ஃபார்ச்சூனர் காரை வாங்கும் ஐடியாவில் இருக்கிறீர்களா? அதற்கு இணையான புது கார் ரெடியாகுது!!
எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம், அதன் க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் (Gloster Facelift) காரை விரைவில் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளது. இதற்கிடையில் கடந்த சில மாதங்களாக புதிய க்ளோஸ்டர் கார் இந்தியாவில் சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. இந்த வரிசையில், தற்போது மீண்டும் க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் ஒன்று டெல்லி நெடுஞ்சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்ட போது எங்களது கண்ணில் பட்டது. அப்போது நாங்கள் காட்சிப்படுத்திய வீடியோவையும், புதிய க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் காரை பற்றியும் இனி பார்க்கலாம்.
2019ஆம் ஆண்டில் ஹெக்டர் கார் மூலமாக இந்திய கார்கள் மார்க்கெட்டில் நுழைந்த எம்ஜி மோட்டார் நிறுவனம், அதன்பின் இந்தியாவில் அறிமுகப்படுத்திய விலையுயர்ந்த கார் க்ளோஸ்டர் ஆகும். அந்த அளவிற்கு பிரம்மாண்டமானதாகவும், சொகுசு வசதிகள் மிகுந்ததாகவும் க்ளோஸ்டர் உருவாக்கப்பட்டது. விலையுயர்ந்த கார்கள் அதிகமாக இந்தியாவில் விற்பனை ஆகுவதில்லை. இதனால், எம்ஜி க்ளோஸ்டர் காரின் விற்பனையும் பெரியதாக பதிவாகவில்லை.

இதனையடுத்து, க்ளோஸ்டரை மேம்படுத்தும் முயற்சியில் எம்ஜி மோட்டார் இறங்கியுள்ளது. இந்த முயற்சியின் ஒரு பகுதியாக, மேம்படுத்தப்பட்ட 2025 க்ளோஸ்டர் கடந்த சில மாதங்களாக தொடர்ச்சியாக சோதனை ஓட்டங்களில் உட்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில், தற்போது மீண்டும் டெல்லி - ஜெய்பூர் நெடுஞ்சாலையில் 2025 எம்ஜி க்ளோஸ்டர் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது.
இந்த சோதனை ஓட்டத்தில் 2025 க்ளோஸ்டர் கார் முழுவதுமாக மறைப்புகளால் மறைக்கப்பட்ட நிலையில் காட்சியளிக்கிறது. இருப்பினும், ஆஸ்திரேலியாவில் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மேக்ஸஸ் டி90 காரின் தோற்றத்தை புதிய க்ளோஸ்டர் கார் பெற்றிருப்பது மறைப்புகளை தாண்டி நம்மால் பார்க்க முடிகிறது. எம்ஜி க்ளோஸ்டர் காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட கார் மேக்ஸஸ் டி90 என்பது குறிப்பிடத்தக்கது.

எம்ஜி ஹெக்டர் காரில் வழங்கப்படுவதை போன்று பிளவுப்பட்ட டிசைனில் ஹெட்லேம்ப் 2025 க்ளோஸ்டரில் கொடுக்கப்படலாம் என்பதை தற்போது சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ள க்ளோஸ்டர் காரை பார்க்கும்போது தெரிய வருகிறது. ஹெட்லேம்ப் சிஸ்டத்தில் செங்குத்தான டிசைனில் எல்இடி டிஆர்எல்-களும், காரின் முன்பக்கத்தில் பெரிய அளவில் கிரில் பகுதியும் வழங்கப்பட்டுள்ளதையும் பார்க்க முடிகிறது.
2025 க்ளோஸ்டரின் முன்பக்கத்தில் மட்டுமே எம்ஜி நிறுவனம் அப்டேட்களை கொண்டுவரும் என தெரிகிறது. மற்றப்படி, காரின் பக்கவாட்டு மற்றும் பின்புறங்களின் தோற்றத்தில் பெரியதாக எந்த மாற்றமும் இருக்காது என்றே கூறப்படுகிறது. புதிய க்ளோஸ்டரின் பின்பக்கத்தில் டெயில்லேம்ப்களின் டிசைன் சற்று புதியதாக வழங்கப்படலாம்.
அதேபோல், காரின் அலாய் சக்கரங்களின் டிசைனும் மாற்றி வழங்கப்படலாம். இவை எல்லாவற்றையும் விட 2025 க்ளோஸ்டர் கார் சாலையில் இயங்கும் கம்பீரம் புதுமையானதாக இருக்கும் என்பது உறுதி. வெளிப்புற தோற்றத்தை போன்று, 2025 க்ளோஸ்டரின் உட்புறமும் ஆஸ்திரேலியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள மேக்ஸஸ் டி90 ஃபேஸ்லிஃப்ட் காரில் இருப்பது போன்றே வழங்கப்படும்.
இதன்படி, வழக்கமான கியர் லிவருக்கு பதிலாக, சுழலக்கூடிய கியர் செலக்டர் 2025 க்ளோஸ்டரில் கொடுக்கப்படலாம். அட்வான்ஸான டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் பேனல், ரீடிசைனில் டேஸ்போர்டு, பெரிய அளவில் ஏசி உள்ளிட்டவை புதிய க்ளோஸ்டரில் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படும் மற்ற தொழிற்நுட்ப அம்சங்கள் ஆகும். 2.0 லிட்டர் டர்போ டீசல் என்ஜின் புதிய க்ளோஸ்டரிலும் தொடரப்படும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: டொயோட்டா ஃபார்ச்சூனர் போன்ற பிரபலமான எஸ்யூவி கார்களுக்கு போட்டியாக விளங்கும் எம்ஜி க்ளோஸ்டரின் முதல் இன்னிங்க்ஸ் இந்தியாவில் பெரியளவில் எடுப்படவில்லை. 2வது இன்னிங்ஸில் க்ளோஸ்டர் ஃபேஸ்லிஃப்ட் கார் மக்கள் மத்தியில் கவனத்தை பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம். 2025 எம்ஜி க்ளோஸ்டரின் இந்திய அறிமுக தேதி இன்னும் உறுதி செய்யப்படவில்லை.


Click it and Unblock the Notifications








