ரொம்ப சின்ன குடும்பமா இருந்தா 2 என்ன 3 குடும்பம்கூட ருமியனில் பயணிக்கலாம்.. ருமியன்-எர்டிகா ஒப்பீட்டு தகவல்!
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட டொயோட்டா ருமியன் இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக வெளியீடு செய்யப்பட்டு இருக்கின்றது. இது ஓர் எம்பிவி ரக காராகும். பெயரை பார்த்து இது ஏதோ புத்தம் புதிய மாடல் என நினைத்துக் கொள்ள வேண்டாம். இந்த கார் நம்மில் பலருக்கு பழக்கப்பட்ட மாடலே ஆகும்.
மாருதி சுஸுகி எர்டிகா காரை பார்த்திருக்கீங்களா, இதன் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட மாடலே இந்த ருமியன் ஆகும். மாருதி சுஸுகி மற்றும் டொயோட்டா இரு கார் உற்பத்தியாளர்களும் கூட்டணியின்கீழ் தங்களின் கார்களை பரிமாறிக் கொண்டு வருகின்றனர். இதன் அடிப்படையிலேயே மாருதி சுஸுகி அதன் எர்டிகா காரை டொயோட்டா உடன் பரிமாறி இருக்கின்றது.

இந்த காரின் விலைகள் இன்னும் அறிவிக்கப்படவில்லை. வெகு விரைவிலேயே இதன் விலை விபரங்கள் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. அந்தவகையில், இன்னும் ஒரு சில தினங்களில் ருமியனின் விலைகள் எதிர்பார்க்கப்படுகின்றன. இந்தக் கார் எர்டிகாவின் ரீ-பேட்ஜ் மாடலாக இருந்தாலும், இரு கார் மாடல்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் பல மேற்கொள்ளப்பட்டு இருப்பதாக கூறப்படுகின்றது.
இது உண்மைதானா? அல்லது அப்படியே இந்த காரை ருமியன் என்கிற பெயர் மாற்றத்தை மட்டும் செய்து டொயோட்டா அறிமுகம் செய்திருக்கின்றதா என்கிற தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அப்படியே மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும் எனில், என்ன மாதிரியான மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன? கூடுதல் அம்சங்கள் ஏதேனும் சேர்க்கப்பட்டு இருக்கின்றனவா என்பது போன்ற தகவலையும் இந்த பதிவில் பார்க்க உள்ளோம்.

இன்னும் தெளிவாக சொல்ல வேண்டும் என்றால் டொயோட்டா ருமியன் மற்றும் மாருதி சுஸுகி எர்டிகா இந்த இரு எம்பிவி ரக கார்களுக்கும் இடையே உள்ள வித்தியாசங்கள் என்ன என்கிற விபரத்தையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
வெளி மற்றும் உட்புற தோற்றம், வடிவமைப்பில் மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் டொயோட்டா ருமியன் இந்த இரு கார்களும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாகவே இருக்கின்றன. சொல்லப்போனால் மிகவும் சொற்பமான மாற்றங்களையே எர்டிகாவிடம் இருந்து மாறுபட்டுக் காட்சியளிக்கும் வகையில் ருமியனை டொயோட்டா வடிவமைத்திருக்கின்றது.
லேசாக மேக்-அப் மட்டுமே செய்யப்பட்டு இருக்கின்றது என்றும் கூறலாம். பக்கவாட்டு பகுதியில் வீல்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. அத்துடன், புதிதாக குரோம்பட்டை முன் மற்றும் பின் வீல்களை இணைக்கும் வகையில் கதவுகளின் அடிப்பகுதிக்கு சற்று மேலே புதிதாக சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இந்த அலங்கார வேலையை காரின் இரு பக்கத்திலும் பார்க்க முடிகின்றது.
அத்துடன், விண்டோக்களை ஹைலைட் செய்து காட்டும் விதமாக கருப்பு நிறத்தினாலான அணிகலன் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இதைக் காட்டிலும் முன் பக்கத்திலேயே புதிய அம்சங்கள் பல சேர்க்கப்பட்டு இருக்கின்றன. பம்பர் தொடங்கி கிரில் வரையில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன. பம்பர் மற்றும் கிரில்லில் குரோம் அணிகலன்கள் புதிதாக பொருத்தப்பட்டு இருக்கின்றன.
இத்துடன், பனி மின் விளக்கிற்கு அழகு சேர்க்கும் விதமாக அங்கும் சில்வர் அணிகலன் பொருத்தப்பட்டு இருக்கின்றது. இத்துடன், பானெட்டின் கட்டுமஸ்தான தோற்றத்திலும் குறிப்பிடத்தக்க மாற்றம் ஒன்று செய்யப்பட்டு இருக்கின்றது. எர்டிகாவில் பள்ளமாக இருக்கும் கோடுகள் ருமியனில் சற்று மேடாக காட்சியளிக்கும் வகையில் உள்ளது.
இதுபோன்ற சொற்ப அளவிலான மாற்றங்களையே டொயோட்டா வெளிப்புறத்தில் செய்திருக்கின்றது. இதைத்தவிர வேறு எந்த வித்தியாசத்தையும் வெளிப்புறத்தில் காண முடியவில்லை. இதேபோல், ருமியனின் உட்பக்கமும் எர்டிகாவிடம் இருந்து மிக மிக கணிசமான அளவிலேயே மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. பிரீமியமான டிராவல் உணர்வை வழங்க வேண்டும் என்பதற்காக பல்வேறு சிறப்பம்சங்களை ருமியனில் டொயோட்டா சேர்த்திருக்கின்றது.
குடும்ப தலைவன், தலைவி, தாத்தா, பாட்டி மற்றும் மகன், மகள் என அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்ட ஓர் பெரிய குடும்பத்தால்கூட இந்த காரில் மிக தாராளமான இட வசதி உடன் பயணிக்க முடியும். ஏன் ஓர் குடும்பத்தில் ரெண்டு பேர் மட்டுமே இருக்கின்ற நிலையில் மூன்று குடும்பங்களால்கூட இந்த காரில் பயணிக்க முடியும்.
அந்த அளவிற்கு அதிக இட வசதி உடன் இந்த கார் வந்திருப்பதாக டொயோட்டா கூறுகின்றது. இதுதவிர, டொயோட்டா ஐ-கன்னெக்ட், ஸ்மார்ட் போன் மற்றும் ஸ்மார்ட் வாட்ச் இணைப்பு ஆகிய அம்சங்கள் அடங்கிய 17.78 செமீ அளவுள்ள ஸ்மார்ட் பிளே காஸ்ட் தொடுதிரையை இந்த காரில் டொயோட்டா வழங்கி இருக்கின்றது.
இந்த திரையில் கூடுதல் சிறப்பு வசதியாக ஒயர்லெஸ் ஆன்ட்ராய்டு ஆட்டோ மற்றும் ஆப்பிள் கார் ப்ளே வசதியும் இடம் பெற்றிருக்கும். எர்டிகாவிலும் இதேமாதிரியான அம்சங்கள் கொண்ட 17.78 செமீ ஸ்மார்ட் ப்ளே திரையே வழங்கப்பட்டு இருக்கின்றது. இது மட்டுமல்ல ஸ்டியரிங் வீலும் இரண்டிலும் ஒரே மாதிரியாகவே இருக்கின்றன.
இதன் வாயிலாக, டொயோட்டா ருமியன் மற்றும் மாருதி எர்டிகா இரண்டும் வெவ்வேறு பேட்ஜ்களைக் கொண்ட ஒரே கார்தான் என்பது அப்பட்டமாக தெரிகின்றது. அதேநேரத்தில், எர்டிகாவில் இல்லாத பல பிரீமியம் அம்சங்களை ருமியனில் சேர்த்திருப்பதாக டொயோட்டா தெரிவித்து இருக்கின்றது. அது வெளியிட்டிருக்கும் அறிக்கையின்படி, ருமியனின் உட்பக்கம் டூயன் டோன் நிறத்தால் அலங்கரிக்கப்பட்டு இருக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது.
அத்துடன், முன் பக்கத்திற்கு ஆட்டோ ஏசியும், பின் பக்கத்திற்கு ரூஃபில் ஏசியும் வழங்கப்பட்டிருக்கின்றது. இதுதவிர பாதுகாப்பு அம்சங்களாக முன் பக்கத்தில் இரட்டை ஏர் பேக், பக்கவாட்டு பகுதிக்கான ஏர் பேக், இபிடி உடன் கூடிய ஏபிஎஸ், பிரேக் அசிஸ்ட், எஞ்ஜின் இம்மொபிலைசர், இஎஸ்பி மற்றும் ஹில் ஹோல்டு, சீட் பெல்ட் ரிமைண்டர், உயர் வேக எச்சரிக்கை, சீட் பெல்டை ப்ரீடென்சன் செய்யும் வசதி என ஏகப்பட்ட அம்சங்கள் வழங்கப்பட்டு இருக்கின்றன.
இந்த அம்சங்களில் பெரும்பாலானவற்றை எர்டிகாவிலும் காண முடியும் என்பது குறிப்பிடத்தகுந்தது. நிற தேர்வை பொருத்த வரை ரூமியன் காரில் ஸ்பங்கி ப்ளூ, ரஸ்டிக் பிரவுன், ஐகானிக் கிரே, கஃபே ஒயிட் மற்றும் என்டைசிங் சில்வர் என ஒட்டுமொத்தமாக ஐந்து விதமான நிற தேர்வுகள் வழங்கப்படுகின்றது.
அதுவே, மாருதி சுஸுகி எர்டிகாவில் பார்த்தோமேயானால் அவுபர்ன் ரெட், மேக்மா கிரே, பேர்ல் மிட்நைட் பிளாக், பேர்ல் மெட்டாலிக் ஆர்க்டிக் ஒயிட், பேர்ல் மெட்டாலிக் டிக்னிட்டி பிரவுன், பிரைம் ஆக்ஸ்ஃபோர்டு ப்ளூ மற்றும் ஸ்பிளெண்டிட் சில்வர் என ஒட்டுமொத்தமாக ஏழு விதமான நிற தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
எஞ்ஜினை பொருத்த வரை டொயோட்டா ருமியன் காரில் 75.8 கிலோவாட் பவரையும், 136.8 என்எம் டார்க்கை வெளியேற்றும் 1.5 லிட்டர் கே சீரிஸ் பெட்ரோல் மற்றும் 64.6 கிலோவாட் பவரையும், 121.5 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் 1.5 லிட்டர் கே சீரிஸ் சிஎன்ஜி மோட்டார் ஆப்ஷனையும் வழங்குகின்றது.
இதில், சிஎன்ஜி தேர்வில் இ-சிஎன்ஜி டெக்னாலஜி பயன்படுத்தப்பட்டு உள்ளது. இந்த அம்சம் ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 26.11 கிமீ மைலேஜை வழங்க உதவியாக இருக்கின்றது. இதன் பெட்ரோல் மோட்டார் ஒரு லிட்டருக்கு 20.51 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. எர்டிகாவிலும் இதே மோட்டாரே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகி எர்டிகா, டொயோட்டா ருமியன் வெவ்வேறு பெயர்களில் விற்பனைக்கு வந்தாலும் இரண்டும் ஒரே கார் மாடல்கள்தான் தூரத்தில் இருந்து பார்த்தாலும் சரி, கிட்டக்க இருந்தாலும் சரி ருமியன் அப்படியே எர்டிகாவையே பிரதிபலிக்கின்றது. இத்தகைய கார் மாடலேயை டொயோட்டா தற்போது விற்பனைக்கு கொண்டு வரும் பணியில் தீவிரமாகக் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








