பிரபலமான கார் மாடலின் விற்பனை திடீரென நிறுத்தம்! சொல்லாம கொள்ளாம இப்படி பண்ணீட்டாங்களே!
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஃபோக்ஸ்வேகன் டைகுன் (Volkswagen Taigun). இது மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்த சூழலில் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் 'ஆனிவர்சரி எடிசன்' (Anniversary Edition) மாடலின் விற்பனை தற்போது நிறுத்தப்பட்டுள்ளது.
ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் இருந்து டைகுன் ஆனிவர்சரி எடிசன் மாடல் தற்போது அதிரடியாக நீக்கப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து அதன் விற்பனையும் நிறுத்தப்பட்டுள்ளது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் கார் இந்திய சந்தையில் கடந்த 2021ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு, 1 ஆண்டு நிறைவடைந்ததை கொண்டாடும் விதமாக, கடந்த 2022ம் ஆண்டு செப்டம்பர் மாதம் டைகுன் ஆனிவர்சரி எடிசன் மாடல் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டது. ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின், டாப்லைன் வேரியண்ட் (Topline Variant) அடிப்படையில், ஆனிவர்சரி எடிசன் உருவாக்கப்பட்டிருந்தது.
இந்த மாடலில் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் 1.0 லிட்டர் டர்போ பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷனை வழங்கியிருந்தது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 114 பிஹெச்பி பவரையும், 178 என்எம் டார்க் திறனையும் உருவாக்க கூடிய வகையில் ட்யூனிங் செய்யப்பட்டிருந்தது. இந்த இன்ஜினுடன், 6 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்பட்டன.

டைகுன் ஜிடி எட்ஜ் லிமிடெட் கலெக்ஸன் (Taigun GT Edge Limited Collection) அறிமுகம் செய்யப்பட்டுள்ள காரணத்தால்தான், ஆனிவர்சரி எடிசன் மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. டைகுன் ஜிடி எட்ஜ் லிமிடெட் கலெக்ஸன் வரும் ஜூன் மாதத்தில் இருந்து வாடிக்கையாளர்களுக்கு கிடைக்கும்.
ஸ்பெஷல் வெளிப்புற கலர் ஆப்ஷன்களுடன், இந்த புதிய மாடல் வருகிறது. ஆனிவர்சரி எடிசன் மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டிருந்தாலும் கூட, ஜிடி எட்ஜ் லிமிடெட் கலெக்ஸன் வருகையால், ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் ஒட்டுமொத்த எண்ணிக்கை தொடர்ந்து சிறப்பாக இருக்கும் என ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் கருதுகிறது.
ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரானது, நாங்கள் ஏற்கனவே குறிப்பிட்டதை போல் மிட்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். ஸ்கோடா குஷாக் (Skoda Kushaq), ஹூண்டாய் க்ரெட்டா (Hyundai Creta) மற்றும் கியா செல்டோஸ் (Kia Seltos) ஆகியவைதான் ஃபோக்ஸ்வேகன் டைகுன் காரின் மிக முக்கியமான போட்டி மாடல்களாக இருக்கின்றன.
இதில், ஃபோக்ஸ்வேகன் டைகுன் காருக்கும், ஸ்கோடா குஷாக் காருக்கும் இடையே நிறைய ஒற்றுமைகள் உள்ளன. மேற்கண்ட கார்கள் தவிர, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) மற்றும் மாருதி சுஸுகி க்ராண்ட் விட்டாரா (Maruti Suzuki Grand Vitara) ஆகிய கார்களுடனும், ஃபோக்ஸ்வேகன் டைகுன் போட்டியிட்டு கொண்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்திய சந்தையில் தள்ளாடி கொண்டிருந்த ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை தூக்கி நிறுத்திய கார்களில் ஒன்றாக டைகுன் கருதப்படுகிறது. அதன் ஆனிவர்சரி எடிசன் மாடலின் விற்பனை நிறுத்தப்பட்டிருப்பது, அதை வாங்கலாம் என நினைத்திருந்த வாடிக்கையாளர்களுக்கு வருத்தத்தை ஏற்படுத்த கூடிய விஷயமாகவே இருக்கும்.


Click it and Unblock the Notifications








