27 கிமீ மைலேஜ் தரும் காருடன் ஆட்டத்தை ஆரம்பித்த டொயோட்டா! இனி பேச்சே கிடையாது... வீச்சுதான்!
இந்திய வாடிக்கையாளர்களின் நம்பகத்தன்மை வாய்ந்த கார் நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா (Toyota). நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதத்திற்கான டொயோட்டா நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதில் டொயோட்டா நிறுவனம் மிக பிரம்மாண்டமான வளர்ச்சியை பதிவு செய்து அசத்தியுள்ளது.
டொயோட்டா நிறுவனம் கடந்த 2022ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் 14,959 கார்களை மட்டும்தான் விற்பனை செய்திருந்தது. ஆனால் நடப்பு 2023ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்திய சந்தையில் டொயோட்டா நிறுவனம் விற்பனை செய்த கார்களின் எண்ணிக்கை 22,910 கார்களாக உயர்ந்துள்ளது.

இது 53 சதவீத வளர்ச்சியாகும். வரும் மாதங்களில் டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது. டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) கார்தான் இதற்கு காரணம். டொயோட்டா ரூமியான் கார், வெகு சமீபத்தில்தான் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
இது மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) காரின் ரீ-பேட்ஜ் செய்யப்பட்ட வெர்ஷன் ஆகும். மாருதி சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில், டொயோட்டா நிறுவனம் இந்த காரை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இந்திய சந்தையில் டொயோட்டா ரூமியான் காரின் ஆரம்ப விலை (Price) 10.29 லட்ச ரூபாயாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 13.68 லட்ச ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும். டொயோட்டா ரூமியான் காருக்கு முன்பதிவுகளை (Bookings) ஏற்கும் பணிகள் தற்போது அதிகாரப்பூர்வமாக நடைபெற்று வருகின்றன. விருப்பம் உள்ள வாடிக்கையாளர்கள் 11 ஆயிரம் ரூபாயை முன்பணமாக செலுத்தி, டொயோட்டா ரூமியான் காரை முன்பதிவு செய்து கொள்ளலாம்.
டொயோட்டா ரூமியான் காரின் டெலிவரி (Delivery) பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை. வரும் செப்டம்பர் 8ம் (September 8) தேதியில் இருந்து, டொயோட்டா ரூமியான் காரின் அதிகாரப்பூர்வ டெலிவரி பணிகள் தொடங்கப்படவுள்ளது. எனவே வரும் மாதங்களில் இதன் விற்பனை எண்ணிக்கையும் சேரும் என்பதால், டொயோட்டா நிறுவனத்தின் வளர்ச்சி மேலும் உயரலாம்.
டொயோட்டா ரூமியான் காரில், 103 ஹெச்பி பவர் மற்றும் 137 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடிய 1.5 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் (Petrol Engine) வழங்கப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதே இன்ஜின் சிஎன்ஜி (CNG) மூலம் இயங்க கூடிய வகையிலும் டொயோட்டா ரூமியான் காரில் வழங்கப்பட்டுள்ளது. சிஎன்ஜி மூலம் இயங்கும்போது இந்த இன்ஜின் அதிகபட்சமாக 88 ஹெச்பி பவர் மற்றும் 121.5 என்எம் டார்க் திறனை உருவாக்கும். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே கொடுக்கப்பட்டுள்ளது.
டொயோட்டா ரூமியான் காரின் பெட்ரோல் இன்ஜின் ஒரு லிட்டருக்கு 20.51 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும், சிஎன்ஜி இன்ஜின் ஒரு கிலோவிற்கு 26.11 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் எனவும் டொயோட்டா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே அதிக மைலேஜ் எதிர்பார்க்க கூடிய வாடிக்கையாளர்களுக்கு இது நல்ல ஆப்ஷனாக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ரூமியான் கார் தற்போது டீலர்ஷிப்களுக்கு வர தொடங்கியுள்ளது. நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல், வரும் செப்டம்பர் 8ம் தேதியில் இருந்து டெலிவரி பணிகளும் தொடங்கப்படவுள்ளன. ரூமியான் காரின் டெலிவரி பணிகள் தொடங்கப்பட்ட பிறகு, டொயோட்டா நிறுவனத்தின் விற்பனை எண்ணிக்கை மேலும் உயரும்.


Click it and Unblock the Notifications








