20-30 வருஷ பழைய காரா இது! ஷோரூம்ல இருந்து இப்பதான் இறக்கினத போல இருக்கு! இந்த கார் மனச மொத்தமா திருடிரும்!
மிக மிக பழைய மஹிந்திரா (Mahindra) கார் மாடல் ஒன்று ஷோரூமில் இருந்து இப்போதுதான் இறக்கி வைத்ததைப் போல மாற்றப்பட்டு இருக்கின்றது. மனசைக் கொள்ளைக் கொள்ளும் வகையில் மாற்றப்பட்டு இருக்கும் இந்த கார் பற்றிய கூடுதல் விபரங்களை இந்த பதிவில் பார்க்கலாம், வாங்க.
கடந்த காலங்களில் வாகன மாடிஃபிகேஷன் வாயிலாக கார்கள் மிகவும் அழகானதாக மாற்றப்பட்ட நிகழ்வுகள் பற்றிய தகவல்கள் பலவற்றை நாம் பார்த்திருப்போம். இதேபோல், பழைய கார் மாடல்கள் புதிதுபோல் மீட்டெடுக்கப்பட்ட சம்பவங்கள் பற்றிய தகவலையும் நாம் படித்திருப்போம். இதுமாதிரியான ஓர் சம்பவமே தற்போது மீண்டும் இந்தியாவில் அரங்கேறி இருக்கின்றது.

1985 மஹிந்திரா எம்எம்540 ஜீப் (Mahindra MM540 Jeep) வகை எஸ்யூவி ரக காரே புதிதாக ஷோரூமில் இருந்து இறக்கியதைப் போல மாற்றப்பட்டு இருக்கின்றது. இந்த நிகழ்வு கேரளா மாநிலத்திலேயே அரங்கேறியிருக்கின்றது. துருப்பிடித்து, பயன்படுத்த துளியளவும் உகந்ததல்லாததாக இருந்த கார் மாடலையே இளைஞர்கள் சிலர் ஒன்று சேர்ந்து புத்தம் புதியதுபோல் மாற்றி இருக்கின்றனர்.
இதனால்தான் இந்த தகவல் கார் ஆர்வலர்கள் மத்தியில் காட்டு தீயைப் போல் வேகமாக பரவிக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக கார் பற்றிய முன்-பின் படமே இணையத்தில் வைரலாகிக் கொண்டு இருக்கின்றது. மழையில் நீண்ட காலமாக அந்த வாகனம் நின்றுக் கொண்டிருந்த காரணத்தினால் துரு மட்டுமல்ல கார் முழுவதும் பாசி படர்ந்து இருப்பதையும் நம்மால் பார்க்க முடிகின்றது.

இந்த மாதிரியான மோசமான நிலையில் இருந்து 1985 மஹிந்திரா எம்எம்540 ஜீப் மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது. இந்த காரின் வெளிப்பக்கம் மட்டுமல்ல உட்பக்கமும் மிகப் பெரிய அளவில் சேதமடைந்தும், இயற்கை சீற்றத்தால் மிக மோசமான நிலைக்கும் ஆளாகி இருக்கின்றது. இந்த நிலையிலேயே அதன் உட்பக்கும் புதியதுபோல் மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது.
அதேநேரத்தில் எஞ்சினும், கியர்பாக்ஸும் நல்ல நிலையில் இருந்திருக்கின்றன. ஆகையால், சின்ன சர்வீஸை மட்டும் செய்துவிட்டு அதை மிக சிறந்த நிலைக்கு மீட்டெடுத்து வந்திருக்கின்றனர். இந்த வாகனம் பழைய நிலையில் இருந்து புதிய நிலைக்கு மட்டுமே மீட்டெடுக்கப்பட்டு இருக்கின்றது. எந்தவொரு உரு மாற்ற வேலையும் அதில் செய்யப்படவில்லை.

அதாவது, பழசாகி, துருவால் உதிர்ந்து போகும் நிலையில் இருந்து பாகங்களை அகற்றிவிட்டு அதற்கு பதிலாக அதே மாதிரியான வேறு புதிய பாகங்களே அந்த இடத்தில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றன. இதனால்தான் ஷோரூமில் புதிதாக இறக்கப்பட்டதைபோல அந்த வாகனம் மாறி இருக்கின்றது. பொதுவாக ஒரு சிலர் வாகனத்தை மீட்டெடுப்பதாக கூறி அதை வேறு கார் மாடல்களின் பாகங்களால் அலங்கரித்து புதிய அவதாரத்திற்கு எடுத்துச் சென்றுவிடுவர்.
ஆனால், இந்த காரில் அதுபோன்று மாற்று கார் மாடல்களின் பாகங்களை பெரிய அளவில் பார்க்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தகுந்தது. மஹிந்திரா நிறுவனத்தின் இந்த கார் முதன் முதலில் 1985 ஆண்டிலேயே இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2005 ஆம் ஆண்டு வரை உற்பத்தியிலும் இருந்தது.

மும்பையின் கன்டிவலியிலேயே காரின் உற்பத்தி பணிகள் நடைபெற்றன. இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க காரையே கேரளத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர் தற்போது மீட்டெடுத்து இருக்கின்றனற். இதற்கான செலவு பற்றிய விபரங்களை அவர்கள் வெளியிடவில்லை. பியூஜியோட் நிறுவனத்தின் எக்ஸ்டிபி 4.90 டீசல் வகை மோட்டாரே இந்த காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 62 பிஎச்பி மற்றும் 117 என்எம் டார்க்கை வெளியேற்றும் திறன் கொண்டது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் குறிப்பாக கேரளாவில் இதுபோன்று பழைய வாகனங்கள் புதிய நிலைக்கு மீட்டெடுக்கப்படுவது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாகவும் இதுமாதிரியான சம்பவங்கள் அம்மாநிலத்தில் அரங்கேறி இருக்கின்றன. ஏன் கேரள இளைஞர்கள் சிலர் சிறிய பைக் மற்றும் கார்களை தயாரித்த நிகழ்வுகூட அரங்கேறி இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









