3 ஸ்டார்களை அள்ளிய ரெனால்ட் கார்... இந்தியாவுக்கு வர போகுது - புக் பண்ண பணத்தை சேர்த்து வைங்க!!
ரெனால்ட் (Renault), இந்தியாவில் பிரபலமான கார் நிறுவனங்களுள் ஒன்று. ரெனால்ட் கார்களுக்கு நல்ல வரவேற்பு உள்ளது. குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளில் ரெனால்ட் கார்களை நிறைய பேர் வாங்குகின்றனர். ஏனெனில், ரெனால்ட் ஆனது ஐரோப்பிய கண்டத்தில் உள்ள பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ஓர் கார் நிறுவனமாகும். ரெனால்ட் கார்களின் தரத்தில் மக்களுக்கு எப்போதுமே ஒரு சந்தேகம் உள்ளது. இந்த நிலையில், ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் சமீபத்தில் உட்படுத்தப்பட்ட ரெனால்ட் கார் ஒன்றின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி பார்க்கலாம்.
இந்தியாவில் கடந்த காலங்களில் இருந்தே கார்கள் மார்க்கெட்டில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க ரெனால்ட் போராடி வருகிறது. ரெனால்ட்டில் இருந்து இந்தியாவில் ஓரளவிற்கு அதிகம் விற்பனை செய்யப்பட்ட மிகவும் சில கார்களுள் ரெனால்ட் டஸ்டரும் ஒன்றாகும். ஆனால், தற்சமயம் இந்தியாவில் டஸ்டர் விற்பனையில் இல்லை.

புதிய மேம்படுத்தப்பட்ட ரெனால்ட் டஸ்டர் இந்தியாவில் 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில்தான், புதிய 3-ஆம் தலைமுறை டஸ்டர் கார் யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் சோதனை செய்யப்பட்டுள்ளது. ஐரோப்பாவில் டஸ்டர் காரை டாசியா டஸ்டர் என்கிற பெயரில் ரெனால்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. டேசியா ஆனது ரெனால்ட்டின் கீழ் இயங்கும் துணை நிறுவனமாகும்.
ஆனால், இந்தியாவில் ரெனால்ட் டஸ்டர் என்கிற பெயரில்தான் புதிய டஸ்டர் அறிமுகம் செய்யப்படும். ஐரோப்பாவில் தற்போது கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ள டேசியா டஸ்டர் கார் நிச்சயமாக அப்படியே நம் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படாது. இந்திய சூழலுக்கும், வாடிக்கையாளர்களுக்கும் ஏற்ப காரில் சில திருத்தங்கள் செய்யப்படும். ஆதலால், தற்போது யூரோ என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் டேசியா டஸ்டர் கார் பெற்றுள்ள மதிப்பெண்களை இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட உள்ள ரெனால்ட் டஸ்டர் காருடன் ஒப்பிட முடியாது.

ஐரோப்பிய என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் டேசியா டஸ்டர் கார் 5க்கு 3 நட்சத்திரங்களை பெற்றுள்ளது. பெரியவர்கள் பாதுகாப்பில் 70 சதவீத மதிப்பெண்களையும், குழந்தைகள் பாதுகாப்பில் 84 சதவீத மதிப்பெண்களையும், பாதுகாப்பு உதவி அமைப்புகளில் 57 சதவீத மதிப்பெண்களையும் டேசியா டஸ்டர் கார் பெற்றுள்ளது. பாதசாரிகள் பாதுகாப்பில் இந்த காருக்கு 60% மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளன.
இந்த கிராஷ் டெஸ்ட்டில் உட்படுத்தப்பட்டது இடது பக்கத்தில் ஸ்டேரிங்கை கொண்ட டேசியா டஸ்டர் கார் ஆகும். 1.6 லிட்டர் பெட்ரோல்-ஹைப்ரீட் என்ஜினை கொண்ட இந்த காரில் பாதுகாப்பு அம்சங்களாக 6 ஏர்பேக்குகள், சீட் பெல்ட் ரிமைண்டர்ஸ், ப்ரீடென்ஷ்னர்ஸ் மற்றும் ADAS உள்ளிட்டவை வழங்கப்பட்டு இருந்தன. இந்த டெஸ்ட்டில் காரை முன்பக்கமாக மோதவிட்டு பார்த்ததில், டிரைவரின் மார்பு பகுதியை தவிர்த்து, மற்ற பயணிகளுக்கு பெரியதாக எந்த பாதிப்பும் ஏற்படாது என்பது கண்டறியப்பட்டுள்ளது.

அதேபோல், காரின் இருப்பக்கங்களிலும் மோதல்களை ஏற்படுத்தி பார்த்ததில், காருக்குள் இருந்த அனைவருக்கும் சிறந்த பாதுகாப்பு கிடைத்தது. இந்த மோதலில்தான் நிறைய மதிப்பெண்களை டஸ்டர் அள்ளியது என சொல்ல வேண்டும். 10 வயது குழந்தைக்கான டம்மியை வைத்து சோதித்து பார்த்ததில், முன்பக்க மோதலில் டம்மியின் கழுத்து பகுதியை தவிர்த்து, மற்ற பகுதிகள் அனைத்தும் போதுமான பாதுகாப்பை பெற்றன. அதேபோல், 6 வயது குழந்தை டம்மிக்கும் சிறந்த பாதுகாப்பு சைடு பேரியர் இம்பேக்ட்டில் கிடைத்தது.
டேசியா டஸ்டர் காரில் இருந்த தானியங்கி எமர்ஜென்சி பிரேக்கிங் சிஸ்டம் ஆனது இந்த சோதனையில் மிக முக்கியமான பங்களித்தது. இருப்பினும், பின் இருக்கை பயணிகளுக்கென அதிகமாக பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படாதது குறையாக அமைந்தது. விண்ட்ஸ்க்ரீனை தாங்கி நிற்கும் காரின் பில்லர்கள் வலிமையானவைகளாக இருந்ததால், பாதசாரிகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தக்கூடியவையாக கருதப்பட்டுள்ளன. காருடன் எந்த பக்கத்தில் இருந்து மோத நேர்ந்தாலும், பாதசாரிகளின் இடுப்பு பகுதி அதிக சேதத்தை சந்திக்கக்கூடியதாக கண்டறியப்பட்டுள்ளது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: ஏற்கனவே கூறியதுபோல், ஐரோப்பாவில் தற்போது கிராஷ் டெஸ்ட் செய்யப்பட்டுள்ள டேசியா டஸ்டர் கார் ஆனது இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட போவதில்லை. ஆதலால், இந்த கிராஷ் டெஸ்ட் முடிவுகளை நாம் பெரிதாக கவனத்தில் கொள்ள வேண்டியதில்லை. 2025ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டதற்கு பிறகு இந்தியாவின் பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் ரெனால்ட் டஸ்டர் உட்படுத்தப்படுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.


Click it and Unblock the Notifications









