டாடாவில் இந்த ஒரு காரை வாங்க ஷோரூமில் கூட்டம் அலை மோதுது!! மாருதியால் கூட நெருங்க முடியல!
இந்தியாவில் எஸ்யூவி கார்களுக்கு கிடைத்துவரும் வரவேற்பை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். எஸ்யூவி ரக கார்கள் நன்கு உயரமாக, கம்பீரமான தோற்றத்துடன் இருப்பதால், இந்திய மக்கள் இத்தகைய கார்களை போட்டி, போட்டு வாங்குகின்றனர். கடந்த 2024 மார்ச் மாதத்தில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்பட்ட டாப்-10 எஸ்யூவி கார்களை பற்றி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
டாடா கார்களின் விற்பனை சமீப ஆண்டுகளாக வெகுவாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, டாடா பஞ்ச் என்கிற சிறிய அளவிலான காருக்கு ஏகோபித்த வரவேற்பு பலத்தரப்பு மக்களிடம் இருந்து கிடைத்து வருகிறது. இதற்கு முக்கிய காரணம், பஞ்ச் கார்களின் விலைகள் பெரும்பாலான மக்களால் வாங்கக்கூடிய அளவிற்கு குறைவாக இருப்பதாகும்.

கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு உள்ள டாடா பஞ்ச் கார்களின் எண்ணிக்கை 17,547 ஆகும். ஆனால், 2023 மார்ச் மாதத்தில் வெறும் 10,894 பஞ்ச் கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் பஞ்ச் கார்கள் விற்பனை ஆனது சுமார் 61.07% அதிகரித்துள்ளது. பெட்ரோல், டீசல் என்ஜின் ஆப்ஷன்களில் மட்டுமின்றி, சிஎன்ஜி மற்றும் எலக்ட்ரிக் வெர்சனிலும் டாடா பஞ்ச் விற்பனை செய்யப்படுகிறது.
ஹூண்டாய் கிரெட்டா இந்த வரிசையில் 2வது இடத்தை பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஹூண்டாய் கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 16,458 ஆகும். 2023 மார்ச்சில் கிரெட்டா கார்களின் எண்ணிக்கையும் குறைவாகவே பதிவாகி இருந்தது. கடந்த ஆண்டு மார்ச்சில் விற்பனை செய்யப்பட்ட கிரெட்டா கார்களின் எண்ணிக்கை 14,026 ஆகும்.

இந்த வகையில் பார்த்தால், இந்த ஆண்டும் மார்ச்சில் 2,432 கிரெட்டா கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. கிரெட்டாவுக்கு அடுத்து 3வது இடத்தில், மஹிந்திரா ஸ்கார்பியோ உள்ளது. இந்தியாவில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் மற்றும் ஸ்கார்பியோ என் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் மஹிந்திரா ஸ்கார்பியோ கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன.
இவை இரண்டும் மொத்தமாக கடந்த மார்ச் மாதத்தில் 15,151 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. ஆனால், கடந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை வெறும் 8,788 மட்டுமே ஆகும். இந்தியாவின் நம்பர் ஒன் கார் பிராண்டாக விளங்கும் மாருதி சுஸுகியின் பிரெஸ்ஸா இந்த வரிசையில் 4வது இடத்தை தனதாக்கி உள்ளது.

ஆனால் உண்மையில், பிரெஸ்ஸா கார்களின் விற்பனை சமீப காலமாக குறைந்து வருகிறது. கடந்த 2023ஆம் ஆண்டு மார்ச்சில் 16,227 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் 14,614 பிரெஸ்ஸா கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. 5வது இடத்தில் உள்ள டாடா நெக்ஸான் கார்களின் விற்பனையில் பெரியதாக எந்த மாற்றமும் இல்லை. 2024 மார்ச் மாதத்தில் மொத்தம் 14,058 நெக்ஸான் கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மாருதி சுஸுகியின் ஃப்ரான்க்ஸ் மற்றும் கிராண்ட் விட்டாரா கார்கள் இந்த வரிசையில் 6வது மற்றும் 7வது இடங்களில் உள்ளன. இவற்றின் கடந்த மார்ச் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 12,531 மற்றும் 11,232 ஆகும். 8வது, 9வது மற்றும் 10வது இடங்களில் முறையே மஹிந்திரா பொலேரோ (10,347), ஹூண்டாய் வென்யூ (9,614) மற்றும் கியா சொனெட் (8,750) கார்கள் உள்ளன.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவின் நம்பர் ஒன் எஸ்யூவி கார் பிராண்ட் ஹூண்டாய் என்கிற நிலைமை மாறி, டாடா மோட்டார்ஸின் எஸ்யூவி கார்கள் அதிகளவில் விற்பனையாகி வருகின்றன. குறிப்பாக, பஞ்ச் காரின் எழுச்சி டாடா மோட்டார்ஸுக்கு நிச்சயமாக மிக பெரிய உந்துதலாக இருக்கும். அதேபோல், மஹிந்திரா எஸ்யூவி கார்களின் விற்பனையும் கணிசமாக அதிகரித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









