Volkswagen ID.4 எலக்ட்ரிக் கார் இந்திய சந்தைக்கு வருதா? காரின் லுக் இப்படிதான் இருக்கும்!!
இந்தியாவில் விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக எதிர்பார்க்கப்படும் ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 இவி அறிமுகத்திற்கு முன்னதாக நம் நாட்டில் காட்சி தந்துள்ளது. இதுகுறித்து நமக்கு கிடைக்க பெற்றுள்ள படங்களையும், இந்த ஃபோக்ஸ்வேகன் எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி பார்க்கலாம்.
ஜெர்மனியை சேர்ந்த உலகளவில் பிரபலமான ஆட்டோமொபைல் நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் அதன் முதல் எலக்ட்ரிக் வாகனமாக ஐடி.4 எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் காரை அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. இதற்கிடையில் இந்த எலக்ட்ரிக் கார் சமீபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் காட்சிக்காக நிறுத்தப்பட்டுள்ளது. அப்போது நமது டிரைவ்ஸ்பார்க் குழுவினரால் எடுக்கப்பட்ட புகைப்படங்களை இங்கு காணலாம்.

சர்வதேச சந்தைகளில் விற்பனையில் உள்ள ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலக்ட்ரிக் கார் தான் இந்தியாவிற்கும் வருகிறது. ஏற்கனவே கூறியதுபோல், இந்தியாவில் முதல் எலக்ட்ரிக் காராக விளங்கும் இதற்கு விற்பனையில் கியா இவி6 எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் முக்கிய போட்டியாக விளங்கவுள்ளது. ஃபோக்ஸ்வேகனின் எம்இபி பிளாட்ஃபாரத்தின் அடிப்படையில் ஐடி.4 எலக்ட்ரிக் கார் உருவாக்கப்படுகிறது.
ஐடி.4 மட்டுமின்றி, சமீபத்தில் உலகளவில் வெளியீடு செய்யப்பட்ட ஐடி.7 எலக்ட்ரிக் கார் உள்பட ஃபோக்ஸ்வேகன் ஐடி எலக்ட்ரிக் கார்கள் அனைத்தும் இந்த பிளாட்ஃபாரத்தை அடிப்படையாக கொண்டே உருவாக்கப்படுகின்றன. விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வரும் ஐடி.4 எலக்ட்ரிக் காரில் 82kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பை ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் வழங்குகிறது. இந்த பேட்டரியை முழுவதுமாக சார்ஜ் நிரப்பினால் அதிகப்பட்சமாக 500கிமீ வரையில் காரை இயக்கி செல்லலாம்.

இந்த எலக்ட்ரிக் கிராஸ்ஓவர் காரில் வழங்கப்படும் எலக்ட்ரிக் மோட்டார் ஆனது அதிகப்பட்சமாக 299 எச்பி மற்றும் 460 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. ஐடி.4 எலக்ட்ரிக் காரில் 0-100kmph வேகத்தை வெறும் 6 வினாடிகளில் எட்டிவிட முடியும். இந்த எலக்ட்ரிக் காரின் டாப்-ஸ்பீடு 180kmph ஆகும். ஐடி.4 காரின் டாப் வேரியண்ட் ஜிடிஎக்ஸ் என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இந்த டாப் வேரியண்ட் ஆல்-வீல்-டிரைவ் சிஸ்டத்துடன் கிடைக்கிறது.
தோற்றத்தை பொறுத்தவரையில், கிராஸ்ஓவர் கார் என்பதால் ஐடி.4 நிமிர்ந்த எஸ்யூவி ரக உடலமைப்பை கொண்டுள்ளது. அதாவது காரின் உயரம் சற்று அதிகமாக இருக்கும். அதுவே ஜிடிஎக்ஸ் வெர்சனில் சில பாகங்கள் ஸ்போர்டியர் தோற்றத்திற்காக கூடுதலாக வழங்கப்படுகின்றன. அவற்றுடன் ஜிடிஎக்ஸ் முத்திரைகளும் ஐடி.4 ஜிடிஎக்ஸ் காரை சுற்றிலும் பொருத்தப்படுகின்றன. ஐடி.4 எலக்ட்ரிக் காரில் மேற்கூரை, ஸ்பாய்லர் மற்றும் ஏர் இண்டேக்குகள் உள்ளிட்டவை கருப்பு நிறத்தில் வழங்கப்படுகின்றன.

முன்பக்கத்தில் எல்இடி ஹெட்லைட்கள் பிரத்யேகமான டிசைனில் கொடுக்கப்படுகின்றன. அதேபோல், பின்பக்கத்தில் எல்இடி டெயில்லைட்களும் எக்ஸ்-வடிவ டிசைனில் பொருத்தப்படுகின்றன. காருக்கு உள்ளே டேஸ்போர்டில் பெரிய 12-இன்ச் டிஜிட்டல் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் திரை மற்றும் டிஜிட்டல் டிரைவர் திரை வழங்கப்படுகின்றன. இந்தியாவில் ஐடி.4 எலக்ட்ரிக் கார் தற்சமயம் சோதனை ஓட்டங்களில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: சோதனை ஓட்டங்கள் இறுதி கட்டத்தை நெருங்கிவிட்டதாலும், எந்தவொரு மறைப்பும் இன்றி இந்தியாவில் காட்சி தந்திருப்பதாலும், ஃபோக்ஸ்வேகன் ஐடி.4 எலக்ட்ரிக் காரின் அறிமுகத்தை நம் நாட்டில் விரைவில் எதிர்பார்க்கலாம். முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு, இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளதால், இந்த எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலையை சற்று அதிகமாகவே எதிர்பார்க்க முடியும்.


Click it and Unblock the Notifications









