வாடிக்கையாளர் புக் செய்தால் மட்டுமே காரை தயாரிப்போம்... புது யுக்தியை கையில் எடுத்த ஃபோக்ஸ்வேகன்!
இந்தியாவில் பிரீமியம் தர கார்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் நிறுவனங்களில் ஃபோக்ஸ்வேகன் (Volkswagen)ம் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் முன்னணி தயாரிப்புகளாக டைகுன் (Taigun) மற்றும் விர்சுஸ் (Virtus) ஆகியவை இருக்கின்றன. இந்த இரு கார் மாடல்களிலேயே ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய வேரியண்டுகளை (New Variants) விற்பனைக்குச் சேர்த்திருக்கின்றது.
இத்துடன், ஜிடி எட்ஜ் லிமிடெட் கலெக்சன் (GT Edge Limited Collection) எனும் சிறப்பு பதிப்பையும் அது சேர்த்திருக்கின்றது. இந்த தேர்வை மட்டும் புக்கிங் அடிப்படையில் மட்டுமே தயாரிக்கப் போவதாக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது ஓர் சிறப்பு பதிப்பு என்பதால் இதை ஸ்பெஷலாக அது தயாரிக்க இருக்கின்றது.

ஓர் நபர் ஜிடி எட்ஜ் லிமிடெட் கலெக்சனை புக் செய்யும்பட்சத்தில், அந்த குறிப்பிட்ட நபருக்கு என்றே கார் பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டு டெலிவரிக் கொடுக்கப்பட இருக்கின்றது. ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தின் பிரத்யேக வலைதளத்தில் இந்த காரை புக் செய்து கொள்ள முடியும். இப்போது புக் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு வரும் ஜூலை 2023இல் இருந்து டெலிவரி வழங்க ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் திட்டமிட்டு உள்ளது.
புதிய வேரியண்டுகளின் விபரம்: ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் மாடலில் ஜிடி டிஎஸ்ஜி (விலை ரூ. 16.79 லட்சம்), ஜிடி பிளஸ் எம்டி (விலை ரூ. 17.79 லட்சம்) ஆகிய தேர்வுகள் புதிதாக விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு உள்ளன. இதேபோல், விர்சுஸ் கார் மாடலில் புதிதாக ஜிடி பிளஸ் எம்டி தேர்வு விற்பனைக்குக் கொண்டு வரப்பட்டு இருக்கின்றது. இதன் விலை ரூ. 16.89 லட்சம் ஆகும்.

ஜிடி எட்ஜ் லிமிடெட் கலெக்சன் விபரம்: டைகுன் கார் மாடலில் ஜிடி பிளஸ் எம்டி, ஜிடி பிளஸ் டிஎஸ்ஜி என்கிற வேரியண்டுகளாக இந்த சிறப்பு பதிப்பு விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. இதில் பிரத்யேக நிற தேர்வாக டீப் பிளாக் பேர்ல், கார்பன் ஸ்டீல் கிரே மேட் ஆகியவை வழங்கப்படும்.
இதில், டீப் பிளாக் பேர்ல் நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் ஜிடி பிளஸ் எம்டிக்கு ரூ. 17.99 லட்சமும், டீப் பிளாக் பேர்ல் நிற தேர்வில் விற்பனைக்குக் கிடைக்கும் ஜிடி பிளஸ் டிஎஸ்ஜி-க்கு ரூ. 19.25 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

இதேபோல், கார்பன் ஸ்டீல் கிரே மேட் நிற தேர்வில் விற்பனைக்கு வந்திருக்கும் ஜிடி பிளஸ் எம்டி-க்கு ரூ. 18.19 லட்சமும், கார்பன் ஸ்டீல் கிரே மேட் நிற தேர்வில் கிடைக்கும் ஜிடி பிளஸ் டிஎஸ்ஜி-க்கு ரூ. 19.45 லட்சமும் விலை நிர்ணயம் செய்யப்பட்டு உள்ளது.

விர்சுஸ் கார் மாடலின் ஜிடி பிளஸ் எம்டி மற்றும் ஜிடி பிளஸ் டிஎஸ்ஜி ஆகியவற்றிலேயே ஜிடி எட்ஜ் லிமிடெட் கலெக்சன் விற்பனைக்குக் கிடைக்கும். டைகுனைப் போலவே இந்த கார் மாடலிலும் நிறத்திற்கு ஏற்பவே விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. ஜிடி பிளஸ் எம்டி டீப் பிளாக் பேர்ல்-க்கு ரூ. 17.09 லட்சமும், ஜிடி பிளஸ் டிஎஸ்ஜி டீப் பிளாக் பேர்ல்-க்கு ரூ. 18.76 லட்சம் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

இந்த நிறங்கள் அனைத்தும் பிரீமியம் நிறங்கள் ஆகும். நிறங்களுடன் சேர்த்து சில பிரத்யேக அணிகலன்களையும் அந்த வண்ண தேர்வுகளில் ஃபோக்ஸ்வேகன் சேர்த்து இருக்கின்றது. எனவேதான் அவற்றின் விலை நிறத்திற்கு ஏற்ப மாறுபட்டுக் காட்சியளிக்கின்றது. தற்போது விற்பனைக்கு வந்திருக்கும் புதிய தேர்வுகள் மற்றும் ஜிடி எட்ஜ் லிமிடெட் கலெக்சனில் பிரத்யேகமாக ஜிடி பேட்ஜ்-ம் இடம் பெற இருக்கின்றது.

அதிக திறனை வெளிப்படுத்தக் கூடிய கார் மாடல் அது என்பதை அடையாளப்படுத்தும் விதமாகவே ஜிடி லைன் பேட்ஜ்கள் புதிய தேர்வில் சேர்க்கப்பட்டு இருக்கின்றன. 1.5 லிட்டர் டிஎஸ்ஐ ஈவோ மோட்டாரே டைகுன் மற்றும் விர்சுஸ் ஆகிய மாடல்களின் புதிய தேர்வுகளிலும் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: போட்டிகளை சமாளிக்கும் விதமாகவும், தனக்கு தற்போது கிடைத்துக் கொண்டிருக்கும் வரவேற்பை இரட்டிப்பாக்கும் விதமாகவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் புதிய தேர்வுகளை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதன் வாயிலாக விர்சுஸ் மற்றும் டைகுன் இரண்டின் விற்பனையும் விரைவில் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









