வளர்த்துவிட்ட மாருதி சுஸுகிக்கே ஆப்பு வைக்க ரெடியாகும் டொயோட்டா!! அடுத்து விற்பனைக்குவர போகிற கார்கள்!
டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் (Toyota Kirloskar Motor) நிறுவனம் அடுத்த 3 வருடங்களில் பல்வேறு புதிய கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய திட்டமிட்டுள்ளது. இவற்றில் சில கார்கள் எலக்ட்ரிக் ஆகும். இவ்வாறு அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்குவர உள்ள டொயோட்டா கார்களை பற்றி இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
டொயோட்டா அர்பன் க்ரூஸர் டைஸர்: விரைவில் 2024ஆம் ஆண்டின் துவக்கத்தில் டொயோட்டா நிறுவனம் அதன் புதிய காம்பெக்ட் எஸ்யூவி கூபே காரை அறிமுகப்படுத்த உள்ளது. இது, மாருதி நிறுவனத்தில் இருந்து விற்பனையில் இருக்கும் ஃப்ரான்க்ஸ் காரின் ரீபேட்ஜ்டு வெர்சனாக இருக்கும். 5 இருக்கைகளை மட்டுமே கொண்ட பிரீமியம் ரக ஹேட்ச்பேக் காராக இது இருக்கும்.

டொயோட்டா ஃபார்ச்சூனர் & ஹிலுக்ஸ் மைல்ட்-ஹைப்ரீட்: டொயோட்டா தற்சமயம் விற்பனை செய்துவரும் ஹிலுக்ஸ் பிக்-அப் ட்ரக்கின் மைல்ட்-ஹைப்ரீட் வெர்சன் ஐரோப்பாவில் சமீபத்தில்தான் வெளியீடு செய்யப்பட்டது. ஐரோப்பாவை தொடர்ந்து இந்த மைல்ட்-ஹைப்ரீட் பிக்-அப் ட்ரக் வாகனம் இந்தியாவிலும் அறிமுகம் செய்யப்படலாம். அதேபோல், ஃபார்ச்சூனர் காரிலும் இந்த மைல்ட்-ஹைப்ரீட் தொழிற்நுட்பத்தை வழங்க டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா எலக்ட்ரிக் எஸ்யூவி: இந்தியாவில் டொயோட்டா விற்பனைக்கு கொண்டுவரும் முதல் எலக்ட்ரிக் காராக இது இருக்கும். ஆனால், இது அறிமுகம் 2025இல் தான் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மாருதி சுஸுகி நிறுவனம் சமீபத்தில் வெளியீடு செய்த இ.வி.எக்ஸ் கான்செப்ட்டில் இருந்து நிறைய விஷயங்களை இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி கார் கொண்டதாக இருக்கும்.

7-சீட்டர் டொயோட்டா கரோல்லா கிராஸ் & நெக்ஸ்ட்-ஜென் ஃபார்ச்சூனர்: டொயோட்டா கரோல்லா காரின் லாங்-வீல்பேஸ் வெர்சனும் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஆனால், இது விற்பனைக்கு வருவதற்குள் 2026 வந்துவிடும். டொயோட்டா நிறுவனம் கர்நாடகாவில் புதிய தொழிற்சாலையை வாங்கவுள்ளதாக சமீபத்தில் செய்திகளை பார்த்திருப்பீர்கள். அந்த புதிய தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் முதல் கார்களுள் ஒன்றாக 7-சீட்டர் கரோல்லா இருக்கும்.

டொயோட்டா காம்ரி ஹைப்ரீட் ஃபேஸ்லிஃப்ட்: 2023 லாஸ் ஏஞ்சல்ஸ் ஆட்டோ கண்காட்சியில் டொயோட்டா காம்ரி ஃபேஸ்லிஃப்ட் கார் உலகளவில் முதல்முறையாக காட்சிப்படுத்தப்பட்டது. முற்றிலும் புதுமையான முன்பக்கத்துடன் உருவாக்கப்பட்டு உள்ள காம்ரி ஃபேஸ்லிஃப்ட் கார் இந்தியாவில் 2025இல் அறிமுகம் செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை குறைவான டொயோட்டா ஃபார்ச்சூனர் & ஹிலுக்ஸ்: பிரபலமான ஃபார்ச்சூனர் மற்றும் ஹிலுக்ஸ் பிக்-அப் ட்ரக் இரண்டும் ஒரே மாதிரியான பிளாட்ஃபாரத்தில்தான் உருவாக்கப்படுகின்றன. இதனாலேயே, இவை இரண்டிற்கும் ஒரே நேரத்தில் அப்டேட்டை கொண்டுவர டொயோட்டாவால் முடிகிறது. இந்த வகையில், விலை குறைவான ஃபார்ச்சூனர் மற்றும் ஹிலுக்ஸ் வாகனங்களை அடுத்ததாக விற்பனைக்கு கொண்டுவர டொயோட்டா திட்டமிட்டுள்ளது.

டொயோட்டா லேண்ட் க்ரூஸர் எஃப்.ஜே: 'லேண்ட் க்ரூஸர் எஃப்ஜே' என்ற பெயரை ஏற்கனவே டொயோட்டா பயன்படுத்தி வந்துள்ளது. இருப்பினும், மீண்டும் பிராடோ காரின் அடிப்படையில் உருவாக்கப்படும் 4x4 காம்பெக்ட் எஸ்யூவி காருக்கு இந்த பெயரை உபயோகப்படுத்த டொயோட்டா திட்டமிட்டுள்ளது. மாருதி சுஸுகி ஜிம்னி போல, இது ஆஃப்-ரோடர் ஆக இருக்கும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா, இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. கடந்த சில வருடங்களாக, மாருதி சுஸுகியின் அரவணைப்பில் இந்திய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்த டொயோட்டா, மேற்கூறப்பட்டுள்ள எதிர்கால கார்களை வைத்து பார்க்கும்போது, தனது யுக்தியை மாற்றிக் கொண்டு, வெளிநாடுகளில் விற்பனையில் உள்ள கார்களை இந்தியா கொண்டுவர திட்டமிட்டுள்ளதை அறிய முடிகிறது.


Click it and Unblock the Notifications









