காருல ஃபிரிட்ஜா! தேவை இல்லனா கழட்டி ஓரமா வச்சுக்க முடியுமா!.. ஆச்சரியப்படுத்தும் எலெக்ட்ரிக் கார்...
பிரபல சீன கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று அதி நவீன வசதிகளைக் கொண்ட வாகனத்தை தயாரித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த காரில் மனிதர்களுக்கு தேவையான அத்தியாவசிய தொழில்நுட்ப (Essential Tech) வசதிகள் பலவற்றை சீன நிறுவனம் சேர்த்திருப்பதாகக் கூறப்படுகின்றது.
குறிப்பாக, ரிமூவபிள் ஃப்ரிட்ஜ் (கழட்டி மாட்டிக் கொள்ளலாம்), செல்லப் பிராணிகளுக்கான பிரத்யேக மோட் உள்ளிட்ட தனித்துவமான வசதிகளையே அது வழங்கி இருக்கின்றது. ஜீக்ர், இதுவே பன்முக வசதிகளைக் கொண்ட காரை உருவாக்கிய நிறுவனம் ஆகும். ஜீக்ர் எக்ஸ் (Zeekr X) எனும் கார் மாடலையே அது அதிக சிறப்பு வசதிகளைக் கொண்ட காராக தயார் செய்திருக்கின்றது.

இதையே இப்போது நிறுவனம் வெளியீடும் செய்து உள்ளது. இது ஓர் எலெக்ட்ரிக் காராகும். முதல் கட்டமாக சீனாவிலேயே அது விற்பனைக்குக் கிடைக்க இருக்கின்றது. 189,800 யுவான்களுக்கு அது விற்பனைச் செய்யப்பட இருக்கின்றது. இந்திய ரூபாய் மதிப்பில் அதன் விலை 21 லட்சம் ஆகும்.
சந்தையில் தற்போது புதுமுக கார்களால் போட்டி பலமடங்கு அதிகரித்துக் காணப்படுகின்றது. இதன் விளைவாகவே நிறுவனம் சில தனித்துவமான வசதிகளை வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக வழங்கி இருக்கின்றது. குறிப்பாக, ஜீக்ர் எக்ஸ் எலெக்ட்ரிக் காரின் கேபினுக்குள் ஏகப்பட்ட வசதிகளை நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

13 ஸ்பீக்கர்கள் கொண்ட யமஹா சவுண்ட் சிஸ்டம், அட்ஜஸ்டபிள் சென்டர் கன்சோல் மற்றும் எலெக்ட்ரிக்கல்லி ஆபரேட் செய்யும் திறன் கொண்ட கதவுகள் உள்ளிட்ட வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. இதுதவிர, முன்னதாகவே கூறியதைப் போலவே கழட்டி மாட்டும் வசதிக் கொண்ட சிறிய ஃப்ரிட்ஜும், 'பி' பில்லரில் பன்முக தகவலை வழங்கக் கூடிய திரை ஒன்றும் வழங்கப்பட்டு இருக்கின்றது.
இவை இரண்டும் ஜீக்ர் எக்ஸ் எலெக்ட்ரிக் வழங்கப்பட்டிருக்கும் மிக முக்கியமான அம்சங்கள் ஆகும். மேலும், கார்களில் இருக்கும் செல்லப் பிராணிகள் இருக்கும்பட்சத்தில், காரின் சீதோஷ்ன நிலையை மாற்றிக் கொள்ளும் விதமாகவே பிரத்யேகமான பெட்-மோட் வழங்கப்பட்டு இருக்கின்றது. இந்த அம்சங்களின் காரணமாக ஜீக்ர் எக்ஸ் எலெக்ட்ரிக் கார் பலரின் கவனத்தை ஈர்க்கத் தொடங்கி இருக்கின்றது.

இந்த காரின் ரேஞ்ஜ் திறன், பேட்டரி விபரங்கள் மற்றும் மின் மோட்டார் திறன் உள்ளிட்டவை பற்றிய விபரங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை. இதுபற்றிய விபரங்கள் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. சீனாவில் வரும் ஜூன் மாதத்திலும் அதைத்தொடர்ந்து, உலக நாடுகள் சிலவற்றில் அடுத்து வரும் நாட்களிலும் ஜீக்ர் எக்ஸ் எலெக்ட்ரிக் கார் விற்பனைக்குக் களமிறக்க இருக்கின்றது.

ஆனால், இந்தியாவில் அது விற்பனைக்கு வருமா என்பது தெரியவில்லை. இப்போதைய நிலவரப்பிட இந்த நிறுவனத்தின் ஒரு தயாரிப்புகூட இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்கவில்லை என்பதால் ஜீக்ர் எக்ஸ் எலெக்ட்ரிக் காரின் வருகை இந்தியாவில் அமைய இருப்பது சந்தேகமே என தற்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க கருத்து: இந்தியாவில் எலெக்ட்ரிக் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, அதிக தொழில்நுட்ப வசதிகளைக் கொண்ட வாகனங்களுக்கு மக்கள் அமோக வரவேற்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். ஆகையால், ஒரு வேளை ஜீக்ர் எக்ஸ் எலெக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகமாகும் எனில் அதற்கு நல்ல வரவேற்புக் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









