை வெளியிடப்படவில்லை. ஆகையால், டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் பயனர்கள் மத்தியில் இந்த தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்திருக்கின்றது.

நம் நாட்டில் பெரும்பாலும் இந்த காரை அரசியல்வாதிகளே பயன்படுத்திக் கொண்டிருக்கின்றனர். இவர்களைத் தொடர்ந்து குடும்பத்துடன் அதிகம் வெளியில் செல்லும் தொழிலதிபர்களும் இந்த காரை பயன்படுத்தி வருகின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது. இத்தகைய கார் மாடலின் ஃப்யூவல் சிஸ்டத்திலேயே பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக நமக்கே ஷாக் அளிக்கும் வகையில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
டீம் பிஎச்பி பயனர் தான் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காரை பயன்படுத்தி வருவதாகவும், அந்த காரின் ஃப்யூவல் டேங்கில் உற்பத்தி கோளாறு இருப்பதாக கூறி சமீபத்தில் டொயோட்டா சர்வீஸ் மையத்தில் இருந்து அழைப்பு வந்ததாகவும் தெரிவித்து இருக்கின்றனர். இந்த அழைப்பைத் தொடர்ந்து அவர் சர்வீஸ் மையத்தில் அவருடைய காரை விட்டிருக்கின்றார்.

இதை அடுத்து, அந்த காரில் ஃப்யூவல் டேங்க் அசெம்பிள் மாற்றப்பட்டு இருக்கின்றது. இத்துடன் ஃப்யூவல் ட்யூப் செட் மற்றும் ஃப்யூவல் டேங்க் குஷ்ஷனும் மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த அனைத்தும் இலவசமாக வாரண்டியின் கீழே மாற்றப்பட்டிருக்கின்றன என்பது குறிப்பிடத்தகுந்தது. உங்கள் டொயோட்டா காருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதா என்பதை நீங்களே தெரிந்துக் கொள்ள முடியும்.
இதற்காக நிறுவனம் அதன் அதிகாரப்பூர்வ வலைதள பக்கத்தில் பிரத்யேக பேஜை உருவாக்கி இருக்கின்றது. அதில் உங்கள் டொயோட்டா காரின் விஐஎன் அல்லது ஃப்ரேம் நம்பரை பதிவிடுவதன் வாயிலாக அழைப்பு உள்ளிட்ட தகவல்களை தெரிந்துக் கொள்ள முடியும். டொயோட்டா நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் மாடலில் பெட்ரோல் மோட்டார் ஆப்ஷனை மட்டுமே விற்பனைக்கு வழங்குகின்றது.
உங்களுக்கு இதில் டீசல் ஆப்ஷன் வேண்டும் என்றால் இன்னோவா க்ரிஸ்டா வாயிலாக பெற்றுக் கொள்ள முடியும். நிறுவனம் இன்னோவா ஹைகிராஸ் மாடலில் ஹைபிரிட் ஆப்ஷனையும் வழங்கிக் கொண்டிருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. இது வழக்கமான பெட்ரோல் தேர்வைக் காட்டிலும் சற்று அதிக மைலேஜை வழங்கும்.
23.24 கிமீ வரை ஒரு லிட்டருக்கு அது மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. ஆனால், வழக்கமான பெட்ரோல் மோட்டார் கொண்ட தேர்வோ ஒரு லிட்டருக்கு 16.13 கிமீ மைலேஜை மட்டுமே தரும். ஆகையால், அதிக மைலேஜ் தரக் கூடிய ஆப்ஷனாக இன்னோவா ஹைகிராஸ் ஹைபிரிட் இருக்கின்றது. இது மைலேஜ் தரக் கூடிய தேர்வு மட்டுமில்லைங்க, அதிக பிரீமியம் அம்சங்களைக் கொண்ட தேர்வாகவும் அவை இருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா நிறுவனம் இதுபோன்று கார்களில் கோளாறு இருப்பதாக அழைப்பு விடுப்பது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் அந்நிறுவனம் அழைப்பை விடுத்திருக்கின்றது. அந்தவகையில், அதன் கிளான்ஸா, அர்பன் க்ரூஸர் ஹைரைடர் உள்ளிட்ட மாடல்களின் பெரும் எண்ணிக்கை யூனிட்டுகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









