இந்த புதிய டொயோட்டா காரை அதிக விலையில் வாங்க போறீங்களா? காரின் லுக் இப்படித்தான் இருக்கும் - வீடியோ வெளிவந்தது
டொயோட்டா ரூமியான் எம்பிவி (Toyota Rumion MPV) கார்கள் கஸ்டமர்களுக்கு டெலிவிரி கொடுக்க, டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கி உள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியிடப்பட்டு உள்ள வீடியோவையும், இந்த புதிய டொயோட்டா எம்பிவி காரை பற்றியும் இனி விரிவாக பார்க்கலாம்.
மாருதி சுஸுகி எர்டிகா, இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி காராக விளங்குகிறது. அதாவது, நீளமான தோற்றம் மற்றும் அதிக இருக்கை வசதிகளை கொண்ட எம்பிவி ரக கார்களை வாங்குவோரின் தேர்வு மாருதி சுஸுகியின் எர்டிகா காராகவே உள்ளது. இதனாலேயே இத்தகைய காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட எம்பிவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய கடந்த பல மாதங்களாக டொயோட்டா திட்டமிட்டு வந்தது.

ஒருவழியாக, எர்டிகாவின் ரீபேட்ஜ்டு வெர்சனாக ரூமியான் எம்பிவி காரை இந்திய சந்தையில் சமீபத்தில் டொயோட்டா அறிமுகப்படுத்தியது. மொத்தம் 3 விதமான வேரியண்ட்களில் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ள ரூமியான் காருக்கான முன்பதிவுகளும் ஏற்கனவே துவங்கப்பட்டு விட்டன. இந்த நிலையில், டொயோட்டா ரூமியான் எம்பிவி கார்கள் டொயோட்டாவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் ஷோரூம் மையங்களை வந்தடைய துவங்கி உள்ளன.
இதனை உறுதிப்படுத்தும் வகையில் யூடியூப்பில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை செய்தியின் இறுதியில் கீழே காணலாம். இந்த வீடியோவில் காட்சித்தரும் புதிய டொயோட்டா ரூமியான் கார் அடர் நீல நிறத்தில் பார்ப்பதற்கே கவர்ச்சிக்கரமான தோற்றத்தில் உள்ளது. ஷோரூமிற்குள் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் காரை டீலர்ஷிப் அதிகாரிகளும், சில வாடிக்கையாளர்களும் பரவசத்துடன் பார்வையிடுவதையும் கீழே பதிவிடப்பட்டு உள்ள வீடியோவில் காணலாம்.

எஸ், ஜி மற்றும் வி என்கிற மூன்று விதமான வேரியண்ட்களில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ள புதிய ரூமியான் எம்பிவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.10.29 லட்சத்தில் இருந்து நிர்ணயிக்கப்பட்டு உள்ளன. ரூமியானின் 3 வேரியண்ட்களில் எந்தெந்த வேரியண்ட்டில் என்னென்ன வசதிகள் கிடைக்கும்? இவை மூன்றின் விலைகளில் வேறெந்த எம்பிவி கார்களை இந்தியாவில் வாங்க முடியும் என்பது குறித்த விரிவான விபரங்களை நமது டிரைவ்ஸ்பார்க் தமிழ் செய்தித்தளத்தில் ஏற்கனவே பதிவிட்டுள்ளோம்.
மாருதி சுஸுகி எர்டிகாவை போல், புதிய டொயோட்டா ரூமியான் காரையும் பெட்ரோல் அல்லது சிஎன்ஜி தேர்வில் வாங்கலாம். டீசல் என்ஜின் தேர்வில் கிடைக்காது. பெட்ரோல் வேரியண்ட்களில் 1.5 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. எர்டிகாவிலும் வழங்கப்படும் இந்த பெட்ரோல் என்ஜின் அதிகப்பட்சமாக 102 பிஎச்பி மற்றும் 137 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது.

இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன. ஏற்கனவே கூறியதுபோல், சிஎன்ஜி தேர்விலும் ரூமியான் கார் கிடைக்கும். ரூமியான் சிஎன்ஜி வேரியண்ட்டிலும் மேற்கூறப்பட்ட அதே 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் தான் வழங்கப்படும். ஆனால் சிஎன்ஜி வேரியண்ட் கார்களில் சற்றுக் குறைவான இயக்க ஆற்றலே கிடைக்கும். அதேபோல், இந்த வேரியண்ட்டை 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் உடன் மட்டுமே பெற முடியும்.
மேலும், சிஎன்ஜி தேர்வை ரூமியானின் எஸ் வேரியண்ட்டில் மட்டுமே வாங்க முடியும். என்ஜின் மட்டுமின்றி, தோற்றத்திலும் எர்டிகாவையே ரூமியான் ஒத்து இருப்பதை கீழே பதிவிடப்பட்டு உள்ள வீடியோவில் காணலாம். இருப்பினும், இரு கார்களும் சற்று வித்தியாசப்படும் வகையில், முன்பக்க கிரில் பகுதியில் புதிய மெஷ் டிசைன் கருப்பு நிறத்தில் வழங்கப்பட்டு உள்ளது. அதேபோல், முன் & பின் பக்க பம்பர்களின் வடிவமும் மாற்றப்பட்டு இருப்பது மட்டுமின்றி, அலாய் சக்கரங்களின் டிசைனும் திருத்தப்பட்டு உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: என்ன தான் எர்டிகாவை போன்று இருந்தாலும், டொயோட்டா பிராண்டில் எம்பிவி காரை வாங்க விரும்புபவர்களுக்கு ரூமியான் சரியான சாய்ஸாக இருக்கும். இதனால் சிலர் மிகுந்த ஆர்வத்துடன் ரூமியான் காரை முன்பதிவு செய்திருப்பீர்கள். அத்தகையவர்களுக்கு சந்தோஷமான செய்தியாக, டொயோட்டா ரூமியான் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications









