மாருதிக்கு தண்ணி காட்ட போகும் ஸ்கோடா கார்! 6 ஏர்பேக்ஸ், பவர்டு சீட்ஸ் இன்னும் பல இருக்கு!!
ஸ்கோடா ஆட்டோ (Skoda Auto), செக் குடியரசு நாட்டை சேர்ந்த பிரபல கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் கார்கள் மார்க்கெட்டில் ஓர் நிலையான இடத்தை பிடிக்க கடந்த பல வருடங்களாகவே போராடி வருகிறது. கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட குஷாக் கார் இந்தியாவில் ஸ்கோடா நிறுவனத்துக்கு ஓரளவுக்கு பெயர் வாங்கி கொடுத்தது. அந்த வரிசையில், விரைவில் கைலாக் (kylaq) என்கிற புத்தம் புதிய எஸ்யூவி காரை இந்தியாவில் ஸ்கோடா அறிமுகம் செய்ய உள்ளது. விற்பனையில் இந்த காருக்கு போட்டியாக இருக்கும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவில் கிடைக்காத 7 வசதிகள் கைலாக்கில் வழங்கப்பட்டுள்ளன. அவை என்னென்ன என்பதை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்கவுள்ளோம்.
பவர்டு முன் இருக்கைகள் (Powered Front-row Seats): ஸ்கோடா கைலாக் காரில் எலக்ட்ரிக் மூலமாக 6 விதமாக அட்ஜெஸ் செய்யக்கூடிய இருக்கைகள் முன் வரிசையில் வழங்கப்பட்டுள்ளன. பிரெஸ்ஸாவில் மேனுவலாக அட்ஜெஸ்ட் செய்யக்கூடிய இருக்கை தான் வழங்கப்படுகிறது. அதுவும் டிரைவர் இருக்கையை மட்டுமே அவ்வாறு செய்ய முடியும்.

வெண்டிலேட்டட் முன் இருக்கைகள் (Ventilated Front-row Seats): கைலாக்கில் முன் இருக்கை பயணிகள் வெண்டிலேஷன் வசதியையும் பெறலாம். அதாவது, சூடான காலத்தில் குளிர்ந்த காற்றையும், குளிர்காலத்தில் சூடான காற்றையும் இருக்கை வழங்கும். இந்த வெண்டிலேஷன் சீட் வசதி பிரெஸ்ஸாவில் வழங்கப்படுவதில்லை. இன்னும் சொல்லப்போனால், கைலாக் காரிலும் இந்த வசதி விலைமிக்க டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டுள்ளது.
பெரிய இன்ஃபோடெயின்மெண்ட் (Infotainment) திரை: டேஸ்போர்டில் வழங்கப்படும் இன்ஃபோடெயின்மெண்ட் திரையை பொறுத்தவரையில், கைலாக்கில் 10-இன்ச்சிலும், பிரெஸ்ஸாவில் சற்று சிறியதாக 9-இன்ச்சிலும் டச் ஸ்க்ரீன் வழங்கப்படுகிறது. இவை இரண்டுமே ஆப்பிள் கார்ப்ளே & ஆண்ட்ராய்டு ஆட்டோ மற்றும் கனெக்ட்டட் கார் தொழிற்நுட்பத்தை கொண்டுள்ளன.

முழு டிஜிட்டல் இன்ஸ்ட்ரூமெண்ட் க்ளஸ்ட்டர் (Fully Digital Instrument Cluster): கைலாக் காரின் மற்றொரு சிறப்பம்சம் என்னவென்றால், இதில் டிரைவருக்கு தேவையான தகவல்களை வழங்க 8 இன்ச்சில் டிஜிட்டல் தரத்தில் டிஸ்பிளே கொடுக்கப்பட்டுள்ளது. ஆனால், பிரெஸ்ஸாவில் அனலாக் டயல்களும், டிரைவருக்கான விபரங்களை வழங்க சிறிய டிஸ்பிளே மட்டுமே வழங்கப்படுகிறது.
6 ஏர்பேக்குகள் (Airbags): மத்திய அரசாங்கத்தின் வலியுறுத்தலினால், புதிய ஸ்கோடா கைலாக் காரின் அனைத்து வேரியண்ட்களிலும் 6 ஏர்பேக்குகளை பெறலாம். ஆனால், மாருதி சுஸுகி பிரெஸ்ஸாவில் டாப் இசட்.எக்ஸ்.ஐ பிளஸ் வேரியண்ட்டில் மட்டுமே 6 ஏர்பேக்குகள் வழங்கப்படுகின்றன. மற்ற விலை குறைவான வேரியண்ட்களில் 2 ஏர்பேக்குகள் மட்டுமே கொடுக்கப்படுகின்றன. ஆனால், இந்த இரு கார்களிலும் எலக்ட்ரானிக் ஸ்டெபிளிட்டி கண்ட்ரோல் மற்றும் ரியர் பார்க்கிங் சென்சார்கள் போன்றவை கிடைக்கும்.

டயர் பிரஷர் மானிடரிங் சிஸ்டம் (Tyre Pressure Monitoring System): சக்கரங்களின் டயர்களில் உள்ள காற்றழுத்தத்தை ரியல்-டைமில் கண்காணித்து அதுகுறித்த எச்சரிக்கைகளை இந்த சிஸ்டம் வழங்குகிறது. விலையுயர்ந்த கார்களில் வழங்கப்படும் இந்த வசதியை பிரெஸ்ஸாவில் பெற முடியாது. ஸ்கோடா கைலாக் காரிலும் டாப் வேரியண்ட்களில் மட்டுமே வழங்கப்பட்டு உள்ளது.
கார்னரிங் ஹெட்லைட்ஸ் (Cornering Headlights): ஹெட்லைட்கள் உடன் சேர்த்து கார்னரிங் ஹெட்லைட்களின் தேவையும் அதிகரித்து வருகிறது. அடர் இருள் மிகுந்த பகுதிகளில் செல்லும்போது காரை சுற்றிலும் என்ன இருக்கிறது என்பதை தெளிவாக காண கார்னரிங் விளக்குகள் உதவுகின்றன. ஆனால், பிரெஸ்ஸாவில் சிம்பிளான எல்இடி புரோஜெக்டர் ஹெட்லைட்கள் மற்றும் எல்இடி ஃபாக் விளக்குகள் மட்டுமே வழங்கப்படுகின்றன. இந்த இரு கார்களிலும் ஆட்டோமேட்டிக் ஹெட்லைட் ஃபங்க்சன் கொடுக்கப்படுகிறது.
டிரைவ்ஸ்பார்க் கருத்து: விலையை பொறுத்தவரையில், ஏற்கனவே விற்பனையில் இருக்கும் மாருதி சுஸுகி பிரெஸ்ஸா காருக்கும், புதிய ஸ்கோடா கைலாக் காருக்கும் இடையே பெரியதாக எந்த வித்தியாசமும் இருக்காது என கூறப்படுகிறது. இருப்பினும், பிரெஸ்ஸாவை காட்டிலும் கைலாக்கில் மேற்கூறப்பட்ட 7 வசதிகள் கூடுதலாக வழங்கப்பட உள்ளன. ஆனால், நீங்கள் சற்று உற்றுக் கவனித்தீர்கள் என்றால், மேற்கூறப்பட்டுள்ள வசதிகளுள் பெரும்பாலானவை கைலாக் காரின் டாப் வேரியண்ட்களில் வழங்கப்பட உள்ளன.


Click it and Unblock the Notifications









