2010இல் தயாரிக்கப்பட்ட கார் என்று சொன்னால் சத்தியமா யாரும் நம்ப மாட்டாங்க!! இந்திய மெக்கானிக்கின் கை வண்ணம்!
2010ஆம் ஆண்டில் தயாரிக்கப்பட்ட ஃபோக்ஸ்வேகன் போலோ கார் ஒன்று இன்றைய கால மாடர்ன் கார்களுக்கு இணையாக, பளபளப்பான பச்சை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டுள்ளது. இந்த போலோ கார் தொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு உலகம் முழுவதுமே வாடிக்கையாளர்கள் உள்ளனர். அதாவது, அந்த அளவுக்கு ஃபோக்ஸ்வேகன் தயாரிப்புகளை உலகம் முழுவதும் நிறைய பேர் நம்பி வாங்குகின்றனர். இந்தியாவிலும், ஃபோக்ஸ்வேகன் கார்களுக்கு நிறைய ரசிகர்கள் உள்ளனர். இந்தியாவில் குறுகிய காலத்தில் நல்ல வரவேற்பை பெற்ற ஃபோக்ஸ்வேகன் காராக போலோவை சொல்லலாம்.

ஃபோக்ஸ்வேகனின் விலை குறைவான ஹேட்ச்பேக் காரான போலோ, இந்தியாவில் 13 வருடங்கள் விற்பனையில் இருந்தது. இந்த 13 வருடங்களில் மொத்தம் 3 ஜென்ரேஷன்களில் போலோ விற்பனை செய்யப்பட்டது. இதில், 2010 சமயத்தில் விற்பனையில் இருந்த முதல் தலைமுறை போலோ கார் ஒன்று பட்டி, டிங்கரிங் பார்க்கப்பட்டு மாடர்ன் கார்களுக்கு இணையாக மெருக்கேற்றப்பட்டு உள்ளது.
இதன் விளைவாக, முதல் ஜென்ரேஷன் போலோ கார் 3ஆம் ஜென்ரேஷன் போலோ கார் போன்று மாறியுள்ளது. இந்த கஸ்டமைஸ்ட் போலோ காரில் மிக முக்கிய சிறப்பம்சமாக பச்சை நிறத்திலான பெயிண்ட் வழங்கப்பட்டுள்ளது. பொதுவாகவே, பச்சை நிறத்திலான காரை அவ்வளவாக சாலைகளில் காண முடியாது. ஏனெனில், மிகவும் சில கார் நிறுவனங்கள் மட்டுமே பச்சை நிற பெயிண்ட் ஆப்ஷனை வழங்குகின்றன.

அந்த வகையில், ஆடி நிறுவனம் அதன் குறிப்பிட்ட சில கார்களில் பச்சை கலர் ஆப்ஷனை வழங்குகிறது. இதனை ஜாவா க்ரீன் என ஆடி அழைக்கிறது. இந்த ஃபோக்ஸ்வேகன் போலோ காருக்கு வழங்கப்பட்டிருப்பதும் ஆடி நிறுவனத்தின் ஜாவா பச்சை நிறமே ஆகும். இந்த பச்சை நிறத்தை வழங்குவதற்கு முன்னர் இந்த போலோ கார் சிவப்பு நிறத்தில் இருந்தது.
இந்த பணிகளை மஹாராஷ்டிரா மாநிலம், புனேவை சேர்ந்த ப்ரோடோமோட்டிவ் என்கிற மெக்கானிக் ஷாப் நிறுவனம் மேற்கொண்டுள்ளது. பிரபலமான இந்தியன் கார்கள் மற்றும் லக்சரி கார்களை உயர் தரத்திலான பெயிண்ட் மூலமாக அலங்கரிப்பதில் நிபுணத்துவம் வாய்ந்ததாக ப்ரோடோமோட்டிவ் விளங்குகிறது. இந்த நிறுவனத்தின் லேட்டஸ்ட் புராஜெக்ட் இந்த போலோ கார் ஆகும்.

புதியதாக பெயிண்ட் வழங்கியது மட்டுமின்றி, மெக்கானிக் கடைக்கு வருவதற்கு முன்னர் காரில் இருந்த டொக்குகள் மற்றும் கீறல்களும் சரி செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, காரின் முன் வலதுப்பக்க கதவு முற்றிலுமாக சேதமடைந்து இருந்தது. ஆடி நிறுவனத்தின் ஆர்.எஸ் பிரிவின் ஜாவா க்ரீன் மெட்டாலிக் பெயிண்ட் இந்த போலோ காருக்கு கொடுக்கப்பட்டுள்ளது.
இந்த பச்சை நிற பெயிண்ட்டை கொடுக்க காரின் உரிமையாளர் தான் மெக்கானிக் ஷாப் ஊழியர்களிடம் விரும்பி கேட்டுக் கொண்டார். காரில் இருந்த டொக்குகள் மற்றும் கீறல்கள் முதலில் சரி செய்யப்பட்டன. அதன்பின், மணலை கொண்டு சாண்டிங் செயல்முறை மேற்கொள்ளப்பட்டது. அதன்பின், கார் முழுவதுமாக கழுவப்பட்ட பின்பே பெயிண்ட் கொடுக்கப்பட்டுள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: 13 வருடங்களாக பயன்படுத்தப்பட்டு வந்த இந்த ஃபோக்ஸ்வேகன் போலோ கார் மெக்கானிக் ஷாப்பிற்கு வருவதற்கு முன்னர் மிகவும் சேதமடைந்த நிலையில் இருந்தது. இந்த அளவுக்கு சேதமடைந்து இருந்த காரை சில ஓனர்கள் இவ்வளவு செலவு செய்து பட்டி, டிங்கரிங் செய்து புதுப்பிக்க விரும்பியிருக்க மாட்டார்கள் என மெக்கானிக் ஷாப் ஊழியர்கள் தெரிவித்துள்ளனர். ஆனால், ஓனர் எதிர்பார்த்தப்படியே கார் மிகவும் கவர்ச்சிக்கரமான தோற்றத்திற்கு மாற்றப்பட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









