ஆயுசுக்கும் மறக்க முடியாத கார்! கம்பேக் குடுக்க ரெடியானது டாடா சியாரா! அந்த காலத்துக்கே போன மாதிரி ஃபீல் ஆகுது
ஒரு காலத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களை மீண்டும் விற்பனைக்கு கொண்டு வருவது என்பது இந்தியாவில் ஒரு 'டிரெண்ட்' ஆக மாறி வருகிறது. பெயர்கள் ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருக்கும் நிலையில், தற்போதைய காலகட்டத்திற்கு ஏற்ப அதிநவீன வசதிகளை வழங்கி, வாடிக்கையாளர்களை எளிதாக கவர முடியும் என்பதுதான் இதற்கு காரணம்.
இதன்படி இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்து வந்த 2 கார்கள், கூடிய விரைவில் 'கம்பேக்' கொடுக்கவுள்ளன. இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள அந்த 2 கார்கள் குறித்த சுவாரஸ்யமான தகவல்களின் தொகுப்புதான் இந்த செய்தி.

டாடா சியாரா (Tata Sierra): ஒரு காலத்தில் இந்திய சந்தைகளை ஆட்சி செய்த எஸ்யூவி (SUV) ரக கார் இது. டாடா சியாரா காரை தெரியாதவர்கள் யாரும் இருக்க முடியாது என்று சொல்லும் அளவிற்கு, இது மிகவும் பிரபலம். கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை டாடா சியாரா உற்பத்தி செய்யப்பட்டது.
சுமார் 12 வருடங்கள் மட்டுமே உற்பத்தியில் இருந்தாலும் கூட, டாடா சியாரா காரின் பெயர் இன்றளவும் வாடிக்கையாளர்களின் மனதை விட்டு அகலவில்லை. எனவே டாடா சஃபாரி (Tata Safari) காரை போலவே, டாடா சியாரா காரையும் மீண்டும் விற்பனைக்கு கொண்டு வர டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

நடப்பாண்டு தொடக்கத்தில் நடைபெற்ற 2023 ஆட்டோ எக்ஸ்போ (2023 Auto Expo) வாகன திருவிழாவில், டாடா சியாரா கார் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது. டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஜென் 2 சிக்மா (Gen 2 Sigma Platform) பிளாட்பார்ம் அடிப்படையில் டாடா சியாரா கட்டமைக்கப்படவுள்ளது.
இது தற்போது உள்ள ஆல்ஃபா பிளாட்பார்மின் (ALFA Platform) வெகுவாக மாற்றியமைக்கப்பட்ட வெர்ஷன் ஆகும். டாடா சியாரா காரின் நீளம் சுமார் 4.3 மீட்டர்கள் என்ற அளவில் இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. இங்கே குறிப்பிட வேண்டிய மற்றொரு முக்கியமான விஷயம் என்னவென்றால், டாடா சியாரா காரானது, ஐசி இன்ஜின் வெர்ஷன் மட்டுமல்லாது, எலெக்ட்ரிக் வெர்ஷனிலும் வரவுள்ளது என்பதுதான்.
இதில் எலெக்ட்ரிக் வெர்ஷனின் டிரைவிங் ரேஞ்ச் சுமார் 500 கிலோ மீட்டர் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப பல்வேறு அதிநவீன வசதிகளையும் டாடா சியாரா கொண்டிருக்கும் என்பதில் சந்தேகமில்லை. வரும் 2025ம் ஆண்டில் டாடா சியாரா விற்பனைக்கு வரும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

ரெனால்ட் டஸ்டர் (Renault Duster): இந்திய சந்தையில் மிகப்பெரிய அளவில் 'ஹிட்' அடித்த ரெனால்ட் கார்களின் பட்டியலில், டஸ்டர் முக்கியமான இடத்தை பெறும். இதுவும் டாடா சியாராவை போல், எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார்தான். கடந்த 2012ம் ஆண்டு தொடங்கப்பட்ட ரெனால்ட் டஸ்டர் காரின் உற்பத்தி, கடந்த 2022ம் ஆண்டு தொடக்கத்தில் நிறுத்தப்பட்டது.
சுமார் 10 ஆண்டு காலம் உற்பத்தியில் இருந்த ரெனால்ட் டஸ்டர் காரும், இந்தியாவில் 'கம்பேக்' கொடுக்க தயாராகி விட்டது. இதற்கு முன்னோட்டமாக புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் கார் சமீபத்தில் பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டது. டாடா சியாராவை போல், புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரும் வரும் 2025ம் ஆண்டுதான் விற்பனைக்கு வரவுள்ளதாக தெரிகிறது.

இந்திய சந்தைக்கான புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் காரில் மொத்தம் 2 இன்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம் என கூறப்படுகிறது. இதில், ஸ்ட்ராங் ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.6 லிட்டர் நான்கு சிலிண்டர் பெட்ரோல் இன்ஜின் ஒன்றாகும். மற்றொன்று 48V மைல்டு ஹைப்ரிட் தொழில்நுட்பத்துடன் கூடிய 1.2 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: டாடா சியாரா மற்றும் ரெனால்ட் டஸ்டர் ஆகிய 2 எஸ்யூவி கார்களுமே ஏற்கனவே மிகவும் பிரபலமாக இருந்தவைதான். எனவே புதிய அவதாரத்தில் திரும்பி வரும்போது, அவை நிச்சயமாக பெரும் அளவில் வெற்றி பெறும் என நாங்கள் கருதுகிறோம்.


Click it and Unblock the Notifications









