வருசத்துல ஒரு மாசம் மட்டும் மாருதிக்கே கஷ்ட காலம் தான் மத்த நிறுவனங்கள் எல்லாம் என்னாவாகுமோ?
இந்தியாவில் கார் தயாரிப்பு நிறுவனங்கள் ஒவ்வொரு மாத துவக்கத்திலும் கடந்த மாத விற்பனை நிலவரங்களை வெளியிடுவது வழக்கம். இப்படியாகக் கடந்த பிப்ரவரி மாத விற்பனை விபரங்கள் எல்லாம் வெளியான சூழ்நிலையில் இந்தியாவில் அதிகமாக விற்பனையான கார் எது அதிக கார்களை விற்பனை செய்த நிறுவனங்கள் எது எனப் பல விஷயங்கள் அலசி ஆராயப்படுகிறது.
குறிப்பாக ஒரு நிறுவனத்தின் எந்த கார் அதிகம் விற்பனையாகியுள்ளது. எந்த கார் விற்பனையில் சரிவைச் சந்தித்துள்ளது இந்த மாற்றத்திற்கு என்ன காரணம் இப்படியான பல விஷயங்களை வைத்துத்தான் நிறுவனங்களுக்கு இடையே போட்டி நடக்கிறது. சரி இப்படியாகக் கடந்த பிப்ரவரி மாதம் வெளியான விற்பனை விபரங்களை நீங்கள் பார்த்திருப்பீர்கள்.

இந்த விற்பனை ரிப்போர்ட்களில் ஒரு விஷயத்தைக் கவனித்தீர்களா? பெரும்பாலான நிறுவனங்கள் கடந்த பிப்ரவரி மாதம் செய்த விற்பனையின் அளவு கடந்தாண்டு பிப். மாதம் நடந்த விற்பனையின் அளவை விட அதிகரித்திருந்தாலும் கடந்த ஜனவரி மாத விற்பனை அளவை விடக் குறைந்திருக்கும்.
உதாரணமாக மாருதி நிறுவனம் கடந்த பிப்ரவரி மாதம் 1.18 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்தது. கடந்தாண்டு பிப். மாதம் 1.09 லட்சம் கார்களை தான் விற்பனை செய்திருந்தது. கிட்த்தட்ட 9 ஆயிரம் கார்கள் விற்பனை அதிகம் தான். ஆனால் கடந்த ஜனவரி மாதம் 1.50 லட்சம் கார்களை விற்பனை செய்திருந்தது.
கிட்டத்தட்ட 32 ஆயிரம் கார்கள் ஒரே மாதத்தில் குறைவாக விற்பனையாகியுள்ளது. இப்படியாக பெரும்பாலான நிறுவனங்கள் ஜனவரி மாதத்தை விடப் பிப்ரவரி மாதம் குறைவாகவே கார்களை விற்பனை செய்துள்ளன. இது இந்தாண்டு மட்டும் நடக்கும் ஒரு விஷயம் கிடையாது. ஒவ்வொரு ஆண்டும் பெரும்பாலான கார் தயாரிப்பு நிறுவனங்கள் பிப்ரவரி மாதத்தில் விற்பனை வீழ்ச்சியையே சந்தித்துள்ளது.
இதற்கு என்ன காரணம் என யோசிக்கும் போது பலர் பிப்ரவரி மாதத்தில் குறைவான நாட்களே இருக்கிறது. அதனால் விற்பனை சரிவு ஏற்பட்டிருக்கும் எனக் கூறுவார்கள். ஆனால் அது மட்டும் ஒரே காரணமாக அமைந்துவிடாது. அப்படிப் பார்த்தால் விற்பனையை நாள் கணக்கில் சராசரியாகப் பிரித்து பிப்ரவரி மாத நாட்களுடன் பெருக்கி பார்த்தாலும் அதையும் விட விற்பனை குறைந்துள்ளது.
இதற்குப் பல காரணங்கள் இருக்கிறது. இதைப் பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும் என்றால் இந்தியாவின் பண்டிகை சீசனை பற்றித் தெரிந்து கொள்ள வேண்டும். இந்தியர்கள் பெரும்பாலும் ஆங்கில காலண்டரில் இறுதியில்தான் அதிகமான பண்டிகைகளைக் கொண்டாடுகின்றனர். உதாரணமாக நவராத்திரி, தீபாவளி, கிறிஸ்துமஸ், எனப் பல முக்கியமான பண்டிகைகள் காலண்டர் ஆண்டின் இரண்டாம் பாகத்தில் தான் வருகிறது.
இந்தியர்கள் மத்தியில் பண்டிகை மற்றும் நல்ல நாட்களில்தான் வாகனங்கள் வாங்க வேண்டும் என்ற செண்டிமென்ட் இருக்கிறது. இதனால் பொதுவாகவே பண்டிகை காலங்களில் தான் அதிகமான வாகனங்கள் இந்தியாவில் விற்பனையாகும். இப்படியாக இந்தியாவில் ஜூலை - ஆகஸ்ட் மாதம் துவங்கும் பண்டிகைகள் ஜனவரி மாதம் நடக்கும் பொங்கல், குடியரசு தின விழா பண்டிகையுடன் நிறைவடைகிறது.
அதன் பின்னர் பெரிய பண்டிகை எதுவும் இல்லை மார்ச் மாதம் ஹோலி இருந்தாலும் அது வட இந்தியாவின் சில பகுதிகளில் மட்டுமே பெரிய அளவில் கொண்டாடப்படுகிறது. அதன் பின்னர் தமிழகத்தில் பொருட்கள் வாங்கும் அளவிற்குப் பெரிய பண்டிகை என்றால் ஆடி தான். இப்படியாகப் பண்டிகை முடிந்ததும் வரும் மாதம் தான் பிப்ரவரி
பிப்ரவரி மாதம் சிறிய மாதம், பெரிய அளவிலான பண்டிகைகள் எதுவும் வராத மாதம், என்பதும் மேலும் நிதியாண்டு முடியும் நிலையில் இருக்கும் மாதம் என்பதால் பிப்ரவரி மாதம் பெரும்பாலும் மக்கள் பெரிய செலவுகளைச் செய்யத் தயங்குவார்கள். குறிப்பாக கார் வாங்குவது உள்ளிட்டவற்றைச் செய்யத் தயங்குவார்கள்.
இப்படியாகப் பல காரணங்கள் பிப்ரவரி என்ற ஒரே மாதத்தைக் குறி வைத்து வருவதால் அந்த மாதத்தில் விற்பனை ஜனவரி மாத விற்பனையை விட பெரும்பாலான நிறுவனங்களில் மந்தமாகவே இருக்கிறது. சில நிறுவனங்கள் அதையும் மீறி அதிகமான விற்பனை செய்துள்ளன. இதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம்! இது குறித்த உங்கள் கருத்துக்களை கமெண்டில் சொல்லுங்கள்


Click it and Unblock the Notifications








