பைக்குகளுக்கு சவால் விடும் மைலேஜ்!! ரூ.10 லட்சம் மட்டும் தான் கையில் இருக்கா... இதில் ஒரு காரை வாங்கலாம்!
உலகின் மிக பெரிய ஆட்டோமொபைல் சந்தையாக விளங்கினாலும், நம் நாட்டில் நிறைய பேர் மைலேஜை பார்த்துதான் காரை வாங்குகின்றனர். அதாவது, விலைமிக்க கார்களின் பக்கம் நிறைய பேர் செல்வதில்லை. அப்படிப்பட்ட இந்திய மார்க்கெட்டில் தற்சமயம் ரூ.10 இலட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய சிறந்த 5 மைலேஜ் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
மாருதி சுஸுகி செலேரியோ (Maruti Suzuki Celerio): ரூ.10 இலட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய மைலேஜ் காராக முதலாவதாக நாம் இந்த வரிசையில் பார்க்கப் போவது செலேரியோ ஆகும். மாருதியின் பிரபலமான ஹேட்ச்பேக் கார்களுள் ஒன்றான செலேரியோவின் 3வது ஜென்ரேஷன் 2021ஆம் ஆண்டின் நவம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

இந்த விலை குறைவான ஹேட்ச்பேக் காரில் 999சிசி பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது. இதன் மூலமாக கார் அதிகப்பட்சமாக லிட்டருக்கு 26.6 கிமீ மைலேஜை வழங்குகிறது. சிஎன்ஜி ஆப்ஷனிலும் செலேரியோ விற்பனை செய்யப்படுகிறது. செலேரியோ சிஎன்ஜி காரின் மைலேஜ் 31.59km/kg வரையில் கிடைக்கிறது.
மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10): ஆல்டோ கார்களுக்கு இந்திய மார்க்கெட்டில் நீண்ட கால வரலாறு உள்ளது. செலேரியோவில் பொருத்தப்படும் அதே 999சிசி பெட்ரோல் என்ஜின் தான் ஆல்டோ கே10 காரிலும் வழங்கப்படுகிறது. ஆனால், ஆல்டோவின் அடையாளமே அதன் அளவில்-சிறிய 800சிசி என்ஜின் ஆகும்.

ஆனால், ஆல்டோ 800 காரின் விற்பனையை கடந்த 2022ஆம் ஆண்டில் மாருதி சுஸுகி நிறுவனம் நிறுத்தியது. இதனால், 1 லிட்டர் என்ஜின் உடன் மட்டுமே ஆல்டோ கே10 கிடைக்கிறது. அதேநேரம், சிஎன்ஜி ஆப்ஷனிலும் ஆல்டோ கே10 கிடைக்கிறது. பெட்ரோல் என்ஜினில் 24.9kmpl வரையிலும், சிஎன்ஜி ஆப்ஷனில் 33.85kmpkg வரையிலான மைலேஜையும் இந்த கார் வழங்குகிறது.
மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso): இந்த லிஸ்ட்டில் நாம் பார்க்க போகும் 3வது மாருதி கார் இதுவாகும். இதற்கு காரணம், மேலே கண்ட கார்களில் பொருத்தப்படும் அதே 999சிசி பெட்ரோல் என்ஜினை தான் இந்த காரிலும் மாருதி சுஸுகி நிறுவனம் வழங்குகிறது. இந்த என்ஜின் உடன் 24.7kmpl வரையிலான மைலேஜை எஸ்-பிரெஸ்ஸோ வழங்கக்கூடியதாக உள்ளது.

மேலே கண்ட மாருதி கார்களை போலவே இதனையும் சிஎன்ஜி ஆப்ஷனில் வாங்கலாம். சிஎன்ஜி பவர்டிரெயின் உடன் எஸ்-பிரேஸ்ஸோ 32.73 kmpkg வரையில் மைலேஜை கொடுக்கிறது. இந்த ஹேட்ச்பேக் ரக காரை கடைசியாக 2022இல் மாருதி சுஸுகி அப்டேட் செய்தது. அப்போது இந்த காரின் அறிமுக எக்ஸ்-ஷோரூம் விலையாக வெறும் ரூ.4.25 லட்சம் நிர்ணயிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki WagonR): உயரம் அதிகம் கொண்ட ஹேட்ச்பேக் காராக வேகன்ஆர் விளங்குகிறது. இதன் காரணமாக, மேலே கண்ட மாருதி ஹேட்ச்பேக் கார்களை காட்டிலும் உட்பக்கத்தில் சற்று கூடுதல் இடவசதியை இந்த கார் வழங்குகிறது. 999சிசி பெட்ரோல் மற்றும் 1.2 லிட்டர் பெட்ரோல் என இரு விதமான என்ஜின் ஆப்ஷன்களில் வேகன்ஆர் விற்பனை செய்யப்படுகிறது.

அதேநேரம், சிஎன்ஜி ஆப்ஷனிலும் வேகன் ஆர் கிடைக்கிறது. 999சிசி என்ஜின் உடன் 25.19kmpl வரையிலான மைலேஜையும், சிஎன்ஜி ஆப்ஷனில் 34.05kmpkg வரையிலான மைலேஜையும் வேகன் ஆர் வழங்குகிறது. சற்று கூடுதல் பவர் அவுட்-புட்டை எதிர்பார்ப்பவர்கள் 1.2 லிட்டர் பெட்ரோல் என்ஜின் உடன் வேகன் ஆரை வாங்கலாம்.
மாருதி சுஸுகி டிசைர் (Maruti Suzuki Dzire): இந்த லிஸ்ட்டில் நாம் கடைசியாக பார்க்க போகும் கார் இதுவாகும். இதுவும் மாருதி சுஸுகி நிறுவனத்துடையதே ஆகும். ஸ்விஃப்ட் ஹேட்ச்பேக் காரின் சப்-காம்பெக்ட் செடான் வெர்சனாக டிசைர் விளங்குகிறது. ஆனால், ஸ்விஃப்ட்டை காட்டிலும் சற்று விலைமிக்கதாக டிசைர் உள்ளது.

ஏனெனில், ஆற்றல்மிக்க 1.2 லிட்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் டிசைர் விற்பனை செய்யப்படுகிறது. இயக்க ஆற்றல் அதிகமாக கிடைப்பதால் மைலேஜ் குறைகிறது. இருப்பினும், டிசைர் காரில் 22.61 கிமீ மைலேஜை ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு பெறலாம். மேலும், டிசைர் சிஎன்ஜி காரில் 31.12 கிமீ மைலேஜை ஒரு கிலோ இயற்கை எரிவாயில் பெறலாம்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்தியாவில் ரூ.10 இலட்சத்திற்குள் கிடைக்கக்கூடிய மைலேஜ் கார்களை பற்றி பார்த்தால், இந்த வரிசையில் முதல் 5 இடங்களை மாருதி சுஸுகி கார்கள் இடம்பிடித்துள்ளன. இதில் இருந்து தனது கார்களின் மைலேஜ் விஷயத்தில் மாருதி சுஸுகி எந்த அளவிற்கு முக்கியத்துவம் கொடுக்கிறது என்பதை அறியலாம். இதில் ஸ்விஃப்ட் காரை இந்த 2024ஆம் வருடத்தில் அப்டேட் செய்ய மாருதி சுஸுகி திட்டமிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications









