வால்வோ கார் வாங்கும் கனவை நிஜமாக்க இதைவிட சரியான டைம் கிடைக்காது!! ரூ.7 இலட்சம் வரையில் காசை மிச்சப்படுத்தலாம்
வால்வோ கார் இந்தியா (Volvo Car India) நிறுவனம் அதன் எக்ஸ்சி60 லக்சரி எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகளை சுமார் ரூ.7 இலட்சம் வரையில் குறைத்து அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. இந்த தீபாவளியை முன்னிட்டு குறுகிய காலத்திற்கு வால்வோ நிறுவனத்தால் வழங்கப்பட உள்ள இந்த சலுகையை பற்றியும், எக்ஸ்சி60 காரை பற்றியும் விரிவாக இனி இந்த செய்தியில் பார்க்கலாம்.
தீபாவளிக்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில், ஆட்டோமொபைல் நிறுவனங்கள் போட்டிப் போட்டு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அறிவித்து வருகின்றன. ஏனெனில், இந்த சமயத்தில்தான் இந்தியர்கள் பலர் புது வாகனங்களை வாங்க விரும்புவர் என்பதால், இந்த சமயத்தில் விற்பனையை அதிகரித்துக் கொள்ள இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இந்த வகையில், வால்வோ இந்தியா நிறுவனம் அதன் பிரபலமான கார்களின் விலைகளை குறைத்து அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன்படி, வால்வோ எக்ஸ்சி60 என்ற லக்சரியான எஸ்யூவி காரை இந்த தீபாவளியில் வெறும் ரூ.60.90 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலையில் வாங்கலாம். சலுகைக்கு முன்பு வரையில் இந்த வால்வோ எஸ்யூவி காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.67.85 லட்சமாக இருந்தது.
இந்த வகையில் பார்க்கும்போது, வால்வோ எக்ஸ்சி60 காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் சுமார் ரூ.6.95 லட்சம் வரையில் குறைக்கப்பட்டு உள்ளன. இந்தியாவில் கடந்த 2022 செப்டம்பர் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட வால்வோ எக்ஸ்சி60 கார் தற்சமயம் ஒரேயொரு வேரியண்ட்டில் மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. பி5 அல்டிமேட் என்பது அந்த வேரியண்ட் ஆகும்.

ஆனிக்ஸ் பிளாக், டெனிம் ப்ளூ, பிளாட்டினம் கிரே, பிரைட் டஸ்க் மற்றும் கிரிஸ்டல் வெள்ளை என மொத்தம் 5 விதமான பெயிண்ட் ஆப்ஷன்களில் இந்த காரை வாங்கலாம். 2022 செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட வால்வோ எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் காரில் புதிய 2.0 லிட்டர், 4-சிலிண்டர், பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.
அதிகப்பட்சமாக 250 பிஎச்பி மற்றும் 350 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடியதாக உள்ள இந்த பெட்ரோல் என்ஜின் உடன் 48 வோல்ட் மைல்ட்-ஹைப்ரீட் சிஸ்டம் இணைக்கப்படுகிறது. கடந்த ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட புதிய எக்ஸ்சி60 ஃபேஸ்லிஃப்ட் காரின் முன்பக்க கிரில், முன்பக்க பம்பர் மற்றும் அலாய் சக்கரங்களின் டிசைன் உள்ளிட்டவை மாற்றப்பட்டன.

எக்ஸ்சி60 எஸ்யூவி காரை போன்று, எக்ஸ்சி40 ரீசார்ஜ் என்கிற எலக்ட்ரிக் எஸ்யூவி காருக்கும் தீபாவளியை முன்னிட்டு வால்வோ சலுகைகளை வழங்கியுள்ளதாக கூறப்படுகிறது. எக்ஸ்சி40 ரீசார்ஜ் காருக்கு 3 வருட ரோடு சைடு அசிஸ்டன்ஸ், 3 வருட விரிவான கார் வாரண்டி, 3 வருட வால்வோ கார் சர்வீஸ் பிளான், 4 வருடத்திற்கு டிஜிட்டல் சர்வீஸ்கள், 8 வருடத்திற்கு பேட்டரி வாரண்டி உள்ளிட்டவை தீபாவளி சலுகைகளாக வழங்கப்பட்டு உள்ளனவாம்.
ஆனால், விலை குறைப்பு தவிர்த்து எக்ஸ்சி60 காருக்கு வேறெந்த சலுகைகளும் இந்த தீபாவளிக்கு அறிவிக்கப்படவில்லை. இருப்பினும், டீலர்ஷிப் ஷோரூம்கள் பிரத்யேகமாக தாங்களாக சில சலுகைகளை வழங்கலாம். ஆதலால், இந்த சலுகைகள் குறித்த கூடுதல் விபரங்களுக்கு அருகில் உள்ள வால்வோ இந்தியா நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ டீலர்ஷிப் மையத்தை அணுகவும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: வால்வோ எக்ஸ்சி60 காரின் விலை சுமார் ரூ.7 இலட்சம் வரையில் குறைக்கப்பட்டு இருப்பது உண்மையில் நாம் எதிர்பார்க்காத ஒன்று என்றுதான் சொல்ல வேண்டும். எக்ஸ்சி40 ரீசார்ஜ் காருக்கும் சலுகைகள் அறிவிக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. ஆனால், அதுகுறித்த அறிவிப்பு எதுவும் வால்வோ நிறுவனத்திடம் இருந்து இல்லை. எனவே, வால்வோ ஷோரூமை அணுகுவது நல்லது.


Click it and Unblock the Notifications









