இரண்டிற்கும் விலையில் பெருசா வித்தியாசம் இல்லை!! மாருதி காருக்கு பதிலாக இந்த காரை டிரை பண்ணி பாருங்க!
2024 மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) கார் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள். விற்பனையில் இந்த மாருதி காருக்கு போட்டியாக இருக்கும் கார்களுள் ஒன்று சிட்ரோன் சி3 ஆகும். இந்த இரு விலை குறைவான ஹேட்ச்பேக் கார்களுக்கு இடையேயான ஒற்றுமை & வேற்றுமைகளை இனி பார்க்கலாம்.
எல்.எக்ஸ்.ஐ, வி.எக்ஸ்.ஐ, இசட்.எக்ஸ்.ஐ, இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் மற்றும் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் ட்யூயல்-டோன் என மொத்தம் 5 விதமான வேரியண்ட்களில் 2024 ஸ்விஃப்ட் கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.49 லட்சத்தில் இருந்து ரூ.9.64 லட்சம் வரையில் உள்ளன. மறுப்பக்கம், சிட்ரோன் சி3 மொத்தம் 4 விதமான வேரியண்ட்களில் விற்பனை செய்யப்படுகிறது.

லைவ், ஃபீல், ஷைன் மற்றும் ஷைன் ட்யூயல்-டோன் என்பன அந்த 5 வேரியண்ட்களாகும். இவற்றின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் ரூ.6.2 லட்சத்தில் இருந்து ரூ.9 லட்சம் வரையில் உள்ளன. ஸ்விஃப்ட் காரின் நீளம் 3860மிமீ, அகலம் 1735மிமீ, உயரம் 1520மிமீ மற்றும் வீல்பேஸ் நீளம் 2450மிமீ ஆகும். சிட்ரோன் சி3 காரின் நீளம் 3981மிமீ, அகலம் 1733மிமீ, உயரம் 1604மிமீ ஆகும். இந்த காரில் சக்கரங்களுக்கு இடையேயான வீல்பேஸ் 2540மிமீ நீளத்தில் கொடுக்கப்படுகிறது.
இதன்படி பார்க்கும்போது, ஸ்விஃப்ட் காரை காட்டிலும், சிட்ரோன் சி3 அளவில் கொஞ்சம் பெரியது. அதேபோல், தரையில் இருந்து காரின் அடிப்பகுதி ஆனது சி3 காரில் 180மிமீ உயரத்திலும், ஸ்விஃப்ட் காரில் 163மிமீ உயரத்திலும் வழங்கப்படுகிறது. காருக்கு பின்னால் வழங்கப்படும் பூட் ஸ்பேஸ் அளவிலும் சி3 315 லிட்டர்கள் கொள்ளளவில் பெரியதாக உள்ளது. ஸ்விஃப்ட் காரில் 265 லிட்டர்கள் கொள்ளளவில் மட்டுமே பூட் ஸ்பேஸ் கொடுக்கப்படுகிறது.
2024 ஸ்விஃப்ட் காரில் புத்தம் புதிய 1.2 லிட்டர், 3-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜினை மாருதி சுஸுகி நிறுவனம் வழங்கியுள்ளது. அதிகப்பட்சமாக 82 எச்பி மற்றும் 112 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தக்கூடிய இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்கள் கொடுக்கப்படுகின்றன. தற்போதைக்கு ஸ்விஃப்ட் சிஎன்ஜி கார் விற்பனை செய்யப்படவில்லை.
சிட்ரோன் சி3 காரை பொறுத்தவரையில், 2 விதமான என்ஜின் ஆப்ஷன்கள் இந்த காரில் கொடுக்கப்படுகின்றன. இதில் 1.2 லிட்டர், 3-சிலிண்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் ஆப்ஷன் மூலமாக அதிகப்பட்சமாக 82 பிஎச்பி மற்றும் 115 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த என்ஜின் ஆப்ஷன் ஸ்விஃப்ட்டின் என்ஜினிற்கு இணையானதாக உள்ளது.

ஆனால், சி3 காரில் இந்த என்ஜின் உடன் 5-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் ஆப்ஷனை மட்டுமே பெற முடியும். சிட்ரோன் சி3 காரை ஆற்றல்மிக்கதாக பெற விரும்புவோருக்காக டர்போ என்ஜின் ஆப்ஷனும் கொடுக்கப்படுகிறது. சி3 டர்போ காரில் பொருத்தப்படுகின்ற 1.2 லிட்டர், 3-சிலிண்டர் டர்போசார்ஜ்டு பெட்ரோல் என்ஜின் மூலமாக 108 பிஎச்பி மற்றும் 190 என்எம் டார்க் திறன் வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம்.
இந்த டர்போ என்ஜின் ஆப்ஷன் உடன் 6-ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் இணைக்கப்படுகிறது. ஆக, சிட்ரோன் சி3 காரை ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் ஆப்ஷனில் வாங்க முடியாது. ஸ்விஃப்ட் காரை போல், சிஎன்ஜி ஆப்ஷனிலும் சி3 கார் கிடைப்பதில்லை. ஆனால், சிட்ரோன் சி3 காரை இ-சி3 என்கிற பெயரில் எலக்ட்ரிக் வெர்சனில் வாங்கலாம். இசி3 காரில் 29.2kWh பேட்டரி பேக் கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: சிட்ரோன் சி3 ஆனது பிரெஞ்சு ஸ்டைல் ஹேட்ச்பேக் கார் ஆகும். இந்த காரின் வண்ண நிறங்களிலான தோற்றத்தை வைத்து இதனை அடையாளம் கண்டுவிடலாம். பிரெஞ்சு ஸ்டைல் காராக இருப்பினும், சி3 கார்களை மேட்-இன்-இந்தியா காராக சிட்ரோன் நிறுவனம் உருவாக்குகிறது. அதுவே, மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் ஆனது ஜப்பானிய ஸ்டைல் காராக உருவாக்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








