மைலேஜில் டூவீலர்களையே தூக்கி சாப்பிடும் புது மாருதி ஸ்விஃப்ட் கார்! நாள் நெருங்கியதால் போட்டி நிறுவனங்கள் கிலி
இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இது ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். போட்டி அதிகரித்து கொண்டே வருவதால், ஸ்விஃப்ட் காரின் புதிய தலைமுறை மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்ய மாருதி சுஸுகி நிறுவனம் தீவிரமாக தயாராகி வருகிறது.
இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார், வரும் மே மாதம் 2வது வாரத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படலாம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கு இன்னும் மிக குறுகிய காலம் மட்டுமே இருக்கும் நிலையில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரை பற்றிய ஒரு சில புதிய தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளன. இதன்படி தற்போது விற்பனையில் உள்ள மாருதி சுஸுகி ஃப்ரான்க்ஸ் (Maruti Suzuki Fronx) மற்றும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza) ஆகிய கார்களில் வழங்கப்பட்டுள்ள ஒரு சில வசதிகள், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரிலும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

அவை 9 இன்ச் ஸ்மார்ட்ப்ளே ப்ரோ ப்ளஸ் டச்ஸ்க்ரீன் இன்ஃபோடெயின்மெண்ட் சிஸ்டம், வயர்லெஸ் செல்போன் சார்ஜர், ஆர்கமாய்ஸ் மியூசிக் சிஸ்டம், ஆட்டோமேட்டிக் க்ளைமேட் கண்ட்ரோல், எல்இடி பனி விளக்குகள், எல்இடி ஹெட்லேம்ப்கள் மற்றும் பாதுகாப்பிற்காக அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகள் ஆகியவை ஆகும்.
இதுதவிர பின் பகுதியில் ஏசி வெண்ட்கள், டைப் சி சார்ஜிங் போர்ட், பவர் விண்டோஸ் மற்றும் உயரத்தை அட்ஜெஸ்ட் செய்து கொள்ள கூடிய வகையிலான டிரைவர் இருக்கை ஆகியவையும் புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் முக்கியமான வசதிகளாக இருக்கும் என தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

செயல்திறனை பொறுத்தவரையில், புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில், எந்தவிதமான மாற்றங்களும் செய்யப்படாது என எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது இந்திய சந்தையில் தற்போது விற்பனையில் உள்ள மாடலில் வழங்கப்பட்டு வரும் அதே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள்தான் தொடர்ந்து, புதிய தலைமுறை மாடலிலும் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. இதன்படி புதிய தலைமுறை மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரில் 1.2 லிட்டர் நேச்சுரலி அஸ்பிரேட்டட் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன் கொடுக்கப்படலாம். இந்த இன்ஜின் உடன் 5 ஸ்பீடு மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர் பாக்ஸ் ஆப்ஷன்கள் வழங்கப்படலாம்.
இதுதவிர தற்போதைய மாடலில் வழங்கப்படுவதை போன்று, புதிய தலைமுறை மாடலிலும், சிஎன்ஜி இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. தற்போதைய மாடலில் வழங்கப்பட்டுள்ள 1.2 லிட்டர் இன்ஜின் ஒரு கிலோவிற்கு 30.90 கிலோ மீட்டர் மைலேஜ் வழங்கும் என மாருதி சுஸுகி நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதே அளவிற்கான மைலேஜை, புதிய தலைமுறை மாடலிலும் நாம் உறுதியாக எதிர்பார்க்கலாம். ஆனால் சிஎன்ஜி இன்ஜின் உடன், மேனுவல் கியர் பாக்ஸ் ஆப்ஷன் மட்டுமே எதிர்பார்க்கப்படுகிறது. ஆட்டோமேட்டிக் கியர் பாக்ஸ் ஆப்ஷன் வழங்கப்படுவதற்கான வாய்ப்புகள் இல்லை என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
டிரைவ்ஸ்பார்க் தமிழ் கருத்து: இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் காரின் ஆரம்ப விலை 6.24 லட்ச ரூபாயாக உள்ளது. அதே சமயம் இதன் டாப் வேரியண்ட்டின் விலை 9.28 லட்ச ரூபாயாக இருக்கிறது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆனால் டிசைன் மெருகேற்றப்படுவதாலும், புதிய வசதிகள் வழங்கப்படுவதாலும், புதிய தலைமுறை மாடலின் விலை சற்று அதிகமாக இருக்கலாம் என்பது எங்கள் கருத்து.


Click it and Unblock the Notifications








