தீபாவளிக்கு இந்த காரை வாங்க வேண்டியதுதான்!! ஃபோக்ஸ்வேகன் ஷோரூமில் கூட்டம் அள்ள போகுது!
ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி (Volkswagen Taigun GT) காரில் புதியதாக எட்ஜ் டிரைல் எடிசன் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. இந்த புதிய டைகுன் ஜிடி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.30 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. இந்த புதிய ஃபோக்ஸ்வேகன் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
தீபாவளி நெருங்கி வருவதால், புது புது கார்கள் சந்தையில் அறிமுகமாக துவங்கியுள்ளன. அதேநேரம், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் கார்களின் ஸ்பெஷல் எடிசன்களும் அறிமுகம் செய்யப்பட்டு வருகின்றன. இந்த வரிசையில் தற்போது ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி காரில் புதியதாக ஸ்பெஷல் எடிசன் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

எட்ஜ் டிரைல் எடிசன் என்கிற பெயரில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்பெஷல் எடிசனின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.16.30 லட்சமாக நிர்ணயித்துள்ளனர். இந்த புதிய டைகுன் ஜிடி கார்களை வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் வருகிற 2023 டிசம்பர் மாதத்தில் இருந்து துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
தோற்றத்தை பொறுத்தவரையில், வழக்கமான டைகுன் ஜிடி காருடன் ஒப்பிடுகையில், இந்த புதிய ஸ்பெஷல் எடிசனின் தோற்றம் ரக்ட்டாக வடிவமைக்கப்பட்டு உள்ளது. இதற்கேற்ப காரின் மேற்கூரையில் ஃபங்க்ஷ்னல் ரூஃப் ரெயில்கள் பொருத்தப்பட்டுள்ளன. காரை சுற்றிலும் பாடி டிகால்களும், பேனல் கிராஃபிக்ஸும் உள்ளன. இவை எல்லாவற்றையும் விட மேலாக, இந்த காரில் 17-இன்ச்சில் அலாய் சக்கரங்கள் கருப்பு நிறத்தில் பொருத்தப்பட்டுள்ளன.

புதிய டைகுன் ஜிடி எட்ஜ் டிரைல் எடிசனை கார்பன் ஸ்டீல் கிரே மேட் மற்றும் அடர் கருப்பு பேர்ல் பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம். உள்ளே இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் கார் சிவப்பு நிற தையல்களுடன் கருப்பு நிற இருக்கை அமைப்பை கொண்டுள்ளது. கேபினிலும் 'டிரைல்' முத்திரையை இருக்கைகளுக்கு பின்பக்கத்தில் மற்றும் சிவப்பு நிற விளக்குகளில் மற்றும் அலுமினியம் பெடல்களில் பார்க்க முடிகிறது.
தொழிற்நுட்ப அம்சங்கள் என்று பார்த்தால், டேஸ்போர்டில் இந்த கார் 10.25-இன்ச்சில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், ஆண்ட்ராய்டு ஆட்டோ & ஆப்பிள் கார்ப்ளே இணைப்பு வசதி, ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர், வெண்டிலேட்டட் & பவர்டு முன் இருக்கைகள் மற்றும் எலக்ட்ரிக் சன்ரூஃப் உள்ளிட்டவற்றை கொண்டுள்ளது.

புதிய ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஜிடி எட்ஜ் டிரைல் எடிசனை 1.5 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் வாங்கலாம். பிஎஸ்6 2-கட்ட கட்டுப்பாடுகளுக்கு இணக்கமாக வடிவமைக்கப்பட்டுள்ள இந்த என்ஜின் அதிகப்பட்சமாக 148 பிஎச்பி மற்றும் 250 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ளது. இந்த என்ஜின் உடன் 6-ஸ்பீடு மேனுவல் மற்றும் 7-ஸ்பீடு ட்யூயல்-க்ளட்ச் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: தீபாவளி சமயத்தில் விற்பனையை அதிகரிக்க இவ்வாறு ஸ்பெஷல் எடிசன்களை அறிமுகம் செய்வது நல்ல முடிவுதான். இதன் மூலம், டைகுன் கார்களின் விற்பனையை அதிகரிப்பது மட்டுமின்றி, இந்திய சந்தையில் அதன் ஆயுட்காலத்தை அதிகரிக்கவும் முடியும். இந்த ஸ்பெஷல் எடிசன் ஃபோக்ஸ்வேகன் காரை பற்றிய கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள டீலர்ஷிப் மையத்தை அணுகவும்.


Click it and Unblock the Notifications









