இந்தியாவில் டொயோட்டாவை காப்பாற்றுவதே மாருதி தான்!! இல்லைனா எப்பயோ மூட்டை, முடிச்சுடன் நடையை கட்டியிருக்கும்!
டொயோட்டா (Toyota) நிறுவனம் கடந்த அக்டோபர் மாதத்தில் 20 ஆயிரத்திற்கும் அதிகமான கார்களை இந்தியாவில் விற்பனை செய்துள்ளது. வழக்கத்தை விட இது எவ்வளவு அதிகம்? சமீப காலமாக டொயோட்டா கார்களின் விற்பனை இந்தியாவில் எவ்வாறு உள்ளது என்பதை பற்றி இனி பார்க்கலாம்.
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் கடந்த 2023 அக்டோபரில் மொத்தம் 21,879 கார்களை இந்தியாவிலும், இந்தியாவில் இருந்து வெளிநாடுகளிலும் விற்பனை செய்துள்ளது. 2022இல் இதே அக்டோபர் மாதத்தில் டொயோட்டா பதிவு செய்ததை விட இது சுமார் 66% அதிகமாகும். ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 13,143 கார்களை மட்டுமே டொயோட்டா விற்பனை செய்திருந்தது.

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் இந்தியா நிறுவனத்தால் கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டவைகளில் 20,452 கார்கள் உள்நாட்டு சந்தையில் விற்பனை செய்யப்பட்டவை ஆகும். மீதி 1,337 கார்கள் இந்தியாவில் இருந்து டொயோட்டா ஏற்றுமதி செய்தவை ஆகும். மொத்தமாக இந்த 2023 காலண்டர் ஆண்டில், அதாவது கடந்த 10 மாதங்களில் 1,92,661 கார்களை டொயோட்டா இந்தியா நிறுவனம் விற்பனை செய்துள்ளது.
ஆனால், 2022ஆம் ஆண்டில் இதே 10 மாதங்களில் வெறும் 1,38,190 கார்கள் மட்டுமே டொயோட்டா நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்பட்டன. இந்த வகையில் பார்க்கும்போது, டொயோட்டா கார்களின் விற்பனை 40% அதிகரித்துள்ளது. சமீப காலத்தில் டொயோட்டா எட்டியிருக்கும் இந்த வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக தொடர்ச்சியான புதிய அறிமுகங்கள் ஆகும்.

அர்பன் க்ரூஸர் ஹைரைடர், இன்னோவா ஹைகிராஸ், ரூமியான் என கடந்த 2022ஆம் ஆண்டின் இறுதியில் இருந்து அடுத்தடுத்து புதிய கார்கள் டொயோட்டா நிறுவனத்தில் இருந்து தொடர்ச்சியாக வந்துக் கொண்டிருக்கின்றன. இவை மூன்றும் மாருதி சுஸுகி உடன் இணைந்து டொயோட்டா உருவாக்கிய கார்களாகும். இவை மூன்றின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார்கள் மாருதி சுஸுகி நிறுவனத்திலும் விற்பனை செய்யப்படுகின்றன.
இவ்வாறு இந்தியாவில் மாருதி சுஸுகி கார்களின் ரீ-பேட்ஜ்டு வெர்சன்களை விற்பனை செய்து வந்தாலும் வெளிநாடுகளில் அதன் தனித்துவமான கார்களை டொயோட்டா அறிமுகப்படுத்துகிறது. டொயோட்டாவின் தனித்துவமான கார்களுள் ஒன்றான கேம்ரி விரைவில் நியூ ஜென்ரேஷன் அப்டேட்டை பெறவுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, புதிய தலைமுறை கேம்ரி விரைவில் நடைபெறும் லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கேம்ரி போன்ற பிரீமியம் தரத்திலான செடான் கார்களை இந்தியாவில் டொயோட்டா விற்பனை செய்துள்ளது. ஆனால், கேம்ரி போன்ற விலைமிக்க கார்கள் இந்திய மார்க்கெட்டிற்கு சரிப்பட்டு வராததால், மாருதி சுஸுகியின் பாணியை பின்தொடர்ந்து, அந்த நிறுவனத்தின் கார்களை காப்பி அடித்து டொயோட்டா நிறுவனம் இந்தியாவில் கார்களை அறிமுகம் செய்கிறது. இதன் காரணமாகவே டொயோட்டா கார்களின் விற்பனை சமீப காலத்தில் அதிகரித்துள்ளது.
இந்தியாவில் டொயோட்டா நிறுவனத்தின் நிலைமை இவ்வாறு இருக்க, அமெரிக்காவில் டொயோட்டாவின் விலையுயர்ந்த காரான ஆர்.ஏ.வி4 எஸ்யூவி சுமார் 18.5 இலட்ச யூனிட்கள் திரும்ப அழைக்கப்பட்டுள்ளன. 2013இல் இருந்து 2018 வரையிலான காலக்கட்டத்தில் உருவாக்கப்பட்ட இந்த 18.5 இலட்ச ஆர்.ஏ.வி4 கார்களில் பேட்டரிகளில் தீ ஏற்படுவதற்கு வாய்ப்புள்ளதை கண்டறிந்த டொயோட்டா நிறுவனம் அவற்றை பழுது பார்ப்பதற்காக திரும்ப அழைக்கிறது.


Click it and Unblock the Notifications









