28 கிமீ மைலேஜ் தரும் காரில் குடும்பத்துடன் போகலாம்.. சீக்கிரமே 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்கு கொண்டு வர போறாங்க
இந்தியாவின் அதிகம் மைலேஜ் தரக் கூடிய கார் மாடல்களில் ஒன்றாக டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் (Toyota Urban Cruiser Hyryder) இருக்கின்றது. இது லிட்டர் ஒன்றிற்கே 28 கிமீ வரையில் மைலேஜ் தரும் என அராய் சான்றளித்து இருக்கின்றது. ஹைபிரிட் தொழில்நுட்பம் கொண்ட தேர்வே இந்த உச்சப்பட்ச மைலேஜை வழங்கும் என்பது குறிப்பிடத்தகுந்தது.
இத்தகைய அதிக மைலேஜை வழங்கும் கார் மாடலையே அதிகம் பேர் பயணிக்கக் கூடிய ஓர் கார் மாடலாக டொயோட்டா நிறுவனம் விரைவில் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. அதாவது, டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரடரில் விரைவில் 7 சீட்டர் வெர்ஷன் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றது.

இப்போதைய நிலவரப்படி இந்த கார் மாடல் 5 சீட்டர் வெர்ஷனில் மட்டுமே விற்பனைக்குக் கிடைக்கின்றது. இந்தியாவில் 7 சீட்டர் கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த டிமாண்டைக் கருத்தில் கொண்டே டொயோட்டா நிறுவனம் அதன் அதிகம் மைலேஜ் தரும் கார் மாடலில் 7 சீட்டர் வெர்ஷனை விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் களமிறங்கி இருக்கின்றது.
இப்போது வெளியாகி இருக்கும் தகவலின்படி, டொயோட்டா நிறுவனம், 7 இருக்கைகள் கொண்ட அர்பன் க்ரூரஸர் ஹைரைடரை 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் விற்பனைக்குக் கொண்டு வந்துவிடும் என்பது தெரிய வந்திருக்கின்றது. இது விற்பனைக்கு வரும்பட்சத்தில் நிறைய கார் மாடல்களுக்கு அது போட்டியாக அமையும்.
குறிப்பாக, எம்ஜி ஹெக்டர் பிளஸ் (MG Hector Plus), டாடா சஃபாரி (Tata Safari), சிட்ரோன் சி3 ஏர் கிராஸ் (Citroen C3 Aircross) மற்றும் ஹூண்டாய் அல்கஸார் (Hyundai Alcazar) ஆகிய கார் மாடல்களுக்கு போட்டியாக மாறும். 7 இருக்கைகள் கொண்ட அர்பன் க்ரூஸர் ஹைரைடர் மூன்று வரிசை இருக்கை அமைப்பையேக் கொண்டிருக்கும்.
இந்த மூன்று வரிசைக்கும் தனி தனியாக ஏசி வெண்டுகள் வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. மேலும், அனைத்து வரிசையும் அதிக இட வசதி மற்றும் கால் வைக்கும் இடத்தையும் கொண்டிருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதுதவிர, இப்போது விற்பனையில் இருக்கும் 5 சீட்டர் வெர்ஷனில் இருந்தும் 7 சீட்டர் லேசாக மாறுபட்டுக் காட்சியளிக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
அதாவது, கூடுதலாக சீவி-சிங்காரித்த நிலையில் இந்த 7 சீட்டர் அர்பன் க்ரூஸர் ஹைரைடர் விற்பனைக்குக் கொண்டு வரப்பட இருக்கின்றது. இதைத்தவிர வேறு எந்த மாற்றமும் இதில் இடம் பெறாது என கூறப்படுகின்றது. குறிப்பாக, எஞ்சின் விஷயத்தில் எந்த மாற்றமும் அரங்கேறப் போவதில்லை இப்போது வெளியாகி இருக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
1.5 லிட்டர் டிஎன்ஜிஏ அட்கின்சன் சைக்கிள் பெட்ரோல் எஞ்சினே டொயோட்டா அர்பன் க்ரூரஸ் ஹைரைடர் காரில் பயன்படுத்தப்பட்டு இருக்கின்றது. இந்த மோட்டார் அதிகபட்சமாக 101.6 பிஎச்பி பவரையும், 117 என்எம் டார்க்கையும் வெளியேற்றும் திறன் கொண்டது. இந்த மோட்டாருடன் சேர்த்து 5 ஸ்பீடு மேனுவல் அல்லது 6 ஸ்பீடு தானியங்கி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்படுகின்றன.
இந்த கார் மாடலின் ஹைபிரிட் அம்சம் அல்லாத தேர்வு 21.1 கிமீ வரையில் மைலேஜ் தரும் என்பது குறிப்பிடத்தகுந்தது. டொயோட்டா மற்றும் மாருதி சுஸுகியில் கூட்டணியில் உருவாக்கப்பட்டதே இந்த கார் மாடல் ஆகும். இந்த கார் மாருதி பிராண்டின்கீழ் கிராண்ட் விட்டாரா பெயரில் விற்பனைக்குக் கிடைக்கின்றது.
இதன் விலை ரூ. 10.99 என்கிற ஆரம்ப விலையில் இருந்து இந்த கார் மாடல் விற்பனைக்குக் கிடைக்கின்றது. அதேவேளையில், டொயோட்டா அர்பன் க்ரூஸர் ஹைரைடர் 11.14 லட்ச ரூபாய் எனும் ஆரம்ப விலையில் இருந்து விற்பனைக்குக் கிடைக்கின்றது. இரண்டும் எக்ஸ்-ஷோரூம் விலைகள் மட்டுமே ஆகும்.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: இந்த இரண்டு கார்களிலும் (கிராண்ட் விட்டாரா மற்றும் அர்பன் க்ரூஸர் ஹைரைடர்), சிஎன்ஜி, பெட்ரோல், பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் ஆகிய ஆப்ஷன்கள் வழங்கப்படுகின்றன என்பது குறிப்பிட்ததகுந்தது. இதுமாதிரியான பலதரப்பட்ட தேர்வுகளுடன் சேர்த்தே 7 இருக்கைகள் தேர்வையும் விற்பனைக்குக் கொண்டு வரும் பணியில் டொயோட்டா நிறுவனம் களமிறங்கி இருக்கின்றது.


Click it and Unblock the Notifications








