டாடாவின் புது எலெக்ட்ரிக் கார் விலை இவ்ளோதானா! ஒரு முறை சார்ஜ் போட்டுட்டா போதும்! 500 கிமீ தாராளமா ஓடும்!
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மீதான ஆர்வம், முன்னெப்போதும் இல்லாத வகையில், தற்போது நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இதன் காரணமாக பல்வேறு புதிய எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்ய முன்னணி நிறுவனங்கள் வேகமாக தயாராகி வருகின்றன.
நீங்கள் புதிய எலெக்ட்ரிக் கார்களை வாங்க திட்டமிட்டிருந்தால், உங்களுக்குதான் இந்த செய்தி. ஆம், இந்திய சந்தையில் வெகு விரைவில் விற்பனைக்கு வரவுள்ள டாடா (Tata) மற்றும் மஹிந்திரா (Mahindra) நிறுவனங்களின் 3 எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தகவல்களை இந்த செய்தியில் தொகுத்து வழங்கியுள்ளோம்.

டாடா பன்ச் இவி (Tata Punch EV): ஆல்ஃபா (ALFA - Agile Light Flexible Advanced) பிளாட்பார்ம் அடிப்படையில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் கட்டமைக்கப்படவுள்ளது. இந்த காரின் சோதனை ஓட்டம் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகிறது. அப்போது எடுக்கப்பட்ட படங்களின் மூலம், சார்ஜிங் போர்ட் முன் பகுதியில் வழங்கப்படுவது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது ஏற்கனவே விற்பனையில் உள்ள டாடா பன்ச் காரின் எலெக்ட்ரிக் வெர்ஷன் ஆகும். எனவே ஐசிஇ வெர்ஷன் உடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வெர்ஷனை வேறுபடுத்தி காட்டுவதற்காக, டாடா நெக்ஸான் இவி (Tata Nexon EV) எலெக்ட்ரிக் காரின் ஒரு சில டிசைன் (Design) அம்சங்கள் எடுத்து கொள்ளப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் 2 பேட்டரி ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில் டாப் வேரியண்ட்களில் வழங்கப்படவுள்ள பேட்டரியை ஒரு முறை முழுமையாக நிரப்பினால், 500 கிலோ மீட்டர் வரை பயணம் செய்ய முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. இது உண்மையிலேயே மிக சிறப்பான ரேஞ்ச் (Range) என்பதில் துளியும் சந்தேகம் இல்லை.
இதுதவிர வயர்லெஸ் ஆப்பிள் கார்பிளே மற்றும் ஆண்ட்ராய்டு ஆட்டோ கனெக்டிவிட்டி உடன் கூடிய பெரிய டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், கனெக்டட் கார் தொழில்நுட்பம், இலுமினேட்டட் லோகோ உடன் கூடிய தட்டையான அடிப்பாகம் கொண்ட 2 ஸ்போக் ஸ்டியரிங் வீல் ஆகிய வசதிகளும் (Features) டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் காரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், 360 டிகிரி கேமரா சிஸ்டம் ஆகிய வசதிகளையும் நாம் எதிர்பார்க்கலாம். ஆனால் இதன் ஆரம்ப விலை (Price) வெறும் 9.50 லட்ச ரூபாய் என்ற அளவில் மட்டுமே இருக்கும் என கூறப்படுகிறது. ஆனால் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும்போதுதான், அதிகாரப்பூர்வமான விலை அறிவிக்கப்படும்.
அனேகமாக நடப்பு டிசம்பர் மாத இறுதிக்குள் டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார் விற்பனைக்கு வந்து விடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இல்லாவிட்டால் வரும் 2024ம் ஆண்டின் தொடக்கத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம். இது இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்றாகும்.

டாடா கர்வ் இவி (Tata Curvv EV): டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரின் டிரைவிங் ரேஞ்சும் 500 கிலோ மீட்டருக்கும் அதிகமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. வரும் 2024ம் ஆண்டின் இறுதிக்குள்ளாக டாடா கர்வ் இவி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படுவதற்கான வாய்ப்புகள் இருக்கின்றன.
தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் டாடா ஹாரியர் (Tata Harrier) மற்றும் டாடா சஃபாரி (Tata Safari) ஆகிய கார்களில் இடம்பெற்றுள்ள பெரும்பாலான வசதிகள், டாடா கர்வ் இவி எலெக்ட்ரிக் காரிலும் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா எக்ஸ்யூவி400 ஃபேஸ்லிஃப்ட் (Mahindra XUV400 Facelift): இது தற்போது விற்பனையில் உள்ள மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் மாடல் ஆகும். 2024ம் ஆண்டின் இறுதியில் அல்லது 2025ம் ஆண்டின் தொடக்கத்தில், மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் காரின் ஃபேஸ்லிஃப்ட் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த புதிய ஃபேஸ்லிஃப்ட் மாடலில் பல்வேறு வசதிகள் கூடுதலாக வழங்கப்படலாம். அத்துடன் உட்புறம் மற்றும் வெளிப்புற டிசைன்களில் மாற்றங்கள் செய்யப்படலாம். இதன் காரணமாக விலை சற்று அதிகரிக்கப்படும். தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 15.99-19.39 லட்ச ரூபாய் வரையிலான விலைகளில் மஹிந்திரா எக்ஸ்யூவி400 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இவை எக்ஸ் ஷோரூம் விலையாகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: நீங்கள் புதிய எலெக்ட்ரிக் கார்களை வாங்க திட்டமிட்டிருந்தால், இந்த மாடல்களை பரிசீலனை செய்யலாம். நாங்கள் இங்கே பட்டியலிட்டுள்ள 3 எலெக்ட்ரிக் கார்களில், டாடா பன்ச் இவி எலெக்ட்ரிக் கார்தான் முதலில் விற்பனைக்கு வரவுள்ளது. மற்ற 2 எலெக்ட்ரிக் கார்களும் அதற்கு பிறகு ஒன்றன் பின் ஒன்றாக விற்பனைக்கு வரலாம்.


Click it and Unblock the Notifications









