20 வருஷம் இல்ல... இன்னும் 50 வருஷமானாலும் ஸ்கார்பியோ காரை வாங்க ஓர் கூட்டம் இருக்கும்!! 7-சீட்டர் கார் சேல்ஸ்!
இந்தியாவில் 7-சீட்டர் கார்களை வாங்குவதற்கு எப்போதுமே நிறைய கஸ்டமர்கள் குவிகின்றனர். அந்த வகையில், கடந்த 2024 ஏப்ரல் மாதத்திலும் நிறைய எண்ணிகையில் 7-சீட்டர் கார்கள் விற்பனை செய்யப்பட்டு உள்ளன. இது குறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.
இந்தியாவில் 7 இருக்கைகள் உடன் சமீப காலமாக அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் காராக ஆச்சிரியமளிக்கும் வகையில் மஹிந்திரா ஸ்கார்பியோ முதலிடத்தை பிடித்து வருகிறது. ஏனெனில், இந்தியாவில் நீண்ட காலமாக விற்பனையில் இருக்கும் கார்களுள் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ ஆகும். இந்த 7-சீட்டர் எஸ்யூவி காரின் விற்பனை இப்போதும் சிறப்பாக உள்ளது.

கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட மஹிந்திரா ஸ்கார்பியோ கார்களின் எண்ணிக்கை 14,807 ஆகும். ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் வெறும் 9,617 ஸ்கார்பியோ கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் ஸ்கார்பியோ கார்களின் விற்பனை ஆனது 54% அதிகரித்துள்ளது. அதாவது, 2023 ஏப்ரலில் விற்பனை செய்யப்பட்ட ஸ்கார்பியோ கார்களை காட்டிலும் இந்த ஆண்டு ஏப்ரலில் பாதிக்கு மேல் அதிகமாக விற்பனை செய்யப்பட்டுள்ளன.
மாருதி சுஸுகி எர்டிகா இந்த வரிசையில் 2வது இடத்தில் உள்ளது. இந்தியாவின் நம்பர் ஒன் எம்பிவி காராக விளங்கும் எர்டிகா கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 13,544 யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளது. ஆனால், கடந்த ஆண்டு ஏப்ரலில் வெறும் 5,532 எர்டிகா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. இந்த வகையில் பார்த்தால், எர்டிகா கார்களின் விற்பனை ஆனது சுமார் 145% அதிகரித்துள்ளது.

3வது இடத்தை இந்த வரிசையில், மஹிந்திராவின் பொலேரோ பிடித்துள்ளது. கடந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட பொலேரோ கார்களின் எண்ணிக்கை 9,537 ஆகும். மஹிந்திராவில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் 2வது காராக விளங்கும் பொலேரோ கடந்த ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 9,054 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன.
இந்த வகையில், பொலேரோ கார்களின் விற்பனை 5% அதிகரித்துள்ளது. பொலேரோவுக்கு அடுத்து, 4வது இடத்தில் டொயோட்டா இன்னோவா உள்ளது. இன்னோவா கிரிஸ்ட்டா, இன்னோவா ஹைகிராஸ் என 2 விதமான வெர்சன்களில் இன்னோவா கார்கள் விற்பனை செய்யப்படும் நிலையில், கடந்த ஏப்ரல் மாதத்தில் மொத்தம் 7,103 இன்னோவா கார்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2023 ஏப்ரலை விட 47% அதிகமாகும்.

ஏனெனில், அந்த மாதத்தில் வெறும் 4,837 இன்னோவா கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்தன. மஹிந்திராவின் மற்றுமொரு 7-சீட்டர் காரான எக்ஸ்யூவி700 இந்த வரிசையில் 5வது இடத்தை தனதாக்கி உள்ளது. கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் 4,757 எக்ஸ்யூவி700 கார்கள் மட்டுமே விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், இந்த ஆண்டு ஏப்ரலில் 6.134 எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
இதற்கடுத்து 6வது மற்றும் 7வது இடங்களில் கியா கேரன்ஸ் மற்றும் மாருதி சுஸுகி எக்ஸ்.எல்6 உள்ளன. இவற்றின் கடந்த 2024 ஏப்ரல் மாத விற்பனை எண்ணிக்கைகள் முறையே 5,328 மற்றும் 3,509 ஆகும். டொயோட்டா ஃபார்ச்சூனர் (2,325), டாடா சஃபாரி (1,716) மற்றும் ரெனால்ட் டிரைபர் (1,671) இந்த டாப்-10 லிஸ்ட்டில் கடைசி 3 இடங்களில் உள்ள 7-சீட்டர் கார்களாகும்.

டிரைவ்ஸ்பார்க் கருத்து: கடந்த சில வருடங்களுக்கு முன்பு இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் 7-சீட்டர் காராக மஹிந்திரா பொலேரோ தொடர்ந்து முதலிடத்தை பிடித்து வந்தது. ஆனால் தற்போது மஹிந்திராவின் ஸ்கார்பியோ முதலிடத்தை தக்க வைத்து வருகிறது. அதேபோல், மஹிந்திரா எக்ஸ்யூவி700 கார்கள் விற்பனையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இவ்வாறு, 7-சீட்டர் கார்கள் விற்பனையில் மஹிந்திரா முன்னிலை வகித்து வருகிறது.


Click it and Unblock the Notifications









