மாருதியை ஊதி தள்ள மஹிந்திரா எல்லா விதத்திலும் தயார் ஆகிட்டு இருக்கு!! ரோடு டெஸ்ட்டிங் பயங்கர ஸ்பீடா நடக்குது!
மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக தார் வாகனம் 5 கதவுகள் உடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. இதற்கிடையில் அவ்வப்போது சோதனை செய்யப்பட்டு வரும் தார் வாகனம் மீண்டும் ஒருமுறை சாலையில் ஓட்டிப் பார்த்து சோதனை செய்யப்பட்டு உள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் இணையத்தில் வெளியாகி உள்ள ஸ்பை படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களுக்கு சிறப்பான வரவேற்பு பல தரப்பட்ட மக்களிடையே கிடைத்து வருகிறது. இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனங்களாக மஹிந்திரா தார், மாருதி சுஸுகி ஜிம்னி மற்றும் ஃபோர்ஸ் குர்கா என தற்போதைக்கு மூன்றே 3 மாடல்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு கொண்டிருக்கின்றன.

இதில் அதிகம் விற்பனையாகுபவை என்று பார்த்தால், மஹிந்திரா தார் ஆகும். தாரின் பாதி எண்ணிக்கையில் கூட மற்ற 2 வாகனங்கள் விற்பனையாகுவது இல்லை. தார் வாகனத்தின் ஒரே குறை என்னவென்றால், அதில் கொடுக்கப்படும் கதவுகளின் எண்ணிக்கை ஆகும். மஹிந்திரா தாரில் வெறும் 3 கதவுகள் மட்டுமே தற்சமயம் கொடுக்கப்படுகின்றன.
ஆனால், விரைவில் 5-டோர் மஹிந்திரா தார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. 5-கதவு தார் வாகனம் வருகிற ஆகஸ்ட் 15ஆம் தேதி மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ளதாக மஹிந்திரா நிறுவனம் ஏற்கனவே அறிவித்துவிட்டது. அதற்கு இன்னும் 4 மாதங்கள் இருக்கும் நிலையில், 5-டோர் தார் வாகனம் சோதனைகளில் தொடர்ந்து உட்படுத்தப்பட்டு வருகிறது.

இதன் காரணமாகவே, பொது சாலைகளில் அவ்வப்போது 5-டோர் தார் வாகனத்தை காண முடிகிறது. இந்த வகையில் தற்போது மீண்டும், மஹராஷ்டிரா மாநிலத்தில் மும்பைக்கு அருகே முழுவதும் மறைக்கப்பட்ட நிலையில் 5-டோர் தார் வாகனம் ஒன்று சாலையில் ஓட்டி பார்த்து சோதனை செய்யப்பட்டுள்ளது. நமக்கு கிடைத்துள்ள தகவலின்படி, மஹாராஷ்டிரா மாநிலத்தில் நாஷிக் மற்றும் மும்பைக்கு இடைப்பட்ட பகுதியில் இந்த 5-டோர் தார் அடையாளம் காணப்பட்டுள்ளது.
வழக்கம்போல், இந்த சோதனை ஓட்டத்திலும் 5-டோர் தார் வாகனம் முழுவதுமாக மறைக்கப்பட்டுள்ளது. வாகனத்தின் சக்கரங்கள் கூட மறைக்கப்பட்டு உள்ளன. வாகனத்தின் டிசைன் வெளியே கசிந்துவிட கூடாது என்பதற்காக இவ்வாறு மறைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும், இது மஹிந்திரா தார் வாகனம் என்பதையும், இதில் 5 கதவுகள் உள்ளன என்பதையும் அறிய முடிகிறது.

தற்போது நமக்கு கிடைத்துள்ள ஸ்பை படங்களில், வாகனத்தின் முன்பக்கத்தை காண முடியவில்லை. வாகனத்தின் பின்பக்கத்தில் விளக்குகள் சாதாரணமானவைகளாக பொருத்தப்பட்டுள்ளன. அதாவது, ஆகஸ்ட் 15இல் அறிமுகம் செய்யப்படும் 5-டோர் தார் வாகனத்தில் இந்த டெயில்லைட்கள் இருக்காது. இதன் காரணமாகவே, இந்த சோதனை வாகனத்தின் டெயில்லைட்கள் மற்றும் ரியர் இண்டிகேட்டர்கள் மறைக்கப்படவில்லை.
3-டோர் தார் உடன் ஒப்பிடுகையில், வித்தியாசமான முன்பக்கத்துடன் 5-டோர் தார் தயாரிக்கப்பட்டு வருவதாக சமீபத்தில் தகவல்கள் வெளிவந்து இருந்தன. இதன்படி, வாகனத்தின் முன்பக்க க்ரில் நன்கு அகலமானதாக கொடுக்கப்பட உள்ளது. அதேபோல், முன்பக்க ஹெட்லைட்கள் மற்றும் பின்பக்க டெயில்லைட்களின் டிசைனும் மாற்றப்பட உள்ளது. சமீபத்தில் வெளியான தகவலின்படி, 19-இன்ச் டைமண்ட்-கட் அலாய் சக்கரங்களுடன் 5-டோர் தார் அறிமுகம் செய்யப்பட உள்ளது.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: மாருதி சுஸுகியின் ஜிம்னி விற்பனையில் போட்டியாக இருந்தாலும், மஹிந்திரா தார் வாகனத்தின் விற்பனை சிறப்பாக உள்ளதை கூறியே ஆக வேண்டும். 3 கதவுகள் மட்டுமே இருப்பதினால் தார் வாகனத்தினுள் ஏறுவதும், இறங்குவதும் சற்று சிரமமாக உள்ள போதிலும் இந்த வாகனத்தின் விற்பனை சிறப்பாக உள்ளது எனும்போது, 5-டோர் ஆப்ஷனில் அறிமுகம் செய்யப்பட்ட பின் தாரின் விற்பனை புதிய உச்சத்தை தொடும் என்பது உறுதி.


Click it and Unblock the Notifications









