இந்த செப்டம்பருல இத்தன கார்கள் அறிமுகமாக இருக்குதா! எல்லாமே கன்ஃபார்மா? கார் வாங்க சிறந்த மாசம்!..
இன்று செப்டம்பர் (வெள்ளிக் கிழமை) முதல் நாள். இந்த 2023 ஆம் ஆண்டு நேற்றுதான் தொடங்கியதைப் போல் இருக்கின்றது. ஆனால், அதுக்குள்ளாக 8 மாதங்கள் முடிந்து தற்போது 9ஆம் மாதம் தொடங்கிவிட்டது. முந்தைய மாதங்களைப் போலவே இந்த செப்டம்பர் மாதமும் மின்னல் வேகத்தில் ஓடிவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதேபோல், கடந்த மாதங்களைப் போலவே இந்த மாதத்திலும் சில கார் உற்பத்தியாளர்கள் சில சூப்பரான கார் மாடல்கள் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அப்படி எந்தெந்த நிறுவனத்தின் கார்கள் இந்த மாதத்தில் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.

ஹோண்ட எலவேட் எஸ்யூவி (Honda Elevate SUV): இந்த காரின் அறிமுகம் அடுத்த மூன்று தினங்களில் அரங்கேற இருக்கின்றது. அதாவது, வரும் 4ஆம் தேதி இந்த காரின் அறிமுகம் அரங்கேற இருக்கின்றது. இந்த காரை ஏற்கனவே ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்துவிட்டது.
மேலும், புக்கிங்கைகூட அது தொடங்கிவிட்டது. இதன் விலையை அறிவித்து அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வருவது மட்டும்தான் பாக்கி. இதையே விரைவில் ஹோண்டா வரும் நாளில் செய்ய இருக்கின்றது. இந்த காரில் 1.5 லிட்டர் ஐ-விடெக் பெட்ரோல் எஞ்ஜினையே ஹோண்டா பயன்படுத்தி இருக்கின்றது.
இதே எஞ்ஜினையே தனது புதிய சிட்டி கார் மாடலில் ஹோண்டா பயன்படுத்தி இருக்கின்றது. இந்த மோட்டாருடன் சேர்த்து ஏகப்பட்ட தொழில்நுட்ப வசதிகளையும் இந்த காரில் ஹோண்டா வழங்கி உள்ளது. அந்தவகையில், 10.25 அங்குல தொடுதிரை சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் திரை, ஆறு ஏர் பேக்குகள் மற்றும் அடாஸ் (Advanced Driver Assistance System) உள்ளிட்ட அம்சங்கள் வழங்கப்பட இருக்கின்றன.
டாடா நெக்ஸான் ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon Facelift) மாடல்: டாடாவின் அசத்தலான மற்றும் அதிக பாதுகாப்பை வழங்கும் வசதிக் கொண்ட கார் மாடலாக நெக்ஸான் இருக்கின்றது. இந்த கார் மாடலின் விற்பனையை இரட்டிப்பாக்கும் நோக்கில் டாடா தற்போது அதனை புதுப்பித்தலுக்கு உட்படுத்தி வருகின்றது.
ஏற்கனவே இந்த காரை சோதனையோட்டம் செய்யவும் தொடங்கிவிட்டது. இந்த காரையே வருகின்ற 14 ஆம் தேதி டாடா மோட்டார்ஸ் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது விற்பனையில் நெக்ஸான் வடிவமைப்பு டிசைன் அப்படியே பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
ஆனால், லுக் வேற லெவலுக்கு அப்கிரேட் செய்யப்பட்டு இருக்கின்றது. புதிய அமைப்பிலான ஹெட்லைட், பகல் நேரத்தில் ஒளிரும் மின் விளக்குகள், பம்பர் மற்றும் க்ரில் உள்ளிட்டவை சேர்க்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, 10.25 அங்குல தொடுதிரை சிஸ்டம், டிஜிட்டல் டிரைவர் திரை, 360 டிகிரி கேமிரா மற்றும் ஆறு ஏர் பேக்குகள் உள்ளிட்ட அம்சங்களும் அதில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
டாடா நெக்ஸான் இவி ஃபேஸ்லிஃப்ட் (Tata Nexon EV Facelift) மாடல்: டாடா நிறுவனம் அதன் நெக்ஸான் கார் மாடலை மின்சார வெர்ஷனிலும் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இதன் புதுப்பிக்கப்பட்ட மாடலையும் அது விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டுள்ளது. இந்த கார் மாடலின் அறிமுகம் வருகின்றது 14 ஆம் தேதி எதிர்பார்க்கப்படுகின்றது.
ஆனால், இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதேபோல், என்ன மாதிரியான மாற்றங்கள் மற்றும் அப்கிரேட் விஷயங்கள் செய்யப்பட்டு இருக்கின்றன என்பதும் தெரியவில்லை. இருப்பினும், தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் இந்த காரில் 10.25 அங்குல தொடுதிரை சிஸ்டம், புதிய டிரைவருக்கான திரை மற்றும் 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா ஆகிய அம்சங்களும் எதிர்பார்க்கப்படுகின்றன.
மெர்சிடிஸ் பென்ஸ் இக்யூஇ எஸ்யூவி (Mercedes-Benz EQE SUV): இந்திய சொகுசு கார் பிரியர்கள் பலரின் எதிர்பார்ப்பாக இந்த கார் இருக்கின்றது. இது ஜிஎல்இ சொகுசு கார் மாடலின் மின்சார வெர்ஷன் ஆகும். ஓர் முழு சார்ஜில் இந்த எலெக்ட்ரிக் காரில் 407 கிமீ தூரம் தொடங்கி 433 கிமீ தூரம் வரை டிராவல் செய்ய முடியும்.
இரு வெவ்வேறு விதமான பேட்டரி பேக்குகள் தேர்வில் இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது. 89kWh மற்றும் 90.6kWh பேட்டரி பேக் தேர்வுகளே எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, ரியல் வீல் டிரைவ் மற்றும் அனைத்து வீல்களும் இயங்கும் தேர்வு என்கிற ஆப்ஷனும் இந்த காரில் வழங்கப்பட இருக்கின்றது. சிறப்பம்சங்கள் விஷயத்தில் இந்த கார் வேற லெவல் வாகனமாக இருக்கப் போகின்றது.
இதேபோல், லக்சூரி அம்சங்களையும் இந்த காரில் பென்ஸ் வாரி வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, இந்த காரில் 56 அங்குல எம்பியூஎக்ஸ் பவர்டு ஹைபர்ஸ்கிரீன் இடம் பெற இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மூன்று விதமான திரைகளின் தொகுப்பை உள்ளடக்கியதே இந்த ஹைபர்ஸ்கிரீன் ஆகும். சுமார் 1 கோடி ரூபாய்க்கும் அதிகமான விலையைக் கொண்டதாக இந்த கார் விற்பனைக்கு வர இருக்கின்றது.
வால்வோ சி40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge): அதிக சொகுசு வசதிகள் நிரம்பிய ஓர் எலெக்ட்ரிக் காராக இதனை வால்வோ உருவாக்கி இருக்கின்றது. இதன் அறிமுகம் வருகின்றது 4ஆம் தேதி அன்றே அரங்கேற இருக்கின்றது. இது ஓர் கூபே வகை சொகுசு எலெக்ட்ரிக் காராகும். இந்த எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 530 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.
மேலும், இந்த காரில் உள்ள பேட்டரி பேக்கை வெறும் 27 நிமிடங்களிலேயே 10 சதவீதத்தில் இருந்து 80 சதவீதம் வரை சார்ஜ் செய்துக் கொள்ள முடியும். அடாஸ், 360 டிகிரி பார்வை திறன் என ஏகப்பட்ட அம்சங்களுடன் இந்த கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கின்றது.
அஸ்டன் மார்டின் டிபி 12 (Aston Martin DB12): ஹாலிவுட் திரைப்படங்களில் மட்டுமே பார்க்கக் கூடிய ஓர் சூப்பரான காராக அஸ்டன் மார்டின் டிபி12 இருக்கின்றது. இந்த காரே நம்ம இந்தியாவில் வருகின்ற 29 ஆம் தேதி விற்பனைக்கு வர இருக்கின்றது.
சூப்பர் டூரர் (Super Tourer) என்கிற செல்ல பெயரில் அழைக்கப்படும் இந்த கார் மணிக்கு 325 கிமீ வேகத்தில் பயணிக்கும் திறன் கொண்டது. இதனை ரூ. 4.8 கோடிக்கு தயாரிப்பு நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் இந்த கார்கள் மட்டுமில்லைங்க இன்னும் பல கார் மாடல்கள் அடுத்தடுத்து என விற்பனைக்கு வர இருக்கின்றன. இந்த லிஸ்டில் இல்லாத கார்களையும் வாகன உற்பத்தியாளர்கள் நாட்டில் விற்பனைக்குக் கொண்டு வர திட்டமிட்டு இருக்கின்றன. ஆகையால், இந்த செப்டம்பர் கார் பிரியர்களுக்கு மிகப் பெரிய விருந்தளிக்கும் மாதமாக இருக்கப்போகின்றது.


Click it and Unblock the Notifications








