பென்ஸ் நிறுவனத்துக்கு பிஎம்டபிள்யூ வைத்த செக்... மொத்த கஸ்டமர்ஸும் அப்படியே இந்த பக்கம் மாற போறாங்க!!
பி.எம்.டபிள்யூ (BMW) நிறுவனம் அதன் புதிய 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் (5 Series LWB) காரை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. இது பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரின் 8வது தலைமுறை மாடல் ஆகும். விற்பனையில் இந்த புதிய பிஎம்டபிள்யூ காருக்கு மெர்சிடிஸ்-பென்ஸின் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் கார் போட்டியாக உள்ளது. இந்த மெர்சிடிஸ் காரும் விரைவில் புதிய தோற்றத்திற்கு மேம்படுத்தப்பட உள்ளது. இப்போது விற்பனையில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காருக்கும், புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காருக்கும் இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.
பரிமாண அளவுகள்: புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் காரின் நீளம் 5175மிமீ, அகலம் 1900மிமீ, உயரம் 1520மிமீ மற்றும் வீல்பேஸின் நீளம் (முன் & பின் சக்கரங்களுக்கு இடையேயான தொலைவு) 3105மிமீ ஆகும். விற்பனையில் உள்ள மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் கார் இதனை காட்டிலும் 83மிமீ நீளம் குறைவானது, 20மிமீ அகலம் குறைவானது மற்றும் 27மிமீ உயரம் குறைவானது ஆகும்.

அதேபோல், புதிய 5-சீரிஸ் உடன் ஒப்பிடுகையில் இ-கிளாஸ் காரின் வீல்பேஸ் 11மிமீ நீளம் குறைவானதாக உள்ளது. இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய இ-கிளாஸ் கார் ஆனது இதனை காட்டிலும் நீளம் மற்றும் அகலத்தில் சில செ.மீ-கள் சிறியதாகும். தற்போதைய இ-கிளாஸ் காருக்கும், புதிய இ-கிளாஸ் காருக்கும் உயரத்தில் பெரியதாக மாற்றம் இருக்காது.
சக்கரங்கள்: புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் லாங் வீல்பேஸ் காரில் 18 இன்ச் அல்லது 19 இன்ச்சில் சக்கரங்களை பெறலாம். ஆனால், மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் லாங் வீல்பேஸ் காரை இன்னும் பெரிய 20 இன்ச் சக்கரங்கள் உடனும் வாங்க முடிகிறது. ஆனால், விரைவில் அறிமுகம் செய்யப்பட உள்ள புதிய இ-கிளாஸ் காரில் 18 இன்ச் சக்கரங்களை மட்டுமே வழங்க மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

என்ஜின்: 2024 பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் காரில் 2 லிட்டர் ட்வின்-டர்போ பெட்ரோல் என்ஜின் பொருத்தப்பட்டுள்ளது. இந்த ஒரு என்ஜின் ஆப்ஷனில் மட்டுமே 5-சீரிஸ் விற்பனைக்கு கிடைக்கும். அதிகப்பட்சமாக 5200 ஆர்பிஎம்-இல் 258 பிஎச்பி மற்றும் 1450 ஆர்பிஎம்-இல் 400 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த டர்போ பெட்ரோல் என்ஜின் உடன் 8-ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டுள்ளது.
மறுப்பக்கம், மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரில் மொத்தம் 3 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன. இதில், ஒரு பெட்ரோல் என்ஜின் ஆப்ஷனும், இரு டீசல் என்ஜின் ஆப்ஷன்களும் அடங்குகின்றன. இதில், 6-சிலிண்டர் டீசல் என்ஜின் ஆப்ஷன் ஆனது அதிகப்பட்சமாக சுமார் 600 என்.எம் வரையிலான டார்க் திறனை காருக்கு வழங்கக்கூடியதாக உள்ளது. இருப்பினும், பெட்ரோல் என்ஜின் உடன் 5-சீரிஸ் மற்றும் இ-கிளாஸ் கார்களை ஒப்பீடு செய்து பார்த்தால், 5-சீரிஸ் ஆனது சற்று வேகமானதாக உள்ளது.

தொழிற்நுட்ப அம்சங்கள்: புதிய 5-சீரிஸ் காரில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கர்வ்டு டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இந்த டிஸ்பிளேவில் 12.3-இன்ச் டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் மற்றும் 14.9-இன்ச் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம் அடங்குகின்றன. இவை இரண்டும் பிஎம்டபிள்யூவின் லேட்டஸ்ட் ஆப்ரேட்டிங் சிஸ்டத்தை கொண்டுள்ளன. இதன் மூலமாக, டிரைவரின் டிரைவிங் ஸ்டைலுக்கு ஏற்ப கார் தானாக தன்னை தகவமைத்துக் கொள்ளும் என கூறப்பட்டுள்ளது.
மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸ் காரிலும் 12.3-இன்ச்சில் இரட்டை ஃபுல்-எச்டி டிஸ்பிளே வழங்கப்பட்டுள்ளது. இதன்படி, மெர்சிடிஸின் எம்பக்ஸ் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை இ-கிளாஸ் கார் பெறுகிறது. பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் மற்றும் மெர்சிடிஸ் இ-கிளாஸ் என இரு கார்களிலும் வயர்லெஸ் ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ இணைப்பு வசதிகள், வயர்லெஸ் ஸ்மார்ட்போன் சார்ஜர் உள்ளிட்ட அம்சங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும், இந்த கார்களை மெமரி ஃபங்க்சன் ஆப்ஷன்ஸ் உடனும் வாங்கலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நாம் எதிர்பார்த்ததை போன்று, புதிய பிஎம்டபிள்யூ 5-சீரிஸ் கார் அருமையான தோற்றத்தில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. அதற்காக, மெர்சிடிஸ்-பென்ஸ் இ-கிளாஸையும் நம்மால் குறை சொல்ல முடியாது. வீல்பேஸ் நீளம் இந்த இரு கார்களிலும் பெரிய அளவில் மாற்றம் இல்லாமல் உள்ளது. கொஞ்சம் விசாலமான கேபினை எதிர்பார்ப்பவர்கள் புதிய 5-சீரிஸை தேர்வு செய்யலாம். இ-கிளாஸ் வாங்குவதுதான் உங்களது விருப்பம் என்றால், புதிய இ-கிளாஸ் இன்னும் சில மாதங்களில் அறிமுகம் செய்யப்படும் வரையில் காத்திருக்கலாம்.


Click it and Unblock the Notifications









