இந்தியாவில் நிறைய பணக்காரர்கள் இருக்கிறார்களா என்ன...? பென்ஸ் கார்கள் விற்பனைக்குவர வரிசைக்கட்டி நிற்குது!
மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனம். விற்பனையில் முன்னணியில் இருப்பதற்கு காரணம், அந்த அளவிற்கு நிறைய கார்கள் மெர்சிடிஸ் நிறுவனத்தில் இருந்து மார்க்கெட்டில் சந்தைப்படுத்தப் படுகின்றன. இந்த வகையில், இந்த 2024ஆம் வருடத்திலும் நிறைய புது, புது கார்களை அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் திட்டமிட்டுள்ளது. அவற்றை இங்கே காணலாம்.
ஜி.எல்.ஏ ஃபேஸ்லிஃப்ட் (GLA Facelift): உலகளவில் மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி.எல்.ஏ ஃபேஸ்லிஃப்ட் கார் கடந்த 2023 மே மாதத்தில் வெளியீடு செய்யப்பட்டது. இந்த கார் இந்தியாவில் வருகிற 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் விற்பனைக்கு வர உள்ளது. பழைய ஜிஎல்ஏ காருடன் ஒப்பிடுகையில், புதிய ஜிஎல்ஏ ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்கம் முற்றிலுமாக மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.

ஜி.எல்.பி ஃபேஸ்லிஃப்ட் (GLB Facelift): ஜி.எல்.ஏ காரை போன்று, இந்தியாவில் மெர்சிடிஸ்-பென்ஸின் 7-சீட்டர் எஸ்யூவி காரான ஜிஎல்பி மாடலும் விரைவில் ஃபேஸ்லிஃப்ட் அப்கிரேடை பெற உள்ளது. இதன்படி, ஜிஎல்பி காரின் வெளிப்பக்கம் மற்றும் உட்பக்கம் என இரு பக்கங்களிலும் அப்டேட்கள் வழங்கப்பட உள்ளன. இவ்வளவு ஏன், காரின் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் கூட அப்கிரேட் செய்யப்பட்டுள்ளது.
ஜி.எல்.எஸ் ஃபேஸ்லிஃப்ட் (GLS Facelift): ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க சந்தைகளில் சமீபத்தில்தான் இந்த காரை மெர்சிடிஸ் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது. அதனை தொடர்ந்து சில மாதங்களிலேயே ஜிஎல்எஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. இந்த காரின் இந்திய அறிமுகத்தை 2024ஆம் ஆண்டின் முதல் சில மாதங்களுக்குள் எதிர்பார்க்கிறோம்.

புதிய ஜி.எல்.சி கூபே (New GLC Coupe): தற்சமயம் விற்பனையில் உள்ள ஜிஎல்சி எஸ்யூவி காரின் கூபே வெர்சன் தான் புதிய ஜிஎல்சி கூபே ஆகும். வழக்கமான ஜிஎல்சி காருடன் ஒப்பிடுகையில், இந்த காரில் மேற்கூரை ஆனது சற்று வித்தியாசமாக இருக்கும். முன்பு விற்பனையில் இருந்த ஜிஎல்சி கூபே காரை விட புதிய மாடல் அளவில் பெரியதாக உள்ளது. இந்த காரின் அறிமுகத்தையும் 2024ஆம் ஆண்டின் முதல் பாதிக்குள் எதிர்பார்க்கும்.

புதிய ஏஎம்ஜி ஜிடி (New AMG GT): முன்பு விற்பனையில் இருந்த மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி காரை விட புதிய மாடல் அளவில் பெரியதாக இருக்கும். இதன் விளைவாக, காருக்குள் பெரிய இடவசதியை மெர்சிடிஸ் நிறுவனத்தால் கொண்டுவர முடிந்துள்ளது. மேலும், கூடுதலாக 2 இருக்கைகளையும் பொருத்த முடிந்துள்ளது. அத்துடன், பின்பக்க பூட்ஸ்பேஸும் புதிய ஏஎம்ஜி ஜிடி காரில் அளவில் பெரியதாக இருக்கும். இந்த காரின் அறிமுகத்தை 2024ஆம் ஆண்டின் மத்தியில் எதிர்பார்க்கிறோம்.

புதிய இ-கிளாஸ் (New E-Class): 6ஆம் தலைமுறை மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் கார் 2024ஆம் ஆண்டின் தீபாவளி சமயத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இ-கிளாஸ் கார்களின் சிறப்பே அவற்றின் நீளமான தோற்றம் ஆகும். ஆனால், 6ஆம் ஜென்ரேஷன் இ-கிளாஸ் வழக்கத்தை காட்டிலும் இன்னும் நீளமானதாக இருக்கும்.

இ.க்யூ.ஜி எஸ்யூவி (EQG SUV): உலகம் முழுவதும் பலத்த எதிர்பார்ப்பை உருவாக்கி இருக்கும் மெர்சிடிஸ் கார்களுள் ஒன்று இதுவாகும். ஏனெனில், மெர்சிடிஸின் ஜி-கிளாஸ் கார்கள் உலகம் முழுவதும் பிரபலமானவை. மஹிந்திரா தார், ஜிம்னியை போன்று தோற்றம் கொண்டது ஜி-கிளாஸ் ஆகும். ஆனால் அவற்றை காட்டிலும் பல மடங்கு உயர் தரத்திலானது. இப்படிப்பட்ட ஜி-கிளாஸின் எலக்ட்ரிக் வெர்சன் இ.க்யூ.ஜி என்ற பெயரில் 2024ஆம் ஆண்டின் இறுதியில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படலாம்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இவை மட்டுமின்றி, மேபக் இ.க்யூ.எஸ் எஸ்யூவி, சி.எல்.இ கார்களையும் இந்தியாவில் அடுத்த 2024ஆம் ஆண்டில் அறிமுகம் செய்ய மெர்சிடிஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. திட்டமிட்டவை அனைத்தும் நடக்கும் என கூறிவிட முடியாது அல்லவா. ஆதலால், மேற்கூறப்பட்ட கார்களில் சிலவற்றின் அறிமுகத்தை மெர்சிடிஸ் தள்ளி வைக்கலாம் அல்லது இந்த லிஸ்ட்டிலேயே இல்லாத ஒரு கார் புதியதாக அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications









