சாதாரணமாவே இந்த மாருதி காரை வீட்டுக்கு மளிகை சாமான் வாங்குற மாதிரி வாங்கிட்டு இருக்காங்க.. இதுல இது வேறையா!
இந்தியர்களின் பிரியமான கார் மாடல்களில் ஒன்றாக மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) இருக்கின்றது. இந்த ஹேட்ச்பேக் காரை ஒரு காலத்தில் இந்தியர்கள் போட்டிப் போட்டு வாங்கிக் கொண்டிருந்தனர். ஆனால், இப்போது இதன் விற்பனை லேசாக டல்லடிக்கத் தொடங்கி இருக்கின்றது.
இதற்கு சான்றாக நடந்து முடிந்த 2024 மார்ச் மாதத்தின் விற்பனை புள்ளி விபரங்கள் அமைந்திருக்கின்றன. அந்த மாதத்தில் மட்டும் மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் கார் 15,728 யூனிட்டுகள் வரை விற்பனையாகின. இந்த உயரிய எண்ணின் காரணமாக இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் ஹேட்ச்பேக் கார்கள் வரிசையில் இரண்டாவது இடத்தை ஸ்விஃப்ட் பிடித்தது.

முதல் இடத்தில் மாருதியின் மற்றுமொரு ஹேட்ச்பேக் கார் மாடலான வேகன்ஆர் பிடித்திருப்பது குறிப்பிடத்தகுந்தது. என்னதான் இரண்டாவது இடத்தை ஸ்விஃப்ட் பிடித்திருந்தாலும் அது முந்தைய விற்பனைகளுடன் ஒப்பிடுகையில் இது சற்று குறைவான விற்பனையே ஆகும். உதாரணமாக சென்ற 2023 ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில் ஸ்விஃப்ட் 17,559 யூனிட்டுகள் வரை விற்பனையாகின என்பது குறிப்பிடத்தகுந்தது.
இதை வைத்து பார்க்கையில் கடும் விற்பனை வீழ்ச்சியை ஸ்விஃப்ட் இந்தியாவில் சந்தித்துக் கொண்டிருக்கின்றது என்பது தெளிவாக தெரிகின்றது. இருப்பினும், அதன் விற்பனை எண்ணிக்கை என்பது அவ்வளவு சாதாரணமான எண் கிடையாது என்பதை நாம் இங்கு ஒப்புக் கொண்டுதான் ஆக வேண்டும். சில நிறுவனங்களின் ஹேட்ச்பேக் கார் மாடல்கள் இந்த எண்ணைத் தொட ஆறு மாதத்திற்கும் மேலாக எடுத்துக் கொள்ளும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்தநிலையிலேயே விற்பனை வரும் நாட்களில் ஸ்விஃப்ட் காரின் விற்பனை இன்னும் பலமடங்காக அதிகரிக்கும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமான ஓர் தகவலே தற்போது வெளியாகி இருக்கின்றது. அது, விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் புதிய ஸ்விஃப்ட் கார் பாதுகாப்பு விஷயத்தில் மிக சிறந்ததாக இருக்கும் என்கிற தகவலே ஆகும்.
2024 சுஸுகி ஸ்விஃப்ட் காரை ஜப்பான் என்சிஏபி (New Car Assessment Programs) சமீபத்தில் மோதல் ஆய்விற்கு உட்படுத்தி அதன் பாதுகாப்பு திறனை சோதித்து இருக்கின்றது. இந்த ஆய்வில் புதிய ஸ்விஃப்ட் ஐந்திற்கு நான்கு ஸ்டார்கள் பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்று அசத்தி இருக்கின்றது.

மாருதி சுஸுகியின் பெரும்பாலான தயாரிப்புகள் 3 ஸ்டார்களுக்கும் குறைவான பாதுகாப்பு ரேட்டிங்கைக் பெற்றிருக்கின்ற சூழலில் புதிய ஸ்விஃப்ட் அதிகபட்ச பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற்றிருப்பது ஒட்டுமொத்த வாகன உலகையும் ஆச்சரியத்தில் மூழ்க செய்யும் வகையில் அமைந்திருக்கின்றது. பல்வேறு பிரிவுகளின்கீழ் மேற்கொள்ளப்பட்ட மோதல் ஆய்வில் புதிய ஸ்விஃப்ட் அதிகபட்ச புள்ளிகளையேப் பெற்றிருக்கின்றது.
இதன் அடிப்படையிலேயே ஜப்பான் என்சிஏபி புதிய ஸ்விஃப்ட் காருக்கு 4 ஸ்டார்களை வாரி வழங்கி இருக்கின்றது. ஜப்பானில் விற்பனைக்குக் கிடைக்கும் 2024 ஸ்விஃப்ட் பலதரப்பட்ட பாதுகாப்பு அம்சங்களைத் தனக்குள் தாங்கி இருக்கின்றது. இதன் விளைவாகவே அதனால் இந்த அளவு பாதுகாப்பு ரேட்டிங்கைப் பெற முடிந்திருக்கின்றது.
குறிப்பாக, அடாஸ், க்ரூஸ் கன்ட்ரோல், டிரைவரை கண்கானிக்கும் வசதி, தேவைக்கேற்ப ஹை பீம் லைட்டை ஒளிர செய்யும் வசதி, இரட்டை சென்சார்கள் கொண்ட பிரேக்கிங் சிஸ்டம், சாலையோரத்தில் இருக்கும் சிக்னலைக் கண்டறிந்து அதுகுறித்த எச்சரிக்கையை வழங்கும் வசதி என ஏகப்பட்ட வசதிகளை ஜப்பானுக்கான ஸ்வஃப்ட் பெற்றிருக்கின்றது.
இதுதவிர, முன் பக்கத்தில் யாரேனும் குறிக்கிட்டால் அதுகுறித்து முன்கூட்டியே எச்சரிக்கும் வசதி, பிளைண்ட் ஸ்பாட் மானிட்டர், 360 டிகிரி பார்வை திறன் கொண்ட கேமிரா ஆகிய வசதிகளையும் இந்த கார் தனக்குள் தாங்கி உள்ளது என்பது குறிப்பிடத்தகுந்தது. இந்தியாவில் விரைவில் விற்பனைக்கு வர இருக்கும் ஸ்விஃப்ட் காரில் இதே அம்சங்கள் இடம் பெறுமா என்பது கேள்விக் குறியே.
இப்போது அந்த காருக்கு புக்கிங்குகள் ஏற்கப்பட்டு வருகின்றன. வருகின்ற மே மாதம் 9 ஆம் தேதி அன்றே இந்த கார் அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் வெளியீடு செய்யப்பட இருக்கின்றது. அன்றையே இந்தியாவிற்கான ஸ்விஃப்ட் காரில் என்ன மாதிரியான தொழில்நுட்ப வசதிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன? பயணிகளுக்கான பாதுகாப்பு கருவிகள் வழங்கப்பட்டு இருக்கின்றன? என்பது போன்ற அனைத்து விபரங்களும் தெரிய வரும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: நம்முடைய இந்தியாவிற்கான கார்களை ஆராய்வதற்கு இந்தியாவிற்கு என தனியாக பாரத் என்சிஏபி (Bharat NCAP) தொடங்கப்பட்டு இருக்கின்றது. இதுவே நமக்கான பாதுகாப்பான கார்களை ஆராய இருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. புதிய ஸ்விஃப்ட் விற்பனைக்கு வந்த பின்னர் அது பாரத் என்சிஏபி வாயிலாக மோதல் ஆய்விற்கு உட்படுத்தப்படும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications









