கேக் வெட்டி, மாலை அணிவித்து வீட்டுக்கு கூட்டிட்டு போறாங்க!! வால்வோ எலக்ட்ரிக் கார் சாலைக்கு வர தயார்!
வால்வோ சி40 ரீசார்ஜ் (Volvo C40 Recharge) எலக்ட்ரிக் எஸ்யூவி காரை முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு டெலிவிரி கொடுக்கும் பணிகள் குறிப்பிட்ட சில மாநிலங்களில் துவங்கப்பட்டுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் வெளியாகியுள்ள படத்தையும், இந்த புதிய வால்வோ எலக்ட்ரிக் காரை பற்றியும் இனி பார்க்கலாம்.
ஸ்வீடன் நாட்டை சேர்ந்த பிரபல கார் தயாரிப்பு நிறுவனமான வால்வோ இந்தியாவில் அதன் 2வது எலக்ட்ரிக் காராக சி40 ரீசார்ஜை கடந்த செப்டம்பர் 4ஆம் தேதி அறிமுகம் செய்தது. இந்த நிலையில், தமிழ்நாட்டிலும், கேரளாவிலும் சில பகுதிகளில் வால்வோ சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகள் துவங்கப்பட்டு உள்ளன.

இதுகுறித்த படங்கள் வால்வோவின் அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையங்களின் சமூக வலைத்தள பக்கங்களில் வெளியிடப்பட்டுள்ளன. புதிய சி40 ரீசார்ஜ் எலக்ட்ரிக் எஸ்யூவி காரை விருப்பப்படும் வாடிக்கையாளர்கள் வால்வோவின் அதிகாரப்பூர்வ இணையத்தள பக்கத்தில் அல்லது அங்கீகரிக்கப்பட்ட டீலர்ஷிப் மையங்களில் ரூ.1 லட்சம் என்ற டோக்கன் தொகையை செலுத்தி முன்பதிவு செய்யலாம்.
கியா இவி6 எலக்ட்ரிக் காருக்கு விற்பனையில் போட்டியாக விளங்கும் வால்வோ சி40 ரீசார்ஜ் காரை பிளாக் ஸ்டோன், ஃபூஷன் சிவப்பு, தண்டர் கிரே, ஃப்ஜோர்டு நீலம், சில்வர் டவுன் மற்றும் கிரிஸ்டல் வெள்ளை, சாகே க்ரீன் மற்றும் ஆனிக்ஸ் கருப்பு என்ற 8 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் வாங்கலாம். இந்த எலக்ட்ரிக் எஸ்யூவி காரின் நீளம் 4,440மிமீ, அகலம் 1,910மிமீ மற்றும் உயரம் 1,591மிமீ ஆகும்.

புத்தம் புதிய மாடர்ன் காராக இருப்பினும், வால்வோ கார்களுக்கே உண்டான சில சிக்னெச்சர் டிசைன் பாகங்கள் சி40 ரீசார்ஜிலும் உள்ளன. குறிப்பாக சொல்ல வேண்டுமென்றால், எல்இடி டிஆர்எல்-களுடன் ஒருங்கிணைக்கப்பட்ட தோரின் சுத்தியல் வடிவிலான எல்இடி ஹெட்லேம்ப்கள் இந்த புதிய எலக்ட்ரிக் காரிலும் வழங்கப்பட்டு உள்ளன. நேர்த்தியான எல்இடி ஃபாக் விளக்குகள் மற்றும் பம்பருக்கு அடிப்பகுதியில் கருப்பு நிறத்தில் ஏர் இண்டேக் உள்ளிட்டவையும் இந்த காரில் இடம்பெற்றுள்ளன.
இந்த ஃபாக் விளக்குகள் & ஏர் இண்டேக்கை வால்வோ எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரில் இருந்து வழங்கப்பட்டு உள்ளது. இதேபோல், மற்ற டிசைன் அம்சங்களிலும் புதிய சி40 ரீசார்ஜ் கார் ஆனது எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரை ஒத்துக் காணப்படுகிறது. புதிய சி40 ரீசார்ஜில் அலாய் சக்கரங்கள் ஸ்டைலிஷனாதாகவும், ஸ்போர்டியான டிசைனிலும் வழங்கப்பட்டு உள்ளன. காரின் பின்பக்கத்திலும், எல்இடி டெயில்லைட்கள் இவி தோற்றத்திற்கு ஏற்ப எடுப்பாக உள்ளன.

காரின் உட்பக்கத்தில் டச் ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் மற்றும் 12.3-இன்ச்சில் டிஜிட்டலில் டிரைவருக்கான டிஸ்பிளே உள்ளிட்டவை வழங்கப்பட்டு உள்ளன. காரின் மற்ற சிறப்பம்சங்களாக ஹீட்டட் & வெண்டிலேட்டட் முன் இருக்கைகள், வேகன் இண்டீரியர்ஸ், ட்யூவல்-ஸோன் ஆட்டோமேட்டிக் கிளைமேட் கண்ட்ரோல், பனோராமிக் சன்ரூஃப், 360-டிகிரி கேமரா, வயர்லெஸ் சார்ஜர் மற்றும் அடாஸ் உள்ளிட்டவை வழங்கப்பட்டுள்ளன.
இந்த புதிய வால்வோ எலக்ட்ரிக் எஸ்யூவி காரில் 78kWh லித்தியம்-இரும்பு பேட்டரி தொகுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது காரின் இரு எலக்ட்ரிக் மோட்டார்களுக்கும் ஆற்றலை வழங்கும். இந்த இரட்டை எலக்ட்ரிக் மோட்டார் செட்அப்பின் மூலம் அதிகப்பட்சமாக 402 பிஎச்பி மற்றும் 660 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். 0-100kmph வேகத்தை வெறும் 4.7 வினாடிகளில் எட்டிவிடக்கூடிய இந்த எலக்ட்ரிக் காரின் டாப்-ஸ்பீடு 180kmph ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ நிறுவனம் இந்தியாவில் அதன் எலக்ட்ரிக் கார்களை அடுத்தடுத்ததாக களமிறக்கும் முனைப்பில் உள்ளது. அந்த வகையிலேயே, சி40 ரீசார்ஜ் காரை தனது 2வது எலக்ட்ரிக் காராக வால்வோ விற்பனைக்கு கொண்டுவந்துள்ளது. ஏற்கனவே விற்பனையில் உள்ள எக்ஸ்சி40 ரீசார்ஜ் காரின் ஸ்போர்டியர் வெர்சனாக களமிறக்கப்பட்டு உள்ளதால், சி40 ரீசார்ஜின் விற்பனையும் நல்லப்படியாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications









