இந்த விஷயத்துல உபி இந்தியாவோட எல்லா மாநிலத்தையும் தோற்கடிருச்சு! கர்நாடகா, தமிழ்நாடு களத்துல இருக்கானே தெரியல!
இந்தியாவின் எந்தெந்த மாநிலத்தில் எத்தனை மின்சார வாகனங்கள் புதிதாக பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன என்கிற விபரங்கள் வெளியாகி உள்ளன. இந்த பதிவில் எந்த மாநில மக்கள் அதிக அளவில் மின்சார வாகனங்களை வாங்கிக் கொண்டிருக்கின்றனர் என்பது பற்றிய தகவலையே பார்க்க உள்ளோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
இந்தியாவில் மின்சார வாகனங்களின் விற்பனை பலமடங்கு சூடுபிடித்துக் காணப்படுகின்றது. இதுவரை 21.70 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்கள் இந்தியாவில் பதிவு செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசு சமீபத்தில் வெளியிட்ட தகவலின் வாயிலாக இந்த தகவல் உறுதி செய்யப்பட்டு இருக்கின்றது. அதிகளவில் மின்சார வாகனங்கள் பதிவு செய்யப்பட்டிருக்கும் முதல் மூன்று மாநிலங்களின் பட்டியலில் தென் இந்தியாவைச் சேர்ந்த ஒரு மாநிலம்கூட இடம் பிடிக்கவில்லை.

மின்சார வாகனங்கள் அதிகம் புழக்கத்தில் இருக்கும் மாநிலமாக கருதப்படும் கர்நாடாககூட இந்த விஷயத்தில் மிகவும் பின் தங்கி இருக்கின்றது. இதேபோல், தமிழகமும் இந்த பட்டியலில் சற்று பின்தங்கியே இருக்கின்றது. முதல் மூன்று இடத்தில் முதன்மை இடத்தை உபி மாநிலம் பிடித்துள்ளது. அங்கு இதுவரை 4,65,432 எலெக்ட்ரிக் வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
உத்தரபிரதேசத்திற்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தை மஹாராஷ்டிரா பிடித்திருக்கின்றது. அங்கு ஒட்டுமொத்தமாக 2,26,134 இ-வாகனங்கள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இதற்கு அடுத்தபடியாக மூன்றாவது இடத்தை தலைநகர் டெல்லி பிடித்திருக்கின்றது. மின்சார வாகன விற்பனையை ஊக்குவிப்பதில் டெல்லி முதன்மை இடத்தில் இருக்கின்றது. இருப்பினும், இதுவரை 2,03,263 யூனிட்டுகள் மின் வாகனங்கள் மட்டுமே அங்கு பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
இந்த தகவலை அந்தந்த மாநில அரசுகளும் நாடாளுமன்றத்தில் உறுதிப்படுத்தி இருக்கின்றன. மேலும், இதனை மத்திய கனரக தொழில்துறை இணை அமைச்சர் கிரிஷன் பால் குர்ஜாரும் அவர் சார்பில் எழுத்துப்பூர்வமாக மக்களவையில் உறுதி செய்திருக்கின்றார். அவர் அளித்த பதிலின் வாயிலாக நடப்பாண்டு தொடங்கி மார்ச் 15 வரையில் 2,56,980 யூனிட் மின்சார வாகனங்கள் விற்பனையாகி இருப்பது தெரிய வந்திருக்கின்றது.
இது 2021 ஆம் ஆண்டில் இதே காலகட்டத்தில் ஆகிய விற்பனையைவிட மிக மிக அதிகம் ஆகும். அந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாகவே 3,27,976 யூனிட்டுகள் மின்சார வாகனங்கள் மட்டுமே விற்பனையாகி இருந்தன என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்த எண்ணிக்கையில் இருந்தே மிக பெரிய விற்பனை 2022 இல் மின்சார வாகனங்கள் சந்தித்தன. 10,15,196 யூனிட்டுகள் இ-வாகனங்களே இந்தியாவில் சென்ற ஆண்டில் பதிவு செய்யப்பட்டு இருக்கின்றன.
மின் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக அரசு முன்னெடுத்து வரும் நடவடிக்கைகளே எலெக்ட்ரிக் வாகன விற்பனை அபரீத வளர்ச்சியைச் சந்திக்க முக்கிய காரணமாக இருக்கின்றது. மத்திய அரசும், மாநில அரசுகளும் மின் வாகனங்களை அதிகளவில் பயன்பாட்டிற்குக் கொண்டு வரும் விதமாக பல்வேறு சிறப்பு திட்டங்களை அறிவித்து வருகின்றன.
தமிழகத்தில் எலெக்ட்ரிக் வாகன பயன்பாட்டை ஊக்குவிக்கும் விதமாக சாலை வரியில் சலுகை வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தகுந்தது. மத்திய அரசு மின்சார வாகனத்தின் பேட்டரி அளவை பொருத்து மானியத் தொகையை வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதற்காக ஃபேம்-2 திட்டத்தின்கீழ் அரசு 10 ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கி இருக்கின்றது.
பேட்டரியின் ஒவ்வொரு kWH-க்கும் 10 ரூபாய் மானியமாக வழங்கப்படுகின்றது. இதன் விளைவாக மின்சார வாகனங்களின் விலை 20 சதவீதம் குறையும். இந்த மானியம் எலெக்ட்ரிக் 3 வீலர் மற்றும் 4 வீலர்களுக்கு மட்டுமே பொருந்தும். அரசு எலெக்ட்ரிக் டூ-வீலர்களுக்கு ஒரு கிலோவாட்டிற்கு ரூ. 15 ஆயிரம் வரை மானியம் வழங்குகின்றது.
இதன் விளைவாக மின்சார இருசக்கர வாகனங்களின் விலை 20 சதவீதம் முதல் 40 சதவீதம் வரை குறைந்து காணப்படுகின்றது. இந்த காரணத்தினாலேயே நாட்டில் எலெக்ட்ரிக் வாகனங்கள் முந்தைய ஆண்டுகளைக் காட்டிலும் இப்போது அதிகரித்துக் காணப்படுகின்றது. வரும்காலங்களிலும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பதிவு இன்னும் பலமடங்கு உயரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து
இப்போது உயர்ந்துக் காணப்படும் மின்சார வாகனங்களின் பதிவு எண்ணிக்கையை வைத்து பார்க்கையில், எதிர்காலத்தில் நிச்சயம் எலெக்ட்ரிக் வாகனங்கள் மட்டுமே இந்திய சாலையை ஆளுகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நம்முடைய இந்திய அரசின் எதிர்பார்ப்பும் இதுவாகவே இருக்கின்றது. காற்று மாசுபாட்டை குறைக்கும் விதமாக மக்கள் அனைவரும் மின்வாகன பயன்பாட்டை நோக்கி மிக வேகமாக நகர்ந்துக் கொண்டிருப்பது உண்மையில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








