புதுசா மாருதி கொண்டு வரப்போற இந்த காரையெல்லாம் பார்த்தா டாடா, ஹூண்டாய் எல்லாம் கடைய சாத்த வேண்டியதா இருக்கும்
இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் தங்கள் தயாரிப்பு அணிவகுப்பில் முக்கியமான மாற்றங்களைக் கொண்டு வர முடிவு செய்துள்ளனர். அதன்படி எலெக்ட்ரிக் மற்றும் ஹைபிரிட் கார்களுக்கு தங்கள் தயாரிப்பில் முக்கியத்துவம் கொடுக்க முடிவு செய்துள்ளனர். இது குறித்த விரிவான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.
மார்கெட்டில் தொடர்ந்து தன்னை முன்னிலைப்படுத்தி நிற்கவும், புதுமையை அறிமுகப்படுத்தவும், அதே நேரம் இந்திய மார்கெட்டிற்கு ஏற்ற கார்களை உருவாக்கவும் இந்த முடிவை மாருதி சுஸுகி நிறுவனம் எடுத்துள்ளது. இது மட்டுமல்லாமல் பசுமையான மற்றும் தொழில்நுட்ப அம்சங்கள் நிறைந்த வாகனங்களை தங்கள் வாகன அணிவகுப்பில் சேர்க்கவும் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

அதன்படி இந்நிறுவனம் ஏற்கனவே விற்பனை செய்தும் வரும் கார்களை இவி மற்றும் ஹைபிரிட் கார்களாக அப்டேட் செய்யவும் அதே நேரம் புதிய கார்களை களம் இறக்கவும் முடிவு செய்துள்ளது. விரைவில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பிராண்டில் வரவுள்ள இவி, ஹைபிரிட் உள்ளிட்ட கார்களின் பட்டியலை விரிவாகக் காணலாம்.
மாருதி சுஸுகி இன்விடோ: மாருதி நிறுவனம் இந்த பிரிமியம் எம்பிவி காரை வரும் ஜூலை மாதம் 5ஆம் தேதி விற்பனைக்கு அறிமுகப்படுத்துகிறது. இது டொயோட்டா நிறுவனத்தின் இன்னோவா ஹைகிராஸ் காரை அடிப்படையாகக் கொண்டது. இதன் டிசைன் பெரும்பாலும் கிராண்ட் விட்டாரா காரின் டிசைனை அடிப்படியாகக் கொண்டு வடிவமைக்கப்பட்டுள்ளது.

இதன் முன் பக்கம் பார்க்க பெரும்பாலும் கிராண்ட் விட்டாரா காரை போலவே இருக்கிறது. மற்ற பக்கமெல்லாம் இன்னோவா ஹைகிராஸ் காரை போலவே டிசைன் செய்யப்பட்டுள்ளது. இந்த காரில் 2.0 லிட்டர் நேச்சுரல் அஸ்பயர்டு பெட்ரோல் மைல்டு ஹைபிரிட் இன்ஜின், மற்றும் 2.0 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் ஆகிய ஆப்ஷன்கள் உள்ளன.
புதிய தலைமுறை மாருதி ஸ்விப்ட்: மாருதி நிறுவனம் தனது ஷிப்ட் காரில் புதிய தலைமுறை காரை வடிவமைத்து வருகிறது. இந்த கார் அடுத்த ஆண்டு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரை மாருதி நிறுவனம் ஹார்ட்ரெட் பிளாட்ஃபார்மில் கட்டமைக்கிறது. இதே பிளாட்ஃபாமில் தான் பலேனோ மற்றும் ஃபிராங்க்ஸ் ஆகிய கார்கள் கட்டமைக்கப்பட்டு வருகிறது.

புதிய தலைமுறை ஷிப்ட் காரில் பல முக்கியமான டிசைன் மாற்றங்கள் செய்யப்பட உள்ளன. இது மட்டுமல்ல இதன் பில்டு குவாலிட்டியும் அதிகரிக்கப்பட உள்ளது. இந்த புதிய காரில் 1.2 லிட்டர் பெட்ரோல் இன்ஜின் உடன் ஸ்டிராங்க் ஹைபிரிட் தொழில்நுட்பமும் இடம்பெறும் என எதிர்பார்க்கலாம். இதனால் இந்த காரின் மைலேஜ் அதிகமாக இருக்கும் என கூறப்படுகிறது.
புதிய தலைமுறை மாருதி டிசையர்: மாருதி தனது ஸ்விஃப்ட் காரை மட்டுமல்ல அதை அடிப்படையாகக் கொண்ட நான்கு மீட்டருக்கும் குறைவான செடான் காரான டிசையர் காரையும் மாற்றியமைக்க முடிவு செய்துள்ளது. இந்தக் காரும் அதன் பிளாட்ஃபார்மில் தான் உருவாக்கப்படுகிறது. புதிதாக அப்டேட் செய்யப்படும் இந்த மாருதி டிசையர் புதிய தலைமுறை காரில் அதிகமான பாதுகாப்பு அம்சங்கள் இடம் பெறும் என எதிர்பார்க்கலாம்.
மேலும் இந்த காரின் வடிவமைப்பிலும் மாற்றங்கள் ஏற்பட்டு புதிய ஸ்டைலிங் மற்றும் மேம்படுத்தப்பட்ட இன்டிரியர்கள் கொடுக்கப்பட உள்ளது. இது மட்டுமல்லாமல் காரில் பல புதிய அம்சங்களும் சேர்க்கப்பட உள்ளன. இதன் இன்ஜினைப் பொறுத்தவரை ஸ்விஃப்ட் காரில் உள்ள அதே 1.2 லிட்டர் ஸ்டிராங் ஹைபிரிட் பெட்ரோல் இன்ஜின் தான் பொருத்தப்படுகிறது.
மாருதி சுஸுகி இவிஎக்ஸ்: மாருதி சுஸுகி நிறுவனம் எலெக்ட்ரிக் வாகன செக்மெண்டில் எப்பொழுது களம் இறங்கும் என நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. தனது இவிஎக்ஸ் என்ற காரை கடந்த ஜனவரி மாதம் நடந்த 2023 ஆட்டோ எக்ஸ்போவில் கான்செப்ட் காராக காட்சிப்படுத்தியது.
இதன் புரோடெக்ஷன் கார் மார்க்கெட்டில் விற்பனையாகும் டாடா நெக்ஸான், மாருதி எக்ஸ்யூவி 40 மற்றும் எம்ஜி ஸிஎஸ் இவி ஆகிய கார்களுக்கு போட்டியாகக் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த காரில் 60 கிலோவாட் ஹவர் பேட்டரி பேக் கொடுக்கப்பட்டிருக்கும் என்றும், இது முழு சார்ஜர் 550 கிலோமீட்டர் வரை பயணிக்கும் திறன் கொண்டதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி நிறுவனத்திற்கு ஏற்கனவே மக்கள் மத்தியில் நல்ல பெயர் இருக்கும் நிலையில் இந்த கார்கள் எல்லாம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் களம் இறங்கும் காராக இருக்கும் எனக் கூறப்படுகிறது.இதன் விற்பனையும் சூடுபிடிக்கும் வகையில் இருக்கும். இந்த கார்களில் உங்களுக்கு எது பிடித்திருக்கிறது என கமெண்டில் சொல்லுங்கள்.


Click it and Unblock the Notifications









