புக்கிங்கை திடீர்னு நிறுத்தீட்டாங்க! எல்லாருக்கும் பிடிச்ச டொயோட்டா கார் இனி கிடைக்காதா? அதிர்ச்சியில் மக்கள்
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில் டொயோட்டா ரூமியான் கார் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும்.
டொயோட்டா ரூமியான் காரில், 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் (Petrol) இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது. அதிகபட்சமாக 103 ஹெச்பி பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டுள்ள இந்த இன்ஜினுடன், 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.

இதே இன்ஜின் சிஎன்ஜி (CNG) மூலம் இயங்கும் வகையிலும், டொயோட்டா ரூமியான் காரில் வழங்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி மூலமாக இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 88 ஹெச்பி பவர் மற்றும் 121.5 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டும் வழங்கப்பட்டுள்ளது.
இதில் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் (Mileage) வழங்கும் என டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கம் சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என டொயோட்டா நிறுவனம் கூறியுள்ளது. இவை மிகவும் சிறப்பான மைலேஜ் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இதன் காரணமாக டொயோட்டா ரூமியான் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய அளவிலான வரவேற்பு கிடைத்துள்ளது. குறிப்பாக அதிக மைலேஜ் வழங்க கூடிய காரணத்தால், டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக வரவேற்பை வாரி வழங்கி வருகின்றனர்.
எனவே டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு காத்திருப்பு காலம் (Waiting Period) உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக ரூமியான் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு முன்பதிவுகளை ஏற்பதை டொயோட்டா நிறுவனம் தற்போது தற்காலிகமாக நிறுத்தியுள்ளது. இது வாடிக்கையாளர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
எனினும் நீண்ட காத்திருப்பு காலத்தை குறைக்க வேண்டும் என்பதற்காகவே ரூமியான் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் நிறுத்தப்பட்டிருப்பதாக டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. மறுபக்கம் டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் வேரியண்ட்கள் தொடர்ந்து கிடைக்கும். பெட்ரோல் வேரியண்ட்களுக்கு வாடிக்கையாளர்கள் எப்போதும் போல் தொடர்ந்து முன்பதிவு செய்து கொள்ள முடியும்.
இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை (Price) 10.29 லட்ச ரூபாயாக உள்ளது. அதே நேரத்தில் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 13.68 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலை என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ரூமியான் காரின் சிஎன்ஜி வேரியண்ட்களுக்கு மீண்டும் முன்பதிவுகளை ஏற்கும் பணிகள் எப்போது தொடங்கப்படும்? என்பது உறுதியாக தெரியவில்லை. ஆனால் தற்போது முன்பதிவு செய்து விட்டு காத்து கொண்டிருப்பவர்களுக்கு டெலிவரி செய்து முடித்த பின்னர்தான், டொயோட்டா நிறுவனம் மீண்டும் முன்பதிவுகளை ஏற்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








