இந்தியாவில் இப்படிப்பட்ட கார்கள் எல்லாம் கூட விற்பனையில் இருக்கா? பலருக்கு தெரியாத பவர்ஃபுல்லான கார்கள்!!
உலகளவில் மிக பெரிய கார் சந்தை என்றால், அதில் நமது இந்தியாவும் ஒன்று என்பதில் எந்த சந்தேகமும் இல்லை. இதன் காரணமாகவே, புது புது வெளிநாட்டு கார் நிறுவனங்கள் தொடர்ச்சியாக நம் நாட்டில் அறிமுகமாகி வருகின்றன. சமீப வருடங்களில் சிட்ரோன், பிஒய்டி போன்ற கார் நிறுவனங்கள் இந்திய மார்க்கெட்டில் களம்புகுந்து இருப்பதை பற்றி நான் சொல்ல வேண்டியதில்லை. நம் நாட்டில் விலை குறைவான கார்களில் இருந்து விலைமிக்க ரோல்ஸ்-ராய்ஸ் கார்கள் வரையில் விற்பனையில் உள்ளன. ஏனெனில், அந்த அளவிற்கு பல தரப்பட்ட மக்கள் நம் நாட்டில் வசிக்கின்றனர்.
ஆனால், நாம் இந்த தொகுப்பில் பார்க்க போவது விலையுயர்ந்த, பவர்ஃபுல்லான ஹைப்ரீட் கார்களை பற்றி மட்டுமே ஆகும். இத்தகைய கார்களை லம்போர்கினி, ஃபெராரி, மெர்சிடிஸ் என பல தரப்பட்ட கார் நிறுவனங்கள் விற்பனை செய்கின்றன. அவற்றுள் பவர்ஃபுல்லான 5 ஹைப்ரீட் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

லம்போர்கினி ரெவல்டோ (Lamborghini Revuelto): பொது விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட முதல் லம்போர்கினி ஹைப்ரீட் கார். முன்பு விற்பனையில் இருந்த லம்போர்கினி அவெண்டேடார் காருக்கு பதிலாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. லம்போர்கினி ரெவல்டோ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.8.89 கோடியாக தற்சமயம் உள்ளது. இந்த லம்போர்கினி காரில் 3 எலக்ட்ரிக் மோட்டார்கள் உடன் 6.5 லிட்டர், நேச்சுரலி-அஸ்பிரேட்டட் வி12 என்ஜின் பொருத்தப்படுகிறது.

ஃபெராரி 296 ஜிடிஎஸ் (Ferrari 296 GTS): இந்த லிஸ்ட்டில் நாம் அடுத்ததாக பார்க்கவுள்ளது, ஃபெராரியின் 296 ஜிடிஎஸ் கார் ஆகும். உலகளவில் பிரபலமான ஃபெராரி 296 ஜிடிபி காரின் கன்வெர்டபிள் வெர்சனாக இது விளங்குகிறது. ஃபெராரியின் இந்த சூப்பர்காரில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போ வி6 என்ஜின் உடன் எலக்ட்ரிக் மோட்டார் இணைக்கப்படுகிறது. இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.6.24 கோடி ஆகும்.

மெக்லாரன் அர்டுரா (Mclaren Artura): மெக்லாரன் அர்டுரா காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.5.2 கோடியாக உள்ளது. மெக்லாரன் பி1 மற்றும் ஸ்பீடுடெயில் கார்களுக்கு அடுத்து மெக்லாரனின் 3வது ஹைப்ரீட் காராக விளங்கும் அர்டுராவில் 3.0 லிட்டர் ட்வின்-டர்போ வி6 என்ஜின் எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்தப்படுகிறது. இந்த காரில் பொருத்தப்படுகின்ற 7.4kWh பேட்டரி மூலமாக எலக்ட்ரிக் பவரில் மட்டும் 31கிமீ தொலைவிற்கு இந்த காரை இயக்கி செல்ல முடியும்.

மெர்சிடிஸ்-ஏஎம்ஜி ஜிடி63 எஸ்.இ பெர்ஃபார்மன்ஸ் (Mercedes-AMG GT63 SE Performance): செயல்திறன்மிக்க கார்களை பார்க்கிறோம் என்றால், அதில் மெர்சிடிஸ்-ஏஎம்ஜி கார்களை பார்க்காமல் எப்படி? ஏஎம்ஜி ஜிடி63 எஸ்.இ காரின் எக்ஸ்-ஷோரூம் விலை தற்சமயம் ரூ.3.3 கோடியாக உள்ளது. 4 கதவுகளை கொண்ட கூபே ரக காரான இதில் 4.0 லிட்டர் வி8 பெட்ரோல் என்ஜின் பொருத்தப்படுகிறது.

போர்ஷே கேயேன்னே இ-ஹைப்ரீட் (Porsche Cayenne E-Hybrid): இந்த வரிசையில் நாம் பார்க்க போகும், மற்றொரு ஹைப்ரீட் கார் இதுவாகும். கேயென்னேவில் 3-லிட்டர் வி6 என்ஜின் பொருத்தப்படுகிறது. எலக்ட்ரிக் மோட்டார் உடன் பொருத்தப்படும் இந்த என்ஜின் மூலமாக அதிகப்பட்சமாக 470 எச்பி வரையிலான இயக்க ஆற்றலை பெறலாம். இந்த ஹைப்ரீட் காரில் பொருத்தப்படுகின்ற 25.9kWh பேட்டரி மூலமாக எலக்ட்ரிக் பவரில் மட்டும் காரை 90கிமீ தொலைவிற்கு ஓட்டி செல்ல முடியும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: பவர்ஃபுல்லான ஹைப்ரீட் கார்களை மட்டுமே இந்த தொகுப்பில் பார்த்துள்ளோம். ஹைப்ரீட் அல்லாத கார்கள் என்றால், இந்த லிஸ்ட் இன்னும் நீண்டுக் கொண்டே போகும். அதேபோல், உலகின் மற்ற நாடுகளில் விற்பனையில் உள்ள ஹைப்ரீட் கார்களும் அதிகளவில் உள்ளன. இந்த 5 கார்களுள் உங்களது ஃபேவரட் எது என்பதை கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்.


Click it and Unblock the Notifications









