TN நம்பர் பிளேட்டுடன் தமிழகத்தில் சுற்றி திரிந்த விநோத கார்.. இந்த நிறுவனத்தோட காரா இது?..
தமிழக பதிவெண் உடன் இதுவரை யாரும் கண்டிராத விநோத கார் ஒன்று தமிழகத்தின் சாலையில் சுற்றி வந்தபோது புகைப்படம் எடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த கார் எந்த நிறுவனத்திற்கு சொந்தமானது?, அதன் சிறப்புகள் என்ன? மற்றும் ஏன் தமிழக சாலையில் அந்த கார் சுற்றி வந்தது என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாருங்கள் விரிவான பதிவிற்குள் போகலாம்.
தமிழகத்தின் முக்கிய சாலையில் விநோத கார் ஒன்று தமிழக பதிவெண்ணுடன் சுற்றி திரிந்தபோது எடுக்கப்பட்ட புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகிக் கொண்டிருக்கின்றது. இதுவரை யாரும் கண்டிராத ஓர் வாகனமாக அது இருந்ததால் பலரின் கவனத்தை அந்த கார் ஈர்த்திருக்கின்றது. மேலும், கார் முழுக்க மறைப்புகளுடன் இருந்த காரணத்தினால் அது எந்த நிறுவனத்தின் தயாரிப்பு என்கிற சந்தேகமும் எழும்பி இருக்கின்றது.

காரின் வெளிப்புற தோற்றத்தை வைத்து பார்க்கையில் இது வெளிநாட்டு நிறுவனத்தின் தயாரிப்பாக இருக்குமோ என சந்தேகிக்க வைக்கின்றது. ஆனால், இது நம்ம உள்ளூர் நிறுவனத்தின் தயாரிப்பு என்பது குறிப்பிடத்தகுந்தது. புகழ்பெற்ற மஹிந்திரா நிறுவனத்தின் புதுமுக கார் மாடல் இதுவாகும். இந்த காரை விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே தற்போது சோதனையோட்டத்தில் இக்காரை மிக தீவிரமாக மஹிந்திரா ஈடுபடுத்தி வருகின்றது. கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மஹிந்திரா நிறுவனம் சில கான்செப்ட் மாடல்களைக் காட்சிப்படுத்தி இருந்தது. அதில் ஒன்றே இந்த கார் ஆகும். பிஇ.05 கார் மாடலே இது ஆகும். இது ஓர் எலெக்ட்ரிக் கார் ஆகும்.

அதேவேளையில், இந்த கார் முழுமையாக மறைக்கப்பட்டிருந்த காரணத்தினால் அது பிஇ.05தானா என்பதும் சந்தேகமாக இருக்கின்றது. ஏனெனில் எக்ஸ்யூவி 500 கார் மாடலின் அப்டேட் செய்யப்பட்ட வெர்ஷனும் இதேமாதிரியான ஸ்டைலிலேயே உருவாக்கப்பட்டு வருகின்றது. அதாவது, கூபே எஸ்யூவி ரக ஸ்டைலில் உருவாக்கப்பட்டு வருகின்றது.
அதேநேரத்தில், இந்த சோதனையோட்ட கார் மாடலில் பயன்படுத்தப்பட்டு இருக்கும் சில அம்சங்கள் இது பிஇ.05 தானோ எனவும் சந்தேகிக்கச் செய்யும் வகையில் இருக்கின்றது. முன்னதாக காட்சிப்படுத்தப்பட்ட பிஇ.05 கான்செப்ட் மாடலில் சி வடிவ எல்இடி டிஆர்எல்கள், செதுக்கப்பட்ட அமைப்புடைய பான்னெட், சதுரமான வீல் ஆர்ச்சுகள் மற்றும் ஸ்போர்ட்டி அலாய் வீல்கள் உள்ளிட்டவை பயன்படுத்தப்பட்டு இருந்தன.

இந்த அம்சங்கள் அனைத்தும் முதல் முறையாக கேமிராவின் கண்களில் சிக்கி இருக்கும் இந்த காரிலும் இடம் பெற்றிருக்கின்றன. அதேவேளையில், பிஇ.05 கான்செப்ட் மாடலில் கேமிராவை அடிப்படையாகக் கொண்ட சைடு வியூ மிர்ரர்கள் வழங்கப்பட்டு இருந்தன. ஆனால், இப்போது காட்சிக்குள்ளாகி இருக்கும் சோதனையோட்ட மாடலில் வழக்கமான கண்ணாடிகளே வழங்கப்பட்டு இருக்கின்றன.
இதுமாதிரியான மாற்றங்களாலேயே இது எந்த மாடல் என்பதை துள்ளியமாக கூற முடியவில்லை. அதேநேரத்தில் பிஇ.05 அல்லது புதிய எக்ஸ்யூவி500 இரண்டில் ஏதோ ஒன்றாக மட்டுமே இந்த கார் இருக்கும் என எங்களால் யூகிக்க முடிகின்றது. மஹிந்திரா நிறுவனம் இந்தியா மற்றும் உலக சந்தையைக் கருத்தில் கொண்டே தனது பிஇ.05 எலெக்ட்ரிக் காரை உருவாக்கிக் கொண்டிருக்கின்றது.
அந்த காரின் தோற்றம் வெளிநாட்டு நிறுவனங்களின் தயாரிப்புகளுக்கே டஃப் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கின்றது. தோற்றம் மட்டுமல்ல காரில் உட்பக்கத்தில் வழங்கப்பட்டு இருக்கும் அம்சங்களும் நம்மை ஆச்சரியத்தில் மூழ்க வைக்கும் வகையிலேயே இருக்கின்றன. குறிப்பாக, அதன் ரேஞ்ஜ் உங்களை வியப்பின் உச்சத்திற்கே அழைத்துச் செல்லும்.
ஏனெனில் பிஇ.05 எலெக்ட்ரிக் காரில் ஓர் முழு சார்ஜில் 400கிமீ முதல் 500கிமீ தூரம் வரை பயணிக்க முடியும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. மஹிந்திரா நிறுவனம் இந்த காரை இங்க்ளோ எனும் பிளாட்பாரத்தில் தயாரிக்க இருக்கின்றது. நிறுவனத்தின் மின்சார வாகனங்களுக்கு என பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட தளம் இதுவாகும்.
பிளேட் மற்றும் பிரிஸ்மேடிக் செல் என இரண்டு ஆர்கிடெக்சரையும் பயன்படுத்தியே இந்த காரை அது உருவாக்கி வருகின்றது. cேலும், ஆல் வீல் டிரைவ் சிஸ்டம், வெறும் 5-6 செகண்டுகளில் மணிக்கு 100 கிமீ வேகத்தை எட்டும் திறன் உள்ளிட்டவற்றைக் கொண்ட எலெக்ட்ரிக் காராகவும் அது தயாராகி வருகின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: மஹிந்திரா நிறுவனம் எக்ஸ்யூவி ரேஞ்ஜ் மற்றும் பிஇ ரேஞ்ஜ் இரு பிரிவுகளின் கீழே விரைவில் பலதரப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதில், ஒன்றே பிஇ.05 ஆகும். இப்போது நிறுவனத்தின்கீழ் எக்ஸ்யூவி400 இவி விற்பனைக்குக் கிடைக்கின்றது. இதன் வரிசையில் விரைவில் இப்போது தரிசனம் வழங்கி இருக்கும் கார் இணையும் எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









