ஃபோக்ஸ்வேகன் கார் ஒன்றை சொந்தமாக்க இதைவிட ஒரு நல்ல சான்ஸ் கிடைக்காது!! ரூ.1.40 லட்சம் வரையில் காசு மிச்சமாகும்
ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) கார்கள் ஸ்டாக்கில் இருப்பவற்றை விற்று முடிக்க ரூ.1.40 லட்சம் வரையில் சலுகைகள் அதிரடியாக அறிவிக்கப்பட்டுள்ளன. எப்போது வரையில் இந்த சலுகைகள் இருக்கும்? ஒவ்வொரு ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கும் எந்த அளவிற்கான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன? என்ற கேள்விகளுக்கான பதில்களை இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
உலகின் பழமையான ஆட்டோமொபைல் நிறுவனமாக, பல்வேறு வெளிநாட்டு சந்தைகளில் செயல்பாட்டில் இருந்தாலும் ஃபோக்ஸ்வேகன் இந்தியாவில் தற்சமயம் விற்பனை செய்வது என்னவோ மூன்றே மூன்று கார்களை மட்டும்தான். டிகுவான், விர்டுஸ் மற்றும் டைகுன் என்பவை அவை ஆகும். மேலும் சில கார்களை இந்தியாவில் அறிமுகப்படுத்த ஃபோக்ஸ்வேகன் முயற்சித்து வருகிறது.

3 கார் மாடல்கள் மட்டுமே விற்பனையில் இருந்தாலும், இவற்றை இந்தியாவில் விற்பனை செய்யவும் ஃபோக்ஸ்வேகன் நிறுவனம் போராடிக் கொண்டுத்தான் இருக்கிறது. குறிப்பாக, ஸ்டாக்கில் உள்ள பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகளுக்கு முந்தைய கார்களை விரைவாக விற்று முடிக்க என்னென்ன வழிகள் உண்டோ அத்தனை வழிகளையும் செய்து பார்த்து கொண்டிருக்கிறது. அந்த வகையில் தற்போது அறிவிக்கப்பட்டு இருப்பதே இந்த சலுகைகள் ஆகும்.
இந்த சலுகைகளின்படி, அதிகப்பட்சமாக டைகுன் காரை சுமார் ரூ.1.40 லட்சம் வரையிலான சலுகைகள் உடன் வாங்க முடியும். கடந்த 2022ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட டைகுன் எஸ்யூவி காரை வாங்குவோருக்கு ரூ.65,000-இல் இருந்து ரூ.1.40 லட்சம் வரையிலான சலுகைகள் வேரியண்ட்டை பொறுத்து கிடைக்கும். அதாவது, டைகுன் காரின் டாப்லைன் மேனுவல் வேரியண்ட்டை வாங்குவோருக்கு ரூ.1.40 லட்சம் மதிப்பிலான சலுகைகள் கிடைக்கும்.

அதுவே, கம்ஃபர்ட்லைன் மேனுவல் வேரியண்ட்டை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.65,000 மதிப்பிலான சலுகைகள் மட்டுமே. இவை யாவும் 2022ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட டைகுன் காருக்கு என்பதை மறந்துவிட வேண்டாம். 2023ஆம் ஆண்டில் உற்பத்தி செய்யப்பட்ட டைகுன் கார்களுக்கு ரூ.85,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. ரூ.85,000 மதிப்பில் சலுகைகளை பெற நீங்கள் டைகுன் டாப்லைன் வேரியண்ட்டை மேனுவல் அல்லது ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் உடன் வாங்க வேண்டும்.
இந்தியாவில் 2020ஆம் ஆண்டில் அமலுக்கு வந்த பிஎஸ்6 மாசு உமிழ்வு கட்டுப்பாடுகளின் 2ஆம் கட்ட விதிமுறைகள் கடந்த 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்தன. இதற்கேற்ப வாகனங்களிலும், அவற்றின் என்ஜின்களிலும் சில மாற்றங்களை செய்ய வேண்டி இருந்தன. இந்த அப்டேட்கள் உடன் உருவாக்கப்பட்ட டைகுன் கார்களுக்கு ரூ.65,000 வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த டைகுன் கார்கள் கடந்த மார்ச் மாதத்தில் இருந்து உருவாக்கப்பட்டவை ஆகும்.

விர்டுஸ் செடான் காரை பொறுத்தவரையில், 2022இல் உற்பத்தி செய்யப்பட்ட விர்டுஸ் கார்களுக்கு ரூ.1.20 லட்சம் வரையில் சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. விர்டுஸ் காரின் கம்ஃபர்ட்லைன் மேனுவல் மற்றும் ஹைலைன் மேனுவல் வேரியண்ட்களை வாங்குவோர்க்கு இந்த ரூ.1.20 லட்சம் மதிப்பிலான சலுகைகள் கிடைக்கும். ஆனால் விர்டுஸ் விலைமிக்க டாப் வேரியண்ட்டான ஜிடி பிளஸ் ஆட்டோமேட்டிக் வேரியண்ட்டை வாங்குவோர் ரூ.20,000 மதிப்பிலான சலுகைகளையே பெற முடியும்.
2023இல் தயாரிக்கப்பட்ட விர்டுஸ் கார்களுக்கு ரூ.85,000 வரையிலான சலுகைகளும், பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகளுக்கு ஏற்ப உருவாக்கப்பட்ட விர்டுஸ் கார்களுக்கு ரூ.55,000 வரையிலான சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன. ஃபோக்ஸ்வேகனின் விலைமிக்க காரான டிகுவான் எஸ்யூவி காருக்கு பெரியதாக எந்த சலுகையும் அறிவிக்கப்படவில்லை. பிஎஸ்6 2ஆம் கட்ட மாசு உமிழ்வு அப்டேட்டை பெற்ற டிகுவான் கார்களை வாங்குவோருக்கு மட்டும் ரூ.30,000 வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

டிரைவ்ஸ்பார்க்கின் கருத்து: கடந்த 2023 ஏப்ரல் 1ஆம் தேதி முதல் அமலுக்கு வந்த பிஎஸ்6 2ஆம் கட்ட விதிமுறைகளே ஃபோக்ஸ்வேகன் நிறுவனத்தை இவ்வாறான ஒரு அதிரடியான சலுகையை அறிவிக்க வைத்துள்ளது. ஏனெனில் இந்த அப்டேட்டிற்கு ஏற்ப உருவாக்கப்படாத வாகனங்களை வருகிற செப்டம்பர் மாதத்திற்கு பிறகு விற்பனை செய்ய முடியாது. இதனாலேயே அவற்றை முடிந்த வரையில் விற்று முடிக்க ஃபோக்ஸ்வேகன் முனைப்புடன் உள்ளது.


Click it and Unblock the Notifications









