குடும்பத்தோட போற மாதிரியான காருக்கு புக்கிங் தொடங்கிருச்சு.. ரூ.25,000 இருந்தா போதும் இந்த கார புக் பண்ணிடலாம்
ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் வெகுவிரைவில் இந்தியாவில் அதன் புதுப்பிக்கப்பட்ட அல்கஸார் (Alcazar) கார் மாடலை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகம் செய்ய இருக்கின்றது. இதன் வருகை வருகின்ற செப்டம்பர் மாதம் 9 ஆம் தேதி அன்றே அரங்கேற இருக்கின்றது. இதை முன்னிட்டே இன்றைய தினம் ஹூண்டாய் நிறுவனம் ஃபேஸ்லிஃப்ட் அல்கஹார் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. முழுமையாகவும், தெளிவாகவும் இந்த கார் காட்சி தந்திருக்கின்றது. இதன் வாயிலாக எண்ணற்ற புதிய அம்சங்களை இந்த கார் பெற்றிருப்பது உறுதியாகி இருக்கின்றது.
குறிப்பாக, கிரெட்டாவை பிரதிபலிக்கக் கூடிய அம்சங்கள் சிலவற்றையும் புதுப்பிக்கப்பட்ட அல்கஸார் பெற்றிருப்பது தெரிய வந்திருக்கின்றது. இருப்பினும், இந்த கார் தனித்துவமானதாகவே காட்சியளிக்கின்றது. அல்கஸாரின் இந்த லுக் பலரையும் கவரும் வகையில் அமைந்திருக்கின்றது என்றே கூறலாம். குறிப்பாக, அதிக இருக்கைகளைக் கொண்ட காரை விரும்புவோரின் கவனத்தை இந்த கார் மிகப் பெரிய அளவில் கவர்ந்திருக்கும் என நம்பப்படுகின்றது.

அந்த அளவிற்கே அதிக கவர்ச்சியான அம்சங்களைக் கொண்ட காராக அல்கஸாரை ஹூண்டாய் தயார் செய்திருக்கின்றது. மேலும், வெளியீட்டைத் தொடர்ந்து இந்த காருக்கான புக்கிங் பணிகளும் நாட்டில் தொடங்கியுள்ளன. ரூ. 25 ஆயிரம் முன் தொகையிலேயே இந்த காருக்கான முன் பதிவுகள் ஏற்கப்பட்டு வருகின்றன.
ஆன்லைன் மற்றும் டீலர்ஷிப் என அனைத்தின் வாயிலாகவும் இந்த காருக்கு புக்கிங் தொடங்கி இருக்கின்றது. ஹூண்டாய் அல்கஸார் ஓர் மூன்று வரிசை இருக்கை அமைப்பைக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இதன் அப்டேட்டட் வெர்ஷன் நான்கு விதமான ட்ரிம்களில் விற்பனைக்குக் கிடைக்கும் என நம்பப்படுகின்றது.

எக்சிகியூட்டீவ், பிரெஸ்டீஜ், பிளாட்டினம் மற்றும் சிக்னேச்சர் ஆகியவையே அவை ஆகும். இத்துடன், ஆறு மற்றும் ஏழு இருக்கைகள் தேர்வுகளும் இந்த கார் மாடலில் வழங்கப்பட இருக்கின்றது. இதுமட்டுமில்லைங்க, பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் ஆப்ஷன்களிலும் புதிய ஹூண்டாய் அல்கஸார் விற்பனைக்குக் கிடைக்கும் என்பது கவனிக்கத்தகுந்தது.
இந்த எஞ்சினுடன் சேர்த்து மேனுவல் மற்றும் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனும் வழங்கப்பட இருக்கின்றன. புதுப்பித்தலின்கீழ் புதிய அல்கஸார் கார் மாடலில் ஹூண்டாய் ஏகப்பட்ட சிறப்பம்சங்களைச் சேர்த்துள்ளது. புதிய கிரில், மறு வடிவமைப்பு செய்யப்பட்ட பம்பர், கவர்ச்சியான எச் வடிவ பகல்நேரத்தில் ஒளிரக் கூடிய டிஆர்எல்-கள், புதிய டிசைனைக் கொண்ட அலாய் வீல் ஆகியவற்றையே அல்கஸார் பெற்றிருக்கின்றது.

இத்துடன், புதிய ஸ்டைலான சில்வர் நிற பம்பரே இந்த காரில் வழங்கப்பட்டு இருக்கின்றது. இது அக்காருக்கு கூடுதல் அழகை சேர்க்கும் வகையில் அமைந்துள்ளது. மேலும், கூடுதலாக புதிய ரோபஸ்ட் எமரால்டு மேட் ஃபினிஷ் நிற தேர்வும் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
எனவே நிற தேர்விலும் பரந்த அளவில் ஆப்ஷன்களை வழங்கக் கூடியதாக புதிய அல்கஸார் இருக்கும் என தெரிகின்றது. எஞ்சின் ஆப்ஷனைப் பொருத்த வரை இப்போது வழங்கப்படும் அதே மோட்டார் தேர்வுகளே வழங்கப்படும் என தெரிகின்றது. ஆகையால், புதிய அல்கஸாரில் 160 எச்பி திறனை வெளியேற்றக் கூடிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் ஆப்ஷன் கிடைக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இத்துடன், 116 எச்பி பவரை வெளியேற்றக் கூடிய 1.5 லிட்டர் டீசல் ஆப்ஷன் ஆகியவை இதில் எதிர்பார்க்கப்படுகிறது. கியர்பாக்ஸைப் பொருத்த வரை 6 ஸ்பீடு மேனுவல், 7 ஸ்பீடு டூயர் கிளட்ச் மற்றும் 6 ஸ்பீடு டார்க் கன்வெர்டர் ஆட்டோமேட்டிக் ஆகியவையே இதில் எதிர்பார்க்கப்படுகின்றன.
இவற்றுடன் நவீன கால தொழில்நுட்ப அம்சங்களாக புதிய அல்கஸார் கார் மாடலில் லெவல் 2 வகை அடாஸ் (ADAS), 10.25 அங்குல திரைகள் இரண்டு, பனோரமிக் சன்ரூஃப், வெண்டிலேட் வசதிக் கொண்ட முன் பக்க இருக்கைகள், ஒயர்லெஸ் சார்ஜர், எலெக்ட்ரிக்கல்லி அட்ஜஸ்டபிள் டிரைவர் இருக்கை உள்ளிட்ட அம்சங்களே இந்த காரில் இடம் பெற இருப்பதாக தகவல்கள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் அல்கஸார் காருக்கு அதிக குடும்ப உறுப்பினர்களைக் கொண்டவர்களிடத்தில் கணிசமான அளவு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த வரவேற்பை இரட்டிப்பாக்கும் நோக்கிலேயே இதன் ஃபேஸ்லிஃப்ட் வெர்ஷனை ஹூண்டாய் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதன் வருகையை எதிர்நோக்கி ஹூண்டாய் கார் பிரியர்கள் மிகுந்த ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர் என்பது கவனிக்கத்தகுந்தது.


Click it and Unblock the Notifications









