டொயோட்டாவின் புதிய கார் பெயர் இது தானா? எப்ப வரப்போகுது தெரியுமா?
டொயோட்டா நிறுவனம் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை அடிப்படையாகக் கொண்ட புதிய காரை இந்த ஆண்டு பண்டிகை காலத்தில் அறிமுகப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காருக்காக டொயோட்டா ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ள நிலையில் தற்போது இந்த தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
மாருதி மற்றும் டொயோட்டா ஆகிய நிறுவனங்களுக்கு இடையே தற்போது ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதன்படி இரு நிறுவனங்களும் தங்கள் கார்களை பரஸ்பரம் ரீபேட்ஜ் செய்து அவரவர் பிராண்டுகளில் விற்பனைக்கு அறிமுகம் செய்து கொள்ளலாம் என ஒப்பந்தம் செய்துள்ளனர். அதன்படி கார்களை பகிர்ந்து வருகின்றனர்.

மாருதி கிராண்ட் விட்டாரா மற்றும் டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் ஆகிய கார்கள் ஒப்பந்த அடிப்படையில் ரீபேட்ஜ் செய்யப்பட்ட கார்கள்தான். சமீபத்தில் மாருதி நிறுவனம் இன்விட்டோ என்ற எம்பிவி காரை அறிமுகப்படுத்தியது. இது டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹை கிராஸ் காரின் ரீபேட்ஜ் வெர்ஷன் தான்.
இந்த முறை டொயோட்டா நிறுவனம் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை ரீபேட்ஜ் செய்து அறிமுகம் செய்ய உள்ளது. இந்தக் கார் பண்டிகை காலம் நெருங்குவதால் இந்தியாவின் பண்டிகை காலமான அடுத்த சில மாதங்களில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே டொயோட்டா நிறுவனம் மாருதி நிறுவனத்தின் எர்டிகா காரை ரீபேட்ஜ் செய்து அறிமுகப்படுத்தும் முயற்சியில் இறங்கியுள்ள நிலையில் தற்போது பிரான்ஸ் காருக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளது. மாருதி நிறுவனம் தனது பிரான்ஸ் காரை கடந்த ஜனவரி மாதம் நடந்த ஆட்டோ எக்ஸ்போவில் மாருதி ஜிம்னி கார் உடன் சேர்த்து அறிமுகப்படுத்தியது.
தற்போது மாருதி ஜிம்னி மற்றும் ஃபிராங்க்ஸ் ஆகிய இரண்டு கார்களும் நெக்ஸா பிரிமியம் அவுட்லைட்டுகளில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதில் ஃபிராங்க்ஸ் கார் ஒவ்வொரு மாதமும் சிறப்பான விற்பனையை பெற்று வருகிறது. இந்த கார் மாருதி நிறுவனத்தின் பிரெஸ்ஸா காம்பேக்ட் எஸ்யூவி காரைவிட குறைவான விலையில் விற்பனையாகி வருகிறது.

டொயோட்டா நிறுவனம் உருவாக்கும் இந்த ஃபிராங்க்ஸ் கார் அடிப்படையிலான புதிய காரும் இதே பிளாட்பார்மில் தான் உருவாக்கப்படும். இந்தக் காருக்கு டொயோட்டா நிறுவனம் டைசர் என பெயர் வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது ஆனால் இது குறித்த உறுதியான தகவல் இதுவரை வெளியாகவில்லை.
இந்த காரின் இன்ஜினாக 1.2 லிட்டர் கேஸ் சிரீஸ் பெட்ரோல் மற்றும் 1.0 லிட்டர் டர்போ ஆகிய இன்ஜின் ஆகிய இன்ஜின் ஆப்ஷன்கள் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் நேச்சுரலி அஸ்பயர்டு பெட்ரோல் இன்ஜின் 90 பிஎஸ் பவரையும் 113 என்எம் டார்க் திறனையும் டர்போ பெட்ரோல் இன்ஜின் 100 பிஎஸ் பவரையும் 140 என்எம் டார் திறனையும் வெளிப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் கியர் பாக்ஸ்களை பொறுத்தவரை 5 மேனுவல், 6 ஸ்பீடு டார்க் கன்வெர்ட்டர் மற்றும் 5 ஸ்பீடு ஏஎம்டி ஆகிய கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் இருக்கிறது. இதற்கு முன்னர் இந்நிறுவனங்கள் பகிர்ந்து கொண்ட டொயோட்டா கிளான்ஸா மற்றும் மாருதி பலேனோ ஆகிய கார்களின் டிசைன் பெரிய மாறுபாடுடன் இருந்தது. ஆனால் தற்போது டொயோட்டா பகிரப் போகும் ஃபிராங்க்ஸ் காரின் வெளிப்புறத் தோற்றம் பெரிய அளவு மாறுபடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
இந்த காரில் உள்ள அம்சங்களை பொறுத்தவரை 9 இன்ச் ஸ்மார்ட் பிளேஸ் ப்ரோ+ டச் ஸ்கிரீன் இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே, மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ, புஷ் பட்டன் ஸ்டார்ட்/ஸ்டாப், க்ரூஸ் கண்ட்ரோல், ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், 360 டிகிரி கேமரா, ஹெட்ஸ்அப் டிஸ்ப்ளே, மல்டிபிள் ஏர் பேக் ஆகியன உள்ளன. டொயோட்டா தயாரிக்கப் போகும் காரிலும் இதே ஆப்ஷன் எல்லாம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைஸ்பார்க் கருத்து: டொயோட்டா மாருதி கூட்டணியால் டொயோட்டாவை விட மாருதி தான் அதிக அளவு பயன் பெற்றிருக்கிறது. இந்த ரீபேட்ஜ் கார்களில் டொயோட்டோ கார்கள் பெரிய அளவில் விற்பனையை பெறவில்லை. டொயோட்டா நிறுவனம் இந்த ஃபிராங்க்ஸ் கார்ரை ரீபேட்ஜ் செய்யும் போது சிறப்பான விற்பனையை பெறுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications









